பிரதமர் அலுவலகம்

காந்தி 150-ஆவது ஆண்டைக் குறிக்கும் வகையில் கலாச்சார வீடியோக்களை பிரதமர் வெளியிட்டார்


திரைப்படத்துறை பிரதிநிதிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்

நாட்டு நிர்மாணப் பணியில் உழைக்குமாறு திரைப்படத் துறையினருக்கு பிரதமர் வேண்டுகோள்

Posted On: 19 OCT 2019 8:25PM by PIB Chennai

புதுதில்லியில் நம்பர் 7, லோக் கல்யாண் மார்க் என்ற முகவரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில், மகாத்மா காந்தியின் 150-ஆவது ஆண்டு பிறந்த நாளைக் குறிக்கும் வகையில், நான்கு கலாச்சார வீடியோக்களை பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டார். 

 

அமீர் கான், ஷாருக்கான், ராஜ்குமார் ஹிரானி,  கங்கனா ரணாவத், ஆனந்த் எல் ராய், எஸ் பி பாலசுப்பிரமணியம், சோனம் கபூர், ஜாக்கி ஷ்ராப், சோனு நிகம், ஏக்தா கபூர் உள்ளிட்ட இந்திய திரைப்படத் துறை பிரதிநிதிகள் மற்றும் தரக் மேத்தா குழுமம், ஈ-டிவி குழுமத்தை சேர்ந்தவர்கள்  இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

 

இடைவிடாத பணிகளுக்கு இடையே தமது அழைப்பை ஏற்று, மகாத்மா காந்திக்கு மரியாதை செலுத்தும் இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் பங்களிப்பாளர்களுக்கு கலந்துரையாடல் அமர்வின் போது பிரதமர் நன்றி தெரிவித்தார். 

 

சாதாரண மக்களை ஊக்குவிக்கும் வகையில், திரைப்படம் மற்றும் கேளிக்கை துறையினர் தங்களது படைப்பாற்றலை ஜனரஞ்சக ரீதியில் பயன்படுத்த வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.  மகத்தான  படைப்பாற்றல் மற்றும் திறமைகளின் மூலம் சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

உலகை இணைக்கும் காந்திய சிந்தனை

 

மகாத்மா காந்தி தற்காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துவதை  சுட்டிக்காட்டிய பிரதமர், ஒரே சிந்தனையுடன் ஒரு மனிதர் உலக மக்கள் அனைவரையும் இணைக்க முடியும் என்றால், அது காந்திஜியாகத்தான் இருக்க முடியும் என்றார்.

 

தம்மால் முன்மொழியப்பட்ட ஐன்ஸ்டீன் சவாலை சுட்டிக்காட்டிய பிரதமர், திரைப்படத் துறையினர் தங்களது அற்புதமான தொழில்நுட்ப உதவியுடன் காந்திய சிந்தனையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 

இந்திய திரைப்படத் துறையின் வளமும், தாக்கமும்

 

மாமல்லபுரத்தில் சீன அதிபருடன் தாம் நடத்திய கலந்துரையாடலை நினைவுகூர்ந்த பிரதமர், சீனாவில் தங்கல் போன்ற இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு உள்ளதாக அதிபர் குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டினார்.   தென்கிழக்கு ஆசியாவில் ராமாயணம் புகழ்பெற்றுள்ளதை பிரதமர் குறிப்பிட்டார். 

 

இந்தியாவில் சுற்றுலாவை மேம்படுத்த தங்களது ஆற்றலையும், வளத்தையும் திரைப்படத் துறையினர் பயன்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டார். 

 

எதிர்காலத் திட்டம்

 

இந்தியா தனது 75 ஆவது ஆண்டு சுதந்திர தினத்தை 2022 ஆம் ஆண்டில் கொண்டாடவிருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.  1857-லிலிருந்து 1947 வரையிலான இந்தியாவின் சுதந்திரப் போராட்டம், 1947-லிலிருந்து 2022 வரையிலான வளர்ச்சி ஆகியவைக் குறித்த எழுச்சி ஏற்படுத்தும் கதைகளைக் காட்சிப்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.  இந்தியாவில் வருடாந்திர சர்வதேச திரைப்பட உச்சிமாநாட்டை நடத்த திட்டமிட்டிருப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

 

பிரதமரைப் பாராட்டிய திரைப்பட நட்சத்திரங்கள்

 

பிரதமருடனான கலந்துரையாடல் அமர்வின் போது, உலகத்திற்கு மகாத்மா காந்தி தெரிவித்தக் கருத்துக்களைப் பிரச்சாரப்படுத்த வேண்டும் என்ற  யோசனையைச் செயல்படுத்தியதற்காக பிரதமருக்கு நடிகர் அமீர்கான் நன்றி தெரிவித்தார். 

 

இன்று வெளியிடப்பட்ட வீடியோ, “அதற்குள் மாற்றம்” என்ற கருப்பொருளை அடிப்படையாக கொண்டு வெளியாகவிருக்கும் பலவற்றுக்கு முன்னோடியாக இருக்கும் என்று பிரபல திரைப்பட இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி தெரிவித்தார்.   பிரதமரின் உறுதியான ஊக்குவிப்பு வழிகாட்டுதல் மற்றும் ஆதரவுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

 

திரையுலகத்தைச்  சேர்ந்த அனைத்து பிரமுகர்களையும் ஒன்று சேர்த்து ஒரு பொதுவான நல்ல விஷயத்திற்காக உழைக்க தளம் ஏற்படுத்திக்கொடுத்ததற்காக பிரதமருக்கு நன்றி கூறிய நடிகர் ஷாருக்கான், காந்தி 2.0-வை உலகத்திற்கு அளிப்பதன் மூலம்  இத்தகைய முன்முயற்சிகள், மகாத்மா காந்தியின் போதனைகளை மீண்டும் அறிமுகப்படுத்த உதவும் என்று கூறினார்.

 

நாட்டைக் கட்டமைப்பதில், திரைப்படத் துறைக்கு  ஆற்றல் இருப்பதை உணரவைத்ததற்காக பிரதமருக்கு பிரபல திரைப்பட இயக்குநர் ஆனந்த் எல் ராய் நன்றி தெரிவித்தார்.

 

திரைப்படத் துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு தமது அரசு அனைத்து உதவிகளையும் வழங்கும் என்று பிரதமர் உறுதியளித்தார். 

 

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையிலான கருத்தியல் வீடியோக்களை ராஜ்குமார் ஹிரானி, ஈ-டிவி குழுமம், தரக் மேத்தா குழுமம், மத்திய அரசின் கலாச்சார அமைச்சகம் இணைந்து உருவாக்கியுள்ளனர்.

*************



(Release ID: 1588623) Visitor Counter : 205