குடியரசுத் தலைவர் செயலகம்

நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை

Posted On: 20 JUN 2019 12:16PM by PIB Chennai

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள்  கொண்டாடப்படும் ஆண்டில்> 17-வது மக்களவைத் தேர்தலுக்கு பின் நடைபெறும் நாடாளுமன்றத்தின் முதல் கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது.  மக்களவைக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

 

  1. நாட்டில் உள்ள வாக்காளர்களில் 61 கோடிக்கும் மேற்பட்டோர் வாக்களித்ததன் மூலம், புதிய சாதனை படைக்கப்பட்டிருப்பதோடு, உலகில் இந்திய ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையும் அதிகரித்திருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வாக்களிப்பதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.  முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், இம்முறை பெண்கள் அதிக அளவில் வாக்களித்திருப்பதுடன், ஆண்களுக்கு இணையான அளவு பெண் வாக்காளர்களும் தங்களது வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். முதன் முறையாக வாக்களித்த கோடிக்கணக்கான இளைஞர்கள், நாட்டின் எதிர்காலத்தை  வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.  இந்தத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதற்காக அனைத்து வாக்காளர்களையும் பாராட்டுகிறேன்.

 

  1. புதிய பொறுப்பை ஏற்றுள்ள மக்களவையின் புதிய தலைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

  1. உலகின் மிகப் பெரிய தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததற்காக ஒட்டுமொத்த தேர்தல் ஆணையத்திற்கும் எனது பாராட்டுக்கள். தேர்தலை வெற்றிகரமாக நடத்தி முடித்ததில், நிர்வாகப் பொறுப்பில் உள்ள அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரின் பங்களிப்பும் பாராட்டுக்குரியதாகும்.

 

  1. மக்களவையின் மொத்த உறுப்பினர்களில் பாதியளவிற்கு  முதன் முறையாக தேர்வு செய்யப்பட்டவர்கள் ஆவர். 78 பெண் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பது, மக்களவை வரலாற்றிலேயே மிக அதிகமாகும். இது  புதிய இந்தியாவை பிரதிபலிப்பதாக உள்ளது.

 

  1. இந்தக் கூட்டுக் கூட்டம், இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிப்பதாக இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாகும். பல்வேறு பட்ட வயதினர், கிராமங்  கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்தவர்கள். பல்வேறு தொழில் புரிந்தவர்களும், இரு அவைகளிலும் உறுப்பினர்களாக உள்ளனர். ஏராளமான உறுப்பினர்கள், சமூகப் பணியில் தொடர்புடையவர்களாகவும் வேறு பலர் விவசாயத்துறை மற்றும் வர்த்தகம், பொருளாதாரம், கல்வித் துறைகளைச்   சார்ந்தவர்களாகவும், உயிர்காக்கும் மருத்துவத் தொழில்  மற்றும் மக்களுக்கு நீதி வழங்கக் கூடிய சட்டத்துறையை சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். திரைப்படம், கலை , இலக்கியம் மற்றும் கலாச்சாரத்துறைகளில் முத்திரை பதித்தவர்களும் இங்கு உள்ளனர். உங்களுக்கு ஏற்பட்ட சிறந்த அனுபவங்கள் நாடாளுமன்ற விவாதத்தின் தரத்தை மேம்படுத்த உதவும் என நம்புகிறேன்.

 

  1. இந்தத் தேர்தலில் நாட்டு மக்கள் மிகத் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர். இந்த அரசின் முதலாவது ஆட்சிக்கால செயல்பாடுகளை மதிப்பிட்டு, இரண்டாவது ஆட்சிக் காலத்திற்கு மேலும் வலுவான ஆதரவை வழங்கி உள்ளனர்.  இதன் மூலம் 2014ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட வளர்ச்சிப் பயணம் இடையூறு இன்றி துரிதமான முறையில் மேற்கொள்ளவும் மக்கள் ஆதரவு  தெரிவித்துள்ளனர்.

 

  1. 2014ஆம் ஆண்டிற்கு முன்பு நாட்டில் நிலவிய சூழ்நிலையைப் பற்றி நாட்டு மக்கள் அனைவரும் அறிவீர்கள். நாட்டை சோர்வான நிலையிலிருந்தும், நிச்சயமற்ற நிலையிலிருந்தும் மீட்க, 30 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும்பான்மையுடன் கூடிய அரசை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களின் இந்தத் தீர்ப்புக்கு மிகுந்த மதிப்பளிக்கும் வகையிலும், புதிய இந்தியாவை படைக்கவும், எவ்வித பாகுபாடும் இன்றி, நாட்டை வழி நடத்திச் செல்வதற்காக  எனது அரசாங்கம், “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்” என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.   

