பாதுகாப்பு அமைச்சகம்

இந்திய கடற்படையில் மாலுமி வேலைக்கு ஆள் சேர்ப்பு

Posted On: 23 JUL 2019 12:02PM by PIB Chennai

கடற்படையில் மாலுமிகள் பதவிக்கு ஆள் சேர்க்க இந்திய கடற்படை நுழைவுத்தேர்வு (INET) என்ற பெயரில், செப்டம்பர் 2019-ல், கணினி வழி தேர்வு ஒன்றை இந்திய கடற்படை நடத்தவுள்ளது. 1 ஏப்ரல் 2000 முதல் 31 மார்ச் 2003 வரை (இரு தேதிகளும் உட்பட)  பிறந்த திருமணம் ஆகாத ஆண்கள், இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள் ஆவார்கள். விண்ணப்பதாரர்கள் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மெட்ரிகுலேட் மாலுமிகள்  என்று அழைக்கப்படும் இவர்கள், கடற்படையில் சமையல்காரர், உபசரிப்பு மற்றும் சுகாதாரப் பணிகளில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

www.joinindiannavy.gov.in. என்ற இணையதளம் மூலமாக அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்த இணையதளம் தவிர விண்ணப்பப் பதிவுக்கு வேறு எந்த இணையதளமோ அல்லது செயலியோ கிடையாது. எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த இணையதளத்தில் தங்களது பயனாளர் கணக்கை தொடங்கி, அதன் பிறகு மின்னஞ்சலில் வரக்கூடிய தகவலின் அடிப்படையில், விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்த பிறகு, விண்ணப்பதாரர்கள் தங்களது சுய விவரங்கள், கல்வித்தகுதி மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள்  தாங்கள் பதிவு செய்யும் விவரங்களுக்கு ஆதாரமாக உரிய ஆவணங்களையும் தங்களது கணக்குகளில் பதிவேற்றம் செய்ய வேண்டும். இணையதளத்தில் முன்கூட்டியே பதிவு செய்து வைத்த விண்ணப்பதாரர்கள், இணையதள விண்ணப்பப் பதிவு தொடங்கும்போது ஏற்படும் நெரிசலில் சிக்காமல் விரைவாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள், அடுத்த கட்டமாக உடல்தகுதி மற்றும் மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, அதன்பின், பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு, ஒடிசாவில் உள்ள ஐஎன்எஸ் சில்க்கா பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அழைக்கப்படுவார்கள்.  இந்தப் பயிற்சி 2020 ஏப்ரல் மாதம் தொடங்கும். உடல் தகுதி மற்றும் மருத்துவ தகுதி உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ள www.joinindiannavy.gov.in. என்ற இணையதளத்தைக் காணவும்.

விண்ணப்பதாரர்கள் பொது சேவை மையங்களையும் அணுகி, விண்ணப்பங்களை பூர்த்தி செய்யலாம். இதற்கு கட்டணமாக ரூ.60 மற்றும் அதற்குரிய ஜி.எஸ்.டி. வரியை செலுத்தி இந்த சேவையை பெறலாம். விண்ணப்பங்கள் இணையதளத்தில் சமர்ப்பிக்கப்படும்போது, ஆன்லைன் முறையிலேயே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும்.

 

***



(Release ID: 1579928) Visitor Counter : 193