பிரதமர் அலுவலகம்

புலி கணக்கெடுப்பு அறிக்கை 2018’ வெளியீட்டின்போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

Posted On: 29 JUL 2019 1:30PM by PIB Chennai

எனது அமைச்சரவை சகாக்கள் திரு. பிரகாஷ் ஜவடேகர் அவர்களே, திரு.பாபுல் சுப்ரியோ அவர்களே மற்றும் வருகை தந்திருக்கும் உயர் பிரமுகர்களே, அனைவருக்கும்  உலகளாவிய புலி நாளில் முதற்கண் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

இந்த வருடத்தில் உலகளாவிய புலி நாள், இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனையின் காரணமாக மேலும் சிறப்பானதாகும். இந்த சாதனைக்காக நான் உங்கள் அனைவருக்கும், உலகெங்கிலும் உள்ள வன விலங்கு அன்பர்களுக்கும், இந்த முனைப்பு இயக்கத்தோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொரு அதிகாரிக்கும், ஒவ்வொரு ஊழியருக்கும், குறிப்பாக, வனப்பகுதிகளில் வாழும் நமது மலைவாழ் சகோதர, சகோதரிகளுக்கும் எனது பாராட்டைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

நண்பர்களே,

 

இன்று உலகளாவிய புலி நாளில் புலியை பாதுகாப்பதில் நமக்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புலி கணக்கெடுப்பின் முடிவுகள், ஒவ்வொரு இந்தியனையும், ஒவ்வொரு இயற்கை அன்பரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்குகிறது. ஒன்பது நீண்ட ஆண்டுகளுக்கு முன்பு, புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்குவதற்கு 2022-ஆம் ஆண்டு இலக்காக இருக்க வேண்டும் என்று செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் முடிவு செய்யப்பட்டது. இந்தியாவில் உள்ள நாம், இந்த இலக்கை நான்கு வருடங்களுக்கு முன்பாகவே முடித்திருக்கிறோம். இதை சாதிப்பதற்கு சம்பந்தப்பட்ட பலர் வேகத்தோடும், அர்ப்பணிப்போடும், பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். “சங்கல்ப்-ஸே-சித்தி” அதாவது உறுதிபாட்டின் மூலமாக சாதனை என்பதற்கு  இது மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்றாகும். இந்திய மக்கள் எதையாவது செய்ய ஒரு முறை முடிவெடுத்துவிட்டால், அதற்குரிய பலனை பெறுவதில் அவர்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

 

நண்பர்களே, 14-15 ஆண்டுகளுக்கு முன்பு நாட்டில் 1,500 புலிகள் மட்டுமே இருக்கின்றன என்ற புள்ளி விவரம் வெளியிடப்பட்டபோது அது மிகப்பெரிய விவாதத்திற்கும், கவலைக்கும் காரணமாக இருந்தது என்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். புலி திட்டத்தோடு சம்பந்தப்பட்ட அனைவருக்கும் இது ஒரு பெரிய சவாலாக இருந்தது. மக்கள் தொகையோடு புலிகளை சமநிலையில் வைப்பதற்குரிய சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது நமது முன் இருந்த சவால். ஆனால், இந்த முனைப்பு இயக்கம் உணர்வோடும், நவீன தொழில்நுட்பத்தோடும் முன்னெடுத்துச் செல்லப்பட்ட முறை மிகுந்த பாராட்டுக்குரியது.

 

இன்று 3,000 புலிகளுக்கான உலகின் மிகப்பெரிய பாதுகாப்பான இடமாக இந்தியா உள்ளது என்று நாம் பெருமையாக கூறிக்கொள்ளலாம்.