 

  1. இந்த ஆண்டு ஜனவரி 31-ம் தேதி, இதே மைய மண்டபத்தில் நான் உரையாற்றும் போது, இந்த அரசாங்கம் பொறுப்பேற்ற நாள் முதற்கொண்டே, அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவது என்ற இலக்கை அடைய தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது. முறையற்ற நிர்வாகத்தால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை  களைந்து, சமுதாயத்தின் கடைக்கோடியில் உள்ள கடைசி நபருக்கும் அனைத்து அடிப்படை வசதிகளும், கிடைக்கச் செய்யவும் இந்த அரசு பாடுபட்டு வருகிறது.

 

  1. இந்த அரசு தங்களுக்காக பணியாற்றி வருகிறது என்ற நம்பிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டு மக்களுக்கு ஏற்பட்டிருப்பதோடு தங்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்தி மேலும் எளிதாக்குவதற்காக பாடுபட்டு வருகிறது என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது. மக்களின் இந்த நம்பிக்கை அடிப்படையிலேயே தேர்தல் எதிர்கொள்ளப்பட்டது.

 

  1. வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் நாட்டு மக்கள் நீண்ட நாட்களாக காத்துக்கிடந்தனர். ஆனால் தற்போது அந்த நிலை மாறிவிட்டது. நாட்டு மக்கள் மனசாட்சியுடையவர்களாக, திறமைசாலிகளாக, அனைத்து வசதிகளும் கிடைக்கப் பெற்றவர்களாகவும், தடையேதும் இல்லாதவர்களாகவும், “சுமை, அழுத்தம் அல்லது இல்லாமை” போன்ற உணர்வுகள் ஏற்படாத வகையிலும் இருக்க வேண்டும் என்பதே இந்த அரசாங்கத்தின் விருப்பம்.

 

  1. தேச நிர்மானம் தொடர்பான அரசின் உறுதிப்பாட்டிற்கு கடந்த 2014-ஆம் ஆண்டு வித்திடப்பட்டது. நாட்டு மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் அதே வேளையில், வலுவான பாதுகாப்பான, வளமான மற்றும் அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் முனைப்பில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது. “அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்”, அனைவரின் நம்பிக்கையையும் பெறுவோம் என்ற தாரக மந்திரத்தை ஊக்குவிப்பதாக அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்த மாபெரும் ஆன்மீக தலைவரும், சமூக சீர்திருத்தவாதியும், கவிஞருமான ஸ்ரீ நாராயண குருவின் உயரிய போதனைகளே புதிய இந்தியாவிற்கான உந்துசக்தியாக உள்ளது என்று குறிப்பிட்ட குடியரசுத்தலைவர், சாதி, மத, பேதமற்ற வகையில், மக்கள் அனைவரும் சகோதரத்துவத்துடன் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும் என்ற நாராயண குருவின் கவிதை வரிகளையும் சுட்டிக்காட்டினார்.

 

  1. மூன்று வாரங்களுக்கு முன் மே 30-ஆம் தேதியன்று இந்த அரசு பதவியேற்ற உடனேயே புதிய இந்தியாவை படைப்பதற்கான பணிகளை தொடங்கிவிட்டது. புதிய இந்தியா என்பது:
  • ஒவ்வொருவருக்கும் முன்னேற்றத்திற்கான சமவாய்ப்பு கிடைக்கச்

  செய்தல்;

- ஒவ்வொருவரின் வாழ்க்கையும் மேம்பட்டதாக அமைவதோடு   

  அவர்களது சுயமரியாதை உணர்வும் அதிகரிக்க வேண்டும்;

 

  • சகோதரத்துவமும், நல்லிணக்கமும் மக்கள் ஒவ்வொருவரையும்  இணைப்பதாக  அமைய வேண்டும்;

 

  • நமது சிந்தனைகள் மற்றும் நன்மதிப்புகளின் அடிப்படையில் உருவான அடித்தளம் மேலும் வலுவடைவதோடு;

 

  • வளர்ச்சித் திட்டங்களின் பலன் ஒவ்வொரு பிராந்தியத்திலும் உள்ள கடைகோடி நபரையும் சென்றடைய வேண்டும்.

