விண்வெளித்துறை
சந்திரயான் – 2 திட்டமிட்ட சந்திரனின் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது : இஸ்ரோ தலைவர்
சந்திரயான் – 2ஐ செப்டம்பர் 7-ந்தேதி அதிகாலை 1.55 மணிக்கு தரையிறக்க இஸ்ரோ முயற்சி : டாக்டர்.கே.சிவன்
Posted On:
20 AUG 2019 3:58PM by PIB Chennai
சந்திரனை ஆராய்வதற்கான இந்தியாவின் 2வது விண்கலமான சந்திரயான் – 2, அதன் திட்டமிடப்பட்ட சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது. இன்று (20.08.2019) காலை மணி 09.02க்கு சந்திரனின் சுற்றுவட்டப்பாதையை சென்றடைந்தது.


சந்திரயான் – 2 விண்கலம் சந்திரனின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்ட பிறகு பெங்களூருவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய விண்வெளி ஆய்வுக் கழக (இஸ்ரோ) தலைவர் டாக்டர். கே. சிவன் இதனைத் தெரிவித்தார். இதன் மூலம் சந்திரயான் – 2 முக்கிய கட்டத்தை தாண்டியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செப்டம்பர் 7-ந் தேதி அதிகாலை 1.55 மணிக்கு விண்கலத்தை சந்திரனில் வெற்றிகரமாக தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக டாக்டர் சிவன் கூறினார். இந்த விண்கலம் சந்திரனின் தென் துருவத்தில் மென்மையாக தரையிறக்கப்படும். அடுத்த முக்கிய நிகழ்வாக, செப்டம்பர் 2-ந் தேதி லேண்டர் எந்திரம், ஆர்பிட்டர் எந்திரத்திலிருந்து பிரிந்து செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டார். சந்திரனில் தரையிறங்கும் முயற்சியில் இஸ்ரோ மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளதாகவும் அதன் தலைவர் தெரிவித்தார். சந்திரனில் விண்கலம் தரையிறங்குவதற்கான ஏராளமான முன்முயற்சிகளை இஸ்ரோ மேற்கொண்டுள்ளது. சந்திரயான் – 2 விண்கலம் மேலும் 4 முறை நிலை உயர்த்தப்படவுள்ளது. முதலாவது உயர்வு நாளையும், அடுத்த கட்ட உயர்வுகள் ஆகஸ்ட் 28, 30 மற்றும் செப்டம்பர் 1-ந் தேதியும் மேற்கொள்ளப்படவுள்ளது.
2008ஆம் ஆண்டு . சந்திரயான் – 1 விண்கலம் செலுத்தப்பட்டப்பிறகு, சந்திரனை ஆராய இஸ்ரோ அனுப்பும் 2-வது விண்கலம் இதுவாகும். சந்திரயான் - 2 கடந்த ஜூலை 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம் ஆர்பிட்டர், “விக்ரம்” லேண்டர் மற்றும் “பிரக்யான்” ரோவர் எந்திரங்களை சுமந்து சென்றுள்ளது.
*****
(Release ID: 1582455)
Visitor Counter : 253