 

வனவிலங்குகளுக்கான சுற்றுச்சூழலை மேம்படுத்துவதற்கான இயக்கம் புலிகளோடு மட்டும் நின்றுவிடவில்லை என்று இங்குள்ள நீங்கள் அனைவருமே அறிவீர்கள். குஜராத்தின் கிர் காடுகளில் ஆசிய சிங்கம் மற்றும் பனிச் சிறுத்தைகளுக்கான பாதுகாப்பு திட்டம் அதிரடி வேகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. உண்மையில், கிர் காடுகளில் நடைபெறும் பணியின் நேர்மறை பலன்கள் தெளிவாகத் தெரிகின்றன. அங்கு புலிகளின் எண்ணிக்கை 27 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சிறந்த பழக்கங்களின் பயன்களை, புலி களத்தைக்கொண்ட இதர நட்பு நாடுகளும் வரவேற்கின்றன என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

 

இன்று சீனா மற்றும் ரஷ்யா உட்பட 5 நாடுகளோடு தேசிய புலி பாதுகாப்பு ஆணையம் ஒப்பந்தத்தை எட்டியுள்ளது. விரைவில் இதர நாடுகளுடனான ஒப்பந்தங்கள் முடிவு செய்யப்படும். சிறுத்தை பாதுகாப்புக்கென கவுதமாலா அரசு தொழில்நுட்ப உதவியை நம்மிடம் நாடியுள்ளது. புலி என்பது இந்தியாவில் மட்டும் அல்லாமல் பல நாடுகளிலும் நம்பிக்கையின் சின்னமாக விளங்குகிறது என்பது சுவாரஸ்யமாகும். இந்தியாவைத் தவிர மலேசியா மற்றும் பங்களாதேஷ் புலியை தங்களது தேசிய விலங்காகக் கொண்டிருக்கின்றன. சீன கலாச்சாரத்தில் புலி வருடம் கொண்டாடப்படுகிறது. அப்படியானால், புலி சார்ந்த எந்த முன்முயற்சியும் பல நாடுகளில், பல வழிகளில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

 

நண்பர்களே,

 

மனிதர்களுக்கு அதிகாரம் அளித்தல் என்பது, மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் இல்லாமல் முழுமை பெறாது. எனவே, ஒன்றை மட்டும் தேர்வு செய்வதை விட, கூட்டாக செல்லும் பாதையே சிறந்தது.  சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு குறித்து நமக்கு விரிவான அடிப்படையிலான முழுமையான பார்வை தேவைப்படுகிறது.

 

பல செடிகளுக்கும், உயிரினங்களுக்கும் நமது உதவி தேவைப்படுகிறது. நமது புவி மண்டலத்தின் அழகிற்கும், பன்முகத்தன்மைக்கும் புத்துயிர் தரும் வகையில், தொழில்நுட்பம் அல்லது மனித முயற்சியின் மூலமாகவோ, அவைகளுக்கு நம்மால் என்ன செய்ய முடியும்?. மேலும், வளர்ச்சியா, அல்லது சுற்றுச்சூழலா என்ற மிகப்பழமையான விவாதம் உள்ளது. இவை இரண்டும் தனிப்பட்டவை என்பது போன்று இருதரப்பினரும் கருத்துக்களை முன் வைக்கின்றனர்.

 

நாம், உடனிருப்பை ஏற்றுக் கொள்வதோடு, ஒன்றாக பயணிப்பதன் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள வேண்டும். இது சாத்தியம் என்றே நான் நினைக்கிறேன். நமது நாட்டில் உடனிருப்பு பல்லாயிரமாண்டுகளாக நமக்கு கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. நமது முன்னோர்கள் கடவுளை கற்பனை செய்து அதை உடனிருப்பின் எடுத்துக்காட்டாகக் கண்டனர். இது சாவன் மாதத்தின் ஒரு திங்கட்கிழமையாகும். சிவனின் கழுத்தில் ஒரு பாம்பு தொங்குகிறது, அதே நேரத்தில், அதே குடும்பத்தைச் சேர்ந்த கணேசனின் வாகனமாக ஒரு எலி இருக்கிறது. பாம்பு எலியை உண்கிறது, ஆனால், சிவபெருமான் தனது குடும்பத்தில் உடனிருப்பின் தகவலை வெளிப்படுத்துகிறார். இங்கு, கடவுள்களும், பெண் கடவுள்களும், விலங்குகள். பறவைகள் மற்றும் செடிகளோடு சம்பந்தப்பட்டுள்ளனர்.