 

இத்தகைய புதிய இந்தியாதான், குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் கனவு கண்ட மாதிரி தேசத்தை முன்னெடுத்துச் செல்ல உதவும். மக்கள் அச்ச உணர்வற்றவர்களாகவும், தலைநிமிர்ந்து சுயமரியாதையுடன் வாழவும் வகை செய்யும் என்ற தாகூரின் வரிகளையும் குடியரசுத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

  1. 2022-ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்ததன் 75-ஆவது ஆண்டை கொண்டாடுவது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்ப்பதாக அமைவதோடு புதிய இந்தியாவை படைப்பதற்கான பல்வேறு தேசிய இலக்குகளை அடையவும் உதவும். புதிய இந்தியா என்ற பொன்னான எதிர்காலத்தை அடைய இந்த அரசு கீழ்கண்டவாறு உறுதி பூண்டுள்ளது.
  • இத்தகைய புதிய இந்தியாவைக் காண வேண்டும் எனில்,  இந்தியாவின் கிராமப்புறங்கள் வலிமையடைவதோடு, கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும்.
  • தொழில்மயமான இந்தியா, புதிய உச்சத்தை அடைவதோடு, இந்திய இளைஞர்களின் கனவுகள் பூர்த்தியடைய இத்தகைய வளர்ச்சிப் பாதை மிகவும் அவசியம்.
  • புதிய இந்தியாவில் அனைத்து நடைமுறைகளும், வெளிப்படையானதாக அமைவதோடு, நேர்மையான குடிமகன்களின் கவுரவம் மேலும் உயரும்.

 

  • 21-ம் நூற்றாண்டுக்குத் தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுவதோடு, புதிய இந்தியாவை படைப்பதற்கான அனைத்து வளங்களும் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இது போன்ற தீர்க்கமான முடிவுகள் காரணமாக, 21 நாட்கள் என்ற குறுகிய காலகட்டத்திற்குள்ளாகவே, இந்த அரசு விவசாயிகள், பாதுகாப்புப் படையினர், மாணவர்கள், தொழில்முனைவோர், பெண்கள் மற்றும் சமுதாயத்தின் இதரபிரிவுகளைச் சேர்ந்தவர்களின் நலனுக்காக பல்வேறு முடிவுகளை மேற்கொண்டிருப்பதோடு, அவற்றை நடைமுறைப்படுத்தவும் தொடங்கியுள்ளது.  பல்வேறு புதிய சட்டங்களை இயற்றுவதற்கான முன்முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

  1. நமது உணவுத் தேவையை பூர்த்தி செய்யும் விவசாயிகளின் வருவாய் ஆதரவை அதிகரிக்கச் செய்யும் வகையில், “பிரதமரின் விவசாயிகள் ஆதரவு நிதி” திட்டம் நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. கழனியில் அல்லும் பகலும் அயராது உழைக்கும்   விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களும், சகோதரிகளும் 60 வயதைக் கடக்கும் போது கவுரமான வாழ்க்கை வாழ்வதற்கு ஏற்ப “ஓய்வூதியத் திட்டம்” ஒன்றும் செயல்படுத்தப்படும்.

 

  1. கால்நடைகள், விவசாயிகளின் விலைமதிப்பற்ற சொத்துக்களாக உள்ள நிலையில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்களுக்காக செலவிடும் தொகையை குறைக்கும் வகையில், 13 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் ஒன்றை செயல்படுத்தவும் இந்த அரசு முடிவு செய்துள்ளது.

 

  1. சிறு வியாபாரிகளுக்கு பொருளாதாரப் பாதுகாப்பு வழங்கும் திட்டத்தையும், முதன் முறையாக இந்த அரசு செயல்படுத்த உள்ளது. புதிய அரசின் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே, சிறுகடை வியாபாரிகள் மற்றும் சில்லறை வணிகர்களுக்கென தனி “ஓய்வூதியத் திட்டமும்” அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள சுமார் 3 கோடி சிறு வியாபாரிகள் பலனடைவார்கள்.

 

  1. நாட்டைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள நமது பாதுகாப்புப் படையினர், நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக தங்களது சொந்த மகிழ்ச்சி, உற்சாகத்தில் தியாகம் செய்வதோடு எந்த ஒரு பண்டிகையையும் கொண்டாட முடியாதவர்களாக உள்ளனர். எனவே நாட்டின்  எல்லையை  காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீர்ர்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக அமைத்துக் கொடுப்பது நமது கடமையாகும். இதனை உணர்ந்த இந்த அரசு, வீரர்களின் குழந்தைகளுக்கு “தேசிய பாதுகாப்பு நிதியம்” மூலம்  வழங்கப்படும் கல்வி உதவித்தொகையை உயர்த்தி  இருப்பதோடு, முதல் முறையாக மாநில காவல் துறையினரின் குழந்தைகளும் இந்த உதவித் தொகையை பெற வகை செய்துள்ளது.

 

  1. தூய்மை இந்தியா திட்டத்தைப்  போல தண்ணீர் பாதுகாப்பு மற்றும் மேலாண்மையிலும் இந்த அரசு தீவிர கவனம் செலுத்த உள்ளது.

