பிரதமர் அலுவலகம்
பிரதமரின் முதன்மைச் செயலாளராக டாக்டர் பி கே மிஸ்ரா பொறுப்பேற்றார்
Posted On:
11 SEP 2019 1:32PM by PIB Chennai
டாக்டர் பிரமோத் குமார் மிஸ்ரா, பிரதமரின் முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பிரமோத் குமார் மிஸ்ரா
வேளாண்மை, பேரிடர் நிர்வாகம், மின்சாரத்துறை, அடிப்படைக் கட்டமைப்பு, நிதி, ஒழுங்குமுறை விஷயங்கள் தொடர்பான திட்டங்களின் நிர்வாக அனுபவம் கொண்டவர் டாக்டர் மிஸ்ரா. மேலும் ஆராய்ச்சி, வெளியீடுகள், கொள்கை உருவாக்கம், திட்டமிடல் / திட்ட நிர்வாகம் போன்றவற்றில் மிகச் சிறந்த பங்களிப்பு செய்திருப்பவர். கொள்கை உருவாக்கம் மற்றும் நிர்வாகத்தில் விரிவான அனுபவம் கொண்டுள்ள அவர், பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளர், மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளர், மாநில மின்சாரத்துறை ஒழுங்குமுறை ஆணையத்தலைவர், பேரிடர் நிர்வாகத்துறை போன்ற முக்கியப் பொறுப்புகளை அவர் கையாண்டுள்ளார். வேளாண்மை மற்றும் கூட்டுறவுத்துறை செயலாளராக இருந்தபோது, தேசிய வேளாண் மேம்பாட்டுத்திட்டம், தேசிய உணவுப் பாதுகாப்பு இயக்கம் போன்ற தேசிய முன்முயற்சி புதுமைப் பணிகளில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டவர்.
2014-19 காலத்தில் பிரதமரின் கூடுதல் முதன்மைச் செயலாளராக இருந்தபோது, மனிதவள நிர்வாகத்தில் குறிப்பாக உயர்நிலைப் பதவிகளுக்கான நியமனங்களில், புதுமையான, வெளிப்படைத்தன்மையான மாற்றங்களை அறிமுகம் செய்த பெருமை டாக்டர் மிஸ்ராவைச் சாரும்.
பிரிட்டனில் உள்ள வளர்ச்சி ஆய்வுகளுக்கான கல்விக் கழகத்தில் 4 ஆண்டுகளுக்குமேல் ஆராய்ச்சி மற்றும் கல்விப்பணி, ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கித் திட்டங்கள் செயல்படுத்துதல், செமி ஆரிட் ட்ராபிக்ஸ் தொடர்பான சர்வதேச பயிர் ஆராய்ச்சி, கல்விக் கழகத்தின் நிர்வாக வாரிய உறுப்பினர், சர்வதேச கருத்தரங்குகள் பலவற்றில் நிபுணராகவும் / வளநபராகவும் பங்கேற்பு உள்ளிட்ட சர்வதேச அனுபவங்களை அவர் கொண்டுள்ளார்.
பேரிடர் நிர்வாகத்தில், சர்வதேச ரீதியில் மிகவும் கவுரவத்திற்குரிய ஐநா-வின் சசகாவா விருது 2019, அண்மையில் அவருக்கு வழங்கப்பட்டது.
சசேக்ஸ் பல்கலைக்கழகத்திலிருந்து பொருளாதாரம் / வளர்ச்சி ஆய்வுகளில் முனைவர் பட்டமும், சசேக்ஸ் பல்கலைக்கழகத்தில் வளர்ச்சிப் பொருளாதாரத்துறையில், எம்.ஏ. பட்டமும், பொருளாதாரத்திற்கான தில்லிப் பள்ளியில் முதல் வகுப்புடன், பொருளாதாரத்தில் எம்.ஏ. பட்டமும், 1970-ல் (சம்பல்பூர் பல்கலைக்கழகம்) ஜிஎம் கல்லூரியிலிருந்து பொருளாதாரத்தில் முதல் வகுப்பு மற்றும் பிற பாடங்களில் டிஸ்டிங்ஷனுடன் பி.ஏ. ஹானர்ஸ் (பொருளாதாரம்) ஆகிய பட்டங்களை டாக்டர் மிஸ்ரா பெற்றுள்ளார். இவர் ஒருவர் மட்டுமே ஒடிசாவின் அனைத்துப் பல்கலைக்கழகங்களிடையே, பொருளாதாரத்தில் முதல் வகுப்பில் தேர்ச்சிப் பெற்றவர் ஆவார்.
அவரது வெளியீடுகளில் சில
- கட்ச், நிலநடுக்கம் 2001: நினைவுகூரத்தக்க பாடங்களும், படிப்பினைகளும், தேசிய பேரிடர் மேலாண்மை, கல்விக்கழகம், புதுதில்லி, இந்தியா (2004)
- வேளாண் துறை சிக்கல், காப்பீடு மற்றும் வருவாய் : இந்தியாவின் விரிவான பயிர்க்காப்பீட்டுத் திட்ட வடிவமைப்பு மற்றும் தாக்கம் குறித்த ஆய்வு, ஆவ்பரி, ஆல்டெர்ஷாட், யுகே (1996).
- தொகுப்பு: ஆசியாவில் வேளாண் காப்பீட்டுத் திட்டங்களின் வளர்ச்சியும் செயல்பாடும், ஆசிய உற்பத்தித் திறன் அமைப்பு, டோக்கியோ, ஜப்பான் (1999).
பல சர்வதேச பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் மற்றும் ஆய்வுகளிலும் அவர் பங்களிப்பு செய்திருக்கிறார்.
(Release ID: 1584765)
Visitor Counter : 265