 

நமது கொள்கைகளிலும், பொருளாதாரத்திலும், பாதுகாப்பு பற்றிய கலந்துரையாடலை நாம் மாற்ற வேண்டும். நாம் சாமர்த்தியமாகவும் உணர்வோடும் இருந்து, சுற்றுப்புறச்சூழல்  நீட்டிப்பிற்கும் பொருளாதார வளர்ச்சிக்குமிடையேயான ஆரோக்கியமான சமநிலையை உருவாக்க வேண்டும்.

 

இந்தியா பொருளாதாரத்திலும், சுற்றுப்புறச்சூழலிலும் வளம் பெறும். இந்தியா மேலும் சாலைகளை அமைக்கும் என்பதோடு, தூய்மையான நதிகளையும் கொண்டிருக்கும். இந்தியா மேம்பட்ட ரயில் இணைப்பைக் கொண்டிருப்பதோடு, மரங்களையும் அதிகமாகக் கொண்டிருக்கும். இந்தியா நமது குடிமக்களுக்காக இன்னும் அதிகமான குடியிருப்புக்களை நிர்மாணிக்கும். அதே நேரத்தில், உயிரினங்களுக்கும் தரமான வாழ்விடங்களை உருவாக்கும். இந்தியா துடிப்பான கடல்சார் பொருளாதாரம் மற்றும் ஆரோக்கியமான கடல்சார் சுற்றுச்சூழலைக் கொண்டிருக்கும்.  இந்த சமநிலையே, வலுவான அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவிற்கு பங்களிக்கும்.

 

நண்பர்களே,

 

கடந்த ஐந்தாண்டுகளாக, ஒரு புறத்தில் அடுத்த தலைமுறை உள்கட்டமைப்பிற்கு நாடு அதிரடியாகப் பணியாற்றுகிறது. மற்றொரு புறத்தில் காடுகளின் பரப்பளவும், இந்தியாவில் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. கூடுதலாக, நாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2014-ஆம் ஆண்டில், இந்தியாவில் 692ஆக இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 2019-ஆம் ஆண்டில், தற்போது, 860-ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், சமுதாய காடுகள் 2014-ஆம் ஆண்டில் 43-ஆக இருந்து தற்போது சுமார் 100-ஆக உள்ளன.

 

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் புலிகளின் எண்ணிக்கை கூடியிருப்பது வெறும் புள்ளி விவரம் அல்ல. இது சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்புக்கான வழிமுறைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ரான்தம்போரில் உள்ள மிகப்பிரபலமான பெண் புலியான “மச்சிலி”யை காண்பதற்கு உள்நாட்டிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் வந்ததை நான் எங்கோ படித்திருக்கிறேன். எனவே, புலிகளைப் பாதுகாப்பதன் மூலமாக, நீடித்த சுற்றுச்சூழல், மற்றும் சுற்றுலா உள்கட்டமைப்பை உருவாக்குவதில் நாம் கவனம் செலுத்துகிறோம்.

 

நண்பர்களே,

 

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்க இந்தியா எடுத்த அனைத்து முயற்சிகளின் காரணமாக நாம் பருவநிலை நடவடிக்கைகளில் உலக அளவில் முன்னிலையில் இருக்கிறோம். 2020-க்கு முன்பாகவே, இந்தியா ஒட்டுமொத்த உற்பத்தியின், வெளியேற்ற தீவிரத்தின் இலக்கை எட்டியுள்ளது. தூய்மையான எரிசக்தி மற்றும் புதுப்பிக்கக்கூடிய எரிசக்தியின் அடிப்படையிலான பொருளாதாரத்தைக் கொண்ட முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது. நாம் கழிவு மற்றும் உயிரி நிறை ஆகியவற்றை நமது எரிசக்தி பாதுகாப்பின் முக்கிய கூறாக ஆக்கி வருகிறோம்.

 

மேலும், மின்சார இயக்கத்தின் பணி, உயிரி எரிக்தி மற்றும் நவீன நகரம் ஆகியவை  சுற்றுப்புறச்சூழலுக்கு பயன்தரக்கூடியவை. அதே நேரத்தில், சர்வதேச சூரிய சக்தி கூட்டணியின் மூலமாக, சூரிய சக்தியோடு உலகில் பல நாடுகள் இணைவதில் நாம் முக்கிய பங்காற்றுகிறோம். தற்போது நம் இலக்காக இருக்க வேண்டியது: ஒரு உலகம், ஒரு சூரியன், ஒரு கட்டம்.