 

  1. நமது குழந்தைகள் மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக தண்ணீரைப் பாதுகாக்க வேண்டியுள்ளது. இதனை நிறைவேற்றும் முகமாக ஜல்சக்தி என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

  1. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் நிலைமையை உணர்ந்துள்ள இந்த அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக இருக்கும்.  மாநில அரசுகள் மற்றும் கிராம பஞ்சாயத்துகள் ஒத்துழைப்புடன், விவசாயிகளுக்கு உதவுவதோடு குடிநீர் பிரச்சினைக்கும் தீர்வு காணப்படும்.

 

  1. கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், தேசிய அளவிலான இலக்குகளை அடைய மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுகிறது.  விவசாயத்துறையில். கட்டமைப்பு மாற்றங்களை ஏற்படுத்த மாநில முதலமைச்சர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைக்க முதலமைச்சர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டுள்ளதுஃ
  2. கிராமப்புற பொருளாதாரம், வலுவான அடித்தளத்துடன் இருந்தால்தான், நாட்டின் பொருளாதாரத்தையும் வலுவானதாக மாற்ற முடியும். விவசாயிகளே கிராமப்புற பொருளாதாரத்தின் தூண்களாக உள்ளனர். வேளாண் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கும்.

 

  1. இந்தியாவின் கிராமப்புறங்களை வலுப்படுத்த பெருமளவிலான முதலீடு தேவைப்படுகிறது. வேளாண் உற்பத்தியை அதிகரிக்க வரும் ஆண்டுகளில் 25 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது.

 

  1. 2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கு கடந்த, ஐந்தாண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்க் காப்பீட்டுத் திட்டம் மற்றும் மண்வள சுகாதார அட்டை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டதுடன், வேப்பஞ்சாறு கலந்த யூரியா உரம் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

 

  1. இந்தத் திட்டங்களுக்கு முத்தாய்ப்பாக, பிரதமரின் விவசாயிகள் வருவாய் ஆதரவு திட்டம், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு கடந்த 3 மாதங்களில்  12 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆண்டுக்கு 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு செலவிடப்பட உள்ளது.

 

  1. வேளாண் விளைபொருட்களை சேமித்து, விவசாயிகளின் பொருளாதார பாதுகாப்பு வலுப்படுத்தப்பட உள்ளது. இதற்காக விவசாயிகளுக்கு அவர்களது கிராமத்தின் அருகிலேயே கிராமப்புற சந்தைத் திட்டம் மூலம் சேமிப்புக் கிடங்கு வசதி செய்து தரப்படும்.

 

  1. வேளாண் தொழிலில் கூட்டுறவு அமைப்பின் பலனை, பால்வளத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அனுபவித்து வருகின்றனர்.  அடுத்த கட்டமாக, பத்தாயிரம் புதிய விவசாயிகள் உற்பத்தியாளர்  சங்கங்களை  தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

  1. இந்தியா தற்போது மீன் உற்பத்தியில் உலகில் இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த நிலையை உயர்த்தி, முதலிடத்தை அடைய ஏதுவாக நீலப்புரட்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மீன்வளத்திற்கென தனித்துறையும், உருவாக்கப்பட்டு சிறப்பு நிதியம் ஒன்றும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

  1. ஏழைக் குடும்பங்களை வறுமையிலிருந்து மீட்கும் வகையில், விவசாயிகள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் மற்றும் பெண்களின் நலனுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.  தீன்தயாள் உபாத்யாயா திட்டத்தின் கீழ் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

 

  1. நாட்டில் உள்ள 112 “வளர்ச்சியை விரும்பும் மாவட்டங்கள்” மேம்பாட்டிற்கான விரிவான திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள பின்தங்கிய ஒரு லட்சத்து 15 ஆயிரம் கிராமங்களில் உள்ள கோடிக்கணக்கான ஏழை குடும்பங்களின் கல்வி மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்கான கட்டமைப்பு வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

  1. உலகின் மிகப்பெரிய நிதித்திட்டமாக, ஜன்தன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு, மக்களின் வீடுகளுக்கே வங்கி சேவை சென்றடைவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அனைத்துக் கிராமங்களிலும், குறிப்பாக வடகிழக்கு  மாநிலங்களில்  வங்கி சேவை  கிடைக்க ஏதுவாக, 1.5 லட்சம் அஞ்சலகங்களில், “ இந்தியா போஸ்ட் பேமெண்ட் பேங்க்” தொடங்கப்பட்டுள்ளது.

 

  1. ஏழைக் குடும்பங்களின் மருத்துவச் செலவு, அவர்களுக்கு சுமையாக அமைவதைத் தடுக்க, உலகில் மிகப்பெரிய சுகாதார சேவை திட்டமான ஆயுஷ்மான் பாரத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சுமார் ஐம்பது கோடி ஏழை மக்களுக்கு சுகாதார காப்பீடு வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜன் அவுஷாதி கேந்திரா எனப்படும் குறைந்தவிலை மருந்தகங்கள் மூலமாகவும், ஏழை நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்து பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.

