பிரதமர் அலுவலகம்

துவாரகா டிடிஏ மைதானத்தில் நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 08 OCT 2019 6:37PM by PIB Chennai

புதுதில்லி துவாரகா பகுதியில் உள்ள டிடிஏ மைதானத்தில் இன்று (08.10.2019) நடைபெற்ற தசரா கொண்டாட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டார். விஜயதசமியை ஒட்டி, நாட்டு மக்களுக்கு பிரதமர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

     நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியா ஒரு திருவிழாக்களின் பூமி என்றார். நமது வலிமையான கலாச்சாரத்தால், இந்தியாவின் சில பகுதிகளில் எப்போதும் ஏதாவது ஒரு நிகழ்ச்சி அல்லது திருவிழா நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்தியத் திருவிழாக்கள் மூலம், இந்திய கலாச்சாரத்தின் சாராம்சங்களை நாம் கொண்டாடி வருகிறோம்.  இதன்மூலம் பல்வேறு விதமான கலை, இசை, பாடல்கள் மற்றும் நடனத்தை நாம் அறிந்து கொள்ள முடிகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

     இந்தியா பெண்களைப் போற்றும் பூமி என்றும் அவர் தெரிவித்தார். கடந்த ஒன்பது நாட்களாக நாம் அன்னையை வணங்கினோம். அதே உணர்வை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லுமாறு தெரிவித்துள்ள அவர், பெண்களுக்கு மேலும் கண்ணியம் மற்றும் அதிகாரமளிக்க பாடுபடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

     தமது மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய போது, வீடுகளில் உள்ள லஷ்மி குறித்து சுட்டிக்காட்டியதை நினைவுகூர்ந்த பிரதமர், வரவிருக்கும் தீபாவளியின் போது நமது பெண்களின் சாதனையை கொண்டாடுமாறும் கேட்டுக் கொண்டார். விஜயதசமி தினமான இன்று விமானப்படை தினமும் கொண்டாடப்படுவதாக அவர் குறிப்பிட்டார். நமது விமானப்படையினரின் திறமையால் இந்தியா பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

     மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில், இந்த விஜயதசமி தினத்தில் பிரதமர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.  இந்த ஆண்டு நாட்டு மக்கள் அனைவரும் ஒரு இயக்கத்தை கடைபிடித்து அதனை முழுமையாக நிறைவேற்றி முடிக்குமாறும் கேட்டுக் கொண்டார். அந்த இயக்கம், உணவுப் பொருட்களை வீணடிக்காமல் இருப்பது, எரிசக்தி சிக்கனம்,  தண்ணீர் சேமிப்பாக இருக்கட்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கூட்டு உணர்வின் வலிமையை அறிந்துகொள்ள நாம் விரும்பினால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணா மற்றும் பகவான் ஸ்ரீ ராம் ஆகியோரின் உத்வேகத்தை நாம் பெற வேண்டும் என்றும் தெரிவித்தார்.

துவாரகா ஸ்ரீ ராம் லீலா அமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ராம் லீலா நிகழ்ச்சியையும் பிரதமர் பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது, தீமையை நன்மை வெல்வதைக் குறிக்கும் வகையில், ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதனின் பிரம்மாண்ட உருவ பொம்மைகள் எரிக்கப்படுவதையும் அவர் பார்வையிட்டார்.

ஒவ்வொரு திருவிழாவும் நமது சமுதாயத்தை ஒருங்கிணைக்கிறது.

 

*****

 



(Release ID: 1587470) Visitor Counter : 192