 

உஜ்வாலா மற்றும் உஜாலா திட்டங்களினால் நாட்டின் அன்றாட வாழ்க்கை எளிதாவதோடு, சுற்றுப்புறச்சூழலுக்கும் பயனளிக்கிறது. நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திற்கும், சமையல் எரிவாயு இணைப்பு வழங்குவதால், மரங்கள் வெட்டப்படாமல் பாதுகாக்கப்படுவதில் நாம் வெற்றிபெற்று இருக்கிறோம். ஒவ்வொரு வீட்டிலும், ஒவ்வொரு கட்டிடத்திலும், ஒவ்வொரு சாலையிலும், எல்இடி மின்விளக்குகள் பொருத்தப்படும் இயக்கத்தினால், மின்சாரம் சேமிக்கப்படுவதோடு, கரியமில வெளியேற்றமும் குறைக்கப்படுகிறது. நடுத்தர குடும்பங்களின் மின்சாரக் கட்டணங்களும் குறைகின்றன. அவர்கள் நிதி சார்ந்த பயன்பெறுகிறார்கள்.

 

நண்பர்களே,

 

இன்று, உலகத்தின் மீதான அக்கறையோடு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா அங்கீகரிக்கப்படுகிறது. வறுமை ஒழிப்பு மற்றும் நீடிக்கத்தக்க வளர்ச்சி இலக்குகளை எட்டுவதில் இந்தியா முன்னணி வகிக்கும் என்பதில் நான் நம்பிக்கையோடு இருக்கிறேன். இதுபோன்ற முயற்சிகளின் காரணமாக இன்று உலக நாடுகளின் நலனுக்கென நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்படுத்தும் நாடுகளில் ஒன்றாக இந்தியா அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது.

 

நாம் எண்ணிக்கையைக்  கொண்டாடும் இந்த நாளில், இந்த கம்பீரமான விலங்குகள், குறைந்து வரும் வாழ்விடங்கள், சட்டவிரோதமான வர்த்தகம், கடத்தல் ஆகிய கொடிய சவால்களை சந்தித்து வருகின்றன என்பதை நாம் உணரவேண்டும். விலங்குகளின் பாதுகாப்பிற்கென எந்த முயற்சியும் மேற்கொள்வதற்கு இந்தியா உறுதியாக உள்ளது.

 

ஆசியாவில், வேட்டையாடுவதையும், சட்டவிரோத வர்த்தகத்தில் ஈடுபடுவதையும் உறுதியோடு கட்டுப்படுத்த, புலி களத்தைக் கொண்ட நாடுகளின் தலைவர்களை உலகளாவிய தலைவர்களின் கூட்டணியில் ஒன்று சேர நான் கோரிக்கை விடுக்கிறேன். உலக புலி நாளில், நான் மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன்.

 

பசுமையான, நிலையான சுற்றுச்சூழலைக் கொண்ட நாட்டை உருவாக்க நாம் உறுதிகொள்வோம். புலி நிலைத்தன்மையின் சின்னமாக இருக்கட்டும்.

 

“ஏக் தா டைகர்” தொடங்கி, “டைகர் ஜின்தா ஹை”யில் முடிந்த கதை இங்கு நின்றுவிடக்கூடாது. முன்னர், திரை உலகைச் சேர்ந்தவர்கள், “பாகோமே பாஹர்ஹை” அதாவது தோட்டங்களில் வசந்தம் காலம் உள்ளது என்பார்கள் ; இப்போது சுப்ரியோ அவர்கள், “பாகோமே பாஹர்ஹை” புலிகளில் வசந்தம் காலம் உள்ளது என்று பாடுவார்.

 

புலிகளின் பாதுகாப்பிற்கான முயற்சிகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டு, விரைவாக்கப்படவேண்டும்.

 

இந்த நம்பிக்கையோடு, இதே உறுதியோடு, நான் உங்களை மீண்டும் பாராட்டுகிறேன். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்! நன்றி.

 

                                ******



(Release ID: 1581274) Visitor Counter : 235