 

  1. 2022-ஆம் ஆண்டுக்குள் 1.5 லட்சம் சுகாதாரம் மற்றும் நலவாழ்வு மையங்கள் அனைத்துக் கிராமப்பகுதிகளிலும் அமைக்கப்பட உள்ளது.  இதில் சுமார் 18 ஆயிரம் மையங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன.

 

  1. வனப்பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின இளைஞர்களுக்கு வருவாய் ஈட்டும் கல்வியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பழங்குடியின குழந்தைகளுக்காக ஏகலைவா மாதிரி உண்டு - உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட்டு வருகிறது. மேலும், வன் தன் கேந்திரா எனப்படும் மையங்கள் மூலமாக, வனப்பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தவும், முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

  1. மகளிருக்கு அதிகாரமளித்தல் இந்த அரசின் முன்னுரிமைப் பணியாக உள்ளது. இதன் ஒரு பகுதியாக, பெண்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பதோடு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளும் வழங்கப்படுகிறது. மேலும், பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளை படிக்க வைப்போம் திட்டத்தால் பெண் சிசுக்கொலை பெருமளவு குறைக்கப்பட்டு நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் ஆண் பெண் பாலின விகிதமும் அதிகரித்துள்ளது.

 

  1. விறகு அடுப்புகளை பயன்படுத்துவதால் ஏற்படும் புகை பாதிப்பிலிருந்து கிராமப்புற பெண்களை பாதுகாக்க உஜ்வாலா திட்டமும், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்திர தனுஷ் தடுப்பூசி போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்படுவதுடன், சவுபாக்யா திட்டத்தின் மூலம், இலவச மின் இணைப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இது தவிர, பிரதமரின் வீட்டு வசதித்திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடு ஒதுக்கீட்டில் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

 

  1. முறைசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவதுடன், தீன் தயாள் உபாத்யாயா ராஷ்ட்ரீய ஆஜிவிகா இயக்கத்தின் மூலம் கிராமப்புற மக்களுக்கு சுயவேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை கிராமப்புறத்தைச் சேர்ந்த 3 கோடி பெண்களுக்கு இரண்டு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

 

  1. நாட்டின் வளர்ச்சி மற்றும் வளத்தை பெருக்குவதில் பெண்களுக்கு சம வாய்ப்பு அளிக்கும் வகையில், அரசின் கொள்முதல் நடவடிக்கைகளில் பெண் தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

 

  1. நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் சம உரிமை கிடைக்கச் செய்யவும், முத்தலாக் போன்ற சமூக தீமைகளை அகற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

  1. புதிய இந்தியாவை படைப்பதில் இளைய தலைமுறையினர், அர்த்தமுள்ள வகையில் பங்குபெற ஏதுவாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர்களின் திறன் மேம்பாடு மற்றும் சுயதொழில் தொடங்க நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. கல்வி உதவித் தொகையும் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

 

  1. பொதுப்பிரிவினரில் பொருளாதார ரீதியாக நலிவடைந்த இளைஞர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பத்து சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.

 

  1. பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் சுயவேலைவாய்ப்புக்காக  19 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழில் முனைவோருக்கு 50 லட்சம் ரூபாய் வரை, எந்தவித உத்தரவாதமும் இன்றி கடன் வழங்கப்படுகிறது.

 

  1. உலகில் அதிக தொழில் தொடங்கும் நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. புதிய தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழலை மேம்படுத்த பல்வேறு விதிமுறைகளை அரசு எளிமையாக்கியுள்ளது. இந்த நடவடிக்கை  மேலும் விரைவுபடுத்தப்பட்டு, 2024ஆம் ஆண்டுக்குள் நாட்டில் 50 ஆயிரம் பேர் புதிய தொழில்கள் தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

  1. உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சிக்கான முன்முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறது. இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்தும் வகையில், தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அறக்கட்டளை மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கும் அறிவியல் பரிசோதனைக் கூடங்களுக்கும், உயர் கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும்.

 

  1. உலகத்தின் முதல் 500 கல்வி நிறுவனங்கள் பட்டியலில் இடம் பிடிக்க உதவும் வகையில் சுயாட்சி, நிதியுதவி ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களுக்கு  ஊக்கமளிக்கப்படுகிறது.

