நிதி அமைச்சகம்

உலகின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி விரிவாக்கத் திட்டங்களில் ஒன்றை இந்தியா மேற்கொண்டுள்ளது

Posted On: 04 JUL 2019 12:20PM by PIB Chennai

மத்திய நிதி மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் 2018-19 பொருளாதார ஆய்வறிக்கையைத் தாக்கல் செய்தார். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் தேசிய ஆதாரங்களில் முக்கியமாக உள்ளது என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன், “இந்த வளஆதாரங்களைப் பயன்படுத்துவது, சமூக சமத்துவம் மற்றும் எரிசக்தி பாதுகாப்புடன் கூடிய எரிசக்தி மாற்றம், வலுவான பொருளாதாரம் மற்றும் பருவகால மாற்றத்தைக் குறைத்தல் ஆகியவற்றை அடைவதற்கான இந்தியாவின் தொலைநோக்கு பார்வையின் ஒரு பகுதியாக உள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி பெறுவதற்கான அணுகலை உயர்த்துவது முக்கியமானது என்றாலும், வரலாற்றில் முன்னேறிய பொருளாதாரங்களில் நிகழ்ந்ததைக் காட்டிலும், சுற்றுச்சூழலில் இது மிகுந்த குறைந்த செலவில் வருவது மிகவும் முக்கியமானதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப் பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களில் ஒன்றை இந்தியா மேற்கொண்டு வருகிறது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இந்திய மின்சார கலப்பில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கு கணிசமாக உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார ஆய்வின்படி, மொத்த எரிசக்தி உற்பத்தியில், 2014-15ம் ஆண்டு 6 சதவீதமாக இருந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பங்கானாது (25 மெகாவாட் மேலான நீர் சக்தியை தவிர்த்து), 2018-19ம் ஆண்டு 10 சதவீதமாக உயர்ந்துள்ளது. “தற்போது, உலகளவில், இந்தியா, காற்று எரிசக்தியில் 4வது இடத்திலும், சூரிய எரிசக்தியில் 5வது இடத்திலும் மற்றும் ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவப்பட்ட திறனில் 5வது இடத்திலும் உள்ளது. 2014, மார்ச், 31 அன்று 35 ஜிகா வாட்டாக இருந்த ஒட்டுமொத்த புதுப்பிக்கத்தக்க  எரிசக்தி நிறுவப்பட்ட திறனானது, 2019, மார்ச், 31 அன்று 78 ஜிகா வாட்டாக இருமடங்குக்கும் மேலாக உயர்ந்துள்ளது. 2022-ம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் திறனை 175 ஜிகா வாட்டை எட்டச் செய்ய வேண்டும் என்பது இலக்காக உள்ளது, என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இன்றைய விலையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆலைகளில் கூடுதல் முதலீடுகள், 2022-ம் ஆண்டு (மாற்றி இணைப்புகள் இல்லாமல்) வரை 80 பில்லியன் அமெரிக்க டாலராகவும் மற்றும் 2023-2030 காலகட்டத்தில் 250 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும் என்று ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாக, ஓராண்டின் அடிப்படையில், அடுத்த பத்தாண்டுகளில் மற்றும் அதனைத் தொடர்ந்து, 30 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான முதலீட்டு வாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறன் பன்மடங்கு உயர்ந்திருந்தாலும், எரிசக்திக்கான முக்கியமான ஆதாரமாக புதைபடிவ எரிபொருள் அடிப்படையிலான எரிசக்தி தொடர்ந்து விளங்குகிறது என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

*****



(Release ID: 1577188) Visitor Counter : 165