 

  1. 2024-ம் ஆண்டிற்குள் நாட்டின் உயர்கல்வி அமைப்பில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை ஒன்றரை மடங்கு அதிகரிக்கவும் எனது அரசு முயற்சித்து வருகிறது. இந்த முன்முயற்சியின் மூலம் நாட்டின் உயர்கல்வி நிறுவனங்களில் இளைஞர்களுக்கு கூடுதலாக 2 கோடி இடங்கள் கிடைக்கும்.

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. குழந்தைகளின் திறமையை மேம்படுத்த பொருத்தமான வாய்ப்புகள், சூழல், தரமான கல்வி ஆகியவற்றை வழங்குவது நமது கடமையாகும். இந்த வகையில்  “பிரதமரின் புதுமையான வகையில் கல்வி கற்கும் திட்டம்” தொடங்கப்படும்.

 

  1. பள்ளியளவில் குழந்தைகளை தொழில்நுட்பத்தை நோக்கி முன்னதாகவே கவர்ந்திழுக்கும் வகையில், பொருத்தமான கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.  ‘அடல் புதுமைக்கான இயக்கம்’ மூலம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுமார் 9,000 பள்ளிகளில்  ‘அடல் பரிசோதனைக் கூடங்கள்’ நிறுவும் பணி மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதைப் போன்றே,

 ‘அடல் அடைகாக்கும் மையங்கள்’ நாட்டிலுள்ள 102 பல்கலைக்கழகங்கள் மற்றும் இதர நிறுவனங்களில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

 

  1. உலக அளவில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் கவரத்தக்க செயல்பாடானது நாட்டின் பெருமையை உயர்த்துவதோடு, விளையாட்டின் மீதான குழந்தைகள், இளைஞர்கள் ஆகியோரின் ஆர்வத்தையும் அதிகரிக்கிறது. வாழ்க்கையில் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் வழங்கும் கலாச்சாரத்தையும் அது வலுப்படுத்துகிறது. உலக அளவில் விளையாட்டுத் துறையில் வலிமையுள்ளதொரு நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு, நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசித்து வரும் திறமையான விளையாட்டு வீரர்களை அடையாளம் காண்பது அவசியம் என்பதோடு, அவர்களை தேர்ந்தெடுக்கும் செயல்முறையும் வெளிப்படையான  ஒன்றாக இருக்க வேண்டும். மாநில, மாவட்ட அளவில் விளையாட்டு வீரர்களை அடையாளம் காண  ‘விளையாடு இந்தியா திட்டத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்கீழ் திறமைபெற்ற 2,500 வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு,பயிற்சி பெற்று வருகின்றனர். இப்போது இந்த வசதியானது ஒவ்வோர் ஆண்டும் 2,500 புதிய விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும்.

 

  1. நாட்டிலுள்ள விளையாட்டிற்கான கட்டமைப்பு நவீனமயமாக்கப்படுவதோடு விரிவுபடுத்தப்படும். விளையாட்டு வீரர்களுக்கு நவீன கட்டமைப்பு வசதிகள் கிடைப்பதற்கான புதிய ஏற்பாடு உருவாக்கப்பட்டு வருகிறது. விளையாட்டு உலகத்தில் பெரும் புகழை நமது வீரர்கள் பெற வேண்டும்; நமது நாட்டின் பெருமையை உயர்த்த வேண்டும் என்பதே நமது ஆழ்ந்த முயற்சியின் அடிப்படையாகும்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. நமது நாட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் பொருளாதார வளர்ச்சி மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. இன்று உலகின் மிகவேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா விளங்குகிறது. குறைந்த பணவீக்கம், கட்டுப்படுத்தப்பட்ட நிதிப் பற்றாக்குறை, அதிகரித்து வரும் அந்நியச் செலாவணி கையிருப்பு, இந்தியாவில் உற்பத்தி செய் இயக்கத்தின் தாக்கம் ஆகியவை மிகத் தெளிவாகவே தென்படுகின்றன.

 

  1. ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி அளவில் அடிப்படையில் உலகின் ஐந்தாவது மிகப்பெரிய பொருளாதார நாடாக மாறும் நிலையில் இந்தியா தற்போது உள்ளது. உயரிய வளர்ச்சி விகிதத்தை தொடர்ந்து நிலைநாட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் மேலும் தொடரும். 2024-ம் ஆண்டிற்குள் இந்தியாவை  5 டிரில்லியன் டாலர் மதிப்புடைய பொருளாதார நாடாக மாற்றுவதே நமது இலக்காகும்.

 

  1. உலகளாவிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான வேலைகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நான்காம் தலைமுறை தொழில் துறையை கருத்தில் கொண்டு, புதியதொரு தொழில் கொள்கை விரைவில் அறிவிக்கப்படும். வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது என்பதைப் பொறுத்தவரையில், கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்தியா 65 இடங்களை கடந்து முன்னேறியுள்ளது. 2014-ம் ஆண்டில் 142-வது இடத்தில் இருந்த  இந்தியா, இப்போது 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தற்போது உலகின் மேல்மட்டத்தில்  உள்ள முதல் 50 நாடுகளில் ஒன்றாக மாறுவதே நமது இலக்கு ஆகும். இதை அடைவதற்காக மாநிலங்களின் ஒத்துழைப்புடன் விதிகளை எளிமைப்படுத்தும் செயல்முறை மேலும் துரிதப்படுத்தப்படும். இதற்கிணங்க, நிறுவனங்கள் சட்டத்தில் தேவையான திருத்தங்கள் கொண்டுவரப்படுகின்றன.

 

  1. பொருளாதார வளர்ச்சியைத் தீவிரப்படுத்துவதில் வரி ஏற்பாடுகள் மிக முக்கியமான பங்கினை வகிக்கின்றன. தொடர்ச்சியான சீர்திருத்தங்களோடு கூடவே, வரிவிதிப்பு முறையை எளிமைப்படுத்தலுக்கும் அழுத்தம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ரூ. 5 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிப்பது மிக முக்கியமானதொரு நடவடிக்கை ஆகும்.

 

  1. அதைப் போன்றே, மறைமுக வரி அமைப்பும் எளிமையானதாகவும் செயல்திறன் மிக்கதாகவும் மாற்றப்பட்டு வருகிறது. ஜிஎஸ்டி அமைப்பை அமலாக்கியதன் மூலம்  ‘ஒரு நாடு, ஒரு வரி, ஒரு சந்தை’ என்ற கருத்தாக்கம் நடைமுறைக்கு வந்துள்ளது. ஜிஎஸ்டியை மேலும் எளிமைப்படுத்துவதற்கான முயற்சிகளும் தொடரும்.

 

  1. சிறு வர்த்தகர்களின் நலனை கருத்தில் கொண்டு, எனது அரசு அவர்களுக்கென புதிய ஓய்வூதியத் திட்டம் ஒன்றை தொடங்கியுள்ளது.  ‘தேசிய வர்த்தகர் நல வாரியம்’ விரைவில் அமைக்கப்பட்டு, சில்லரை வர்த்தகத்தை வளர்ப்பதற்கான  ‘தேசிய சில்லரை வர்த்தகக் கொள்கை’ வடிவகைக்கப்படும். ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்துள்ள அனைத்து வர்த்தகர்களுக்கும் ரூ. 10 லட்சம் வரையிலான விபத்துக் காப்பீடு வழங்கப்படுகிறது.

 

  1. சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனத் துறை நாட்டின் பொருளாதாரத்திற்கு வலுவான அடித்தளம் வழங்குவதோடு, வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. சிறு தொழில்முனைவர்கள் நடத்தும் நிறுவனங்களுக்கு இலகுவான பண வரத்தை உறுதிப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறு-குறு-நடுத்தர தொழில் நிறுவனத் துறையைச் சார்ந்த தொழில்முனைவோர்கள் கடன் பெறுவதில் எவ்வித இடையூறையும் எதிர்கொள்ளாமல் இருக்க கடன் உத்தரவாதத்திற்கான அளவீடு ரூ. 1 லட்சம் கோடி வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. நல்லதொரு நிர்வாகம் ஊழலை மட்டுப்படுத்துகிறது; நாட்டின் குடிமக்களின் சுயமரியாதையை மேம்படுத்துகிறது; அவர்கள் தங்களது தனித்திறமையையும் திறனையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளவும் உதவுகிறது.

 

  1. ஊழலுக்கு எதிரான முற்றிலும் சகித்துக் கொள்ளாத கொள்கையை, எமது அரசு மேலும் முழுமையானதாகவும் செயல்திறன் மிக்கதாகவும் செய்யும். பொது வாழ்க்கையிலிருந்தும் அரசு சேவைகளில் இருந்தும் ஊழலை அகற்றுவதென்ற இயக்கம் மேலும் மிகுந்த வேகத்துடன் அமலாக்கப்படும். இந்த நோக்கத்துடன் குறைந்தபட்ச அரசுத் தலையீடு – அதிகபட்ச நிர்வாகம் என்பதற்கு மேலும் அதிக அழுத்தம் தரப்படும். மேலும் நேரடியான தொடர்புகளை குறைக்கும் வகையில் தொழில்நுட்ப பயன்பாடு அதிகபட்சமாக்கப்படும். லோக்பால் நியமனமும் வெளிப்படைத்தன்மையை வளர்த்தெடுப்பதாக அமையும்.

 

  1. கருப்புப் பணத்திற்கு எதிரான இயக்கம் மேலும் அதிகமான வேகத்துடன் முன்னெடுத்துச் செல்லப்படும். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே 4,25,000 தனியார் நிறுவன இயக்குநர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகத்திற்கிடமான 3,50,000 நிறுவனங்களின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

  1. பொருளாதார ரீதியான குற்றம் புரிவோர்களை கட்டுப்படுத்துவதில்  ‘தப்பியோடியவர்கள் மற்றும் பொருளாதார ரீதியான குற்றம் புரிவோருக்கான சட்டம்’ மிகச் சிறப்பாகச் செயல்படுவது நிரூபணமாகியுள்ளது. தற்போது சுவிட்சர்லாந்து உள்ளிட்டு 146 நாடுகளில் இருந்து இது தொடர்பான தகவல்களை நாம் பெற்று வருகிறோம். இவற்றில் உடனடியாக தகவல்களைப் பரிமாறிக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை 80 நாடுகளுடன் நாம் நிறைவேற்றியுள்ளோம். வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்கும் அனைவரைப் பற்றிய தகவல்கள் தற்போது நமக்குக் கிடைத்து வருகின்றன.

 

  1. கட்டுமானத்துறையில் கருப்புப் பண பரிமாற்றங்களைத் தடுத்து நிறுத்துவதிலும் வாடிக்கையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதிலும் ரெரா என்று அழைக்கப்படும்  ‘கட்டுமானத்துறை ஒழுங்கமைப்பு சட்ட’த்தின் தாக்கம் மிகத் தெளிவாகத் தெரிகிறது. இதன் மூலம் நடுத்தர வர்க்கக் குடும்பங்களுக்கு பெருமளவிற்கு நிவாரணம் கிடைத்துள்ளது.

 

  1. நாட்டில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களில்  ‘திவால் மற்றும் நொடிப்பு ஆகியவற்றுக்கான விதிமுறைகள்’ மிகப்பெரியதாகவும், மிகுந்த தாக்கம் ஏற்படுத்தியதாகவும் விளங்குகிறது. இந்த விதிமுறை நடைமுறையில் வந்ததைத் தொடர்ந்து வங்கிகளும் இதர நிதி நிறுவனங்களும்  நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சுமார் ரூ. 3,50,000 கோடிக்கும் மேலான தொகை குறித்த சச்சரவை தீர்த்துக் கொள்ள முடிந்துள்ளது. மேலும் இந்த விதிமுறை வங்கிகளிடமிருந்தும் இதர நிதி நிறுவனங்களிடமிருந்தும் வாங்கிய கடனை வேண்டுமென்றே திருப்பிச் செலுத்தாத போக்கைத் தடுத்து நிறுத்தியுள்ளது.

 

  1. ‘நேரடி பணப்பரிமாற்ற’ முறையின் கீழ் 400க்கும் மேற்பட்ட திட்டங்களுக்கான நிதிகள், அவற்றின் பயனாளிகளின் கணக்குகளுக்கு நேரடியாக வரவு வைக்கப்படுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இந்த முறையின் மூலம் ரூ. 7,30,000 கோடி பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 1,41,000 கோடி பணம் தவறானவர்களின் கைகளில் சென்று சேர்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதோடு, இத்தகைய திட்டங்களுக்கு தகுதியற்ற, போலியான பயனாளர்கள் சுமார் 8 கோடி பேரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படவும் உதவியுள்ளது. வரும் நாட்களில் இந்த நேரடி பணப்பரிமாற்ற முறை மேலும் விரிவாக்கப்படும். மேலும் அதிகமான அரசு திட்டங்களை இந்த முறையின் கீழ் கொண்டு வருமாறும் நான் மாநில அரசுகளை இத்தருணத்தில் கேட்டுக் கொள்கிறேன்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. வளமானதொரு இந்தியாவை உருவாக்குவதில் கட்டமைப்பு மிக முக்கியமானதொரு பங்கினை வகிக்கிறது. சுற்றுச் சூழலுக்கு உகந்த வகையில் கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்றே எமது அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. நெடுஞ்சாலை மற்றும் விரைவுப் பாதை திட்டங்களில் கான்க்ரீட்டுடன் கூடவே பசுமையும் இன்றியமையாத பகுதியாக மாற்றப்பட்டுள்ளது. மின்சார வசதியைப் பொறுத்தவரையில், சூரிய ஒளியின் மூலமான மின்சார உற்பத்தி முறையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள அழுத்தம் தரப்படுகிறது. சாலை உருவாக்கத்தில் வீட்டு, தொழிற்சாலை கழிவுகளும் பயன்படுத்திக் கொள்ளப்படுகின்றன.

 

  1. 21-ம் நூற்றாண்டு பொருளாதாரத்தில் நகரமயமாக்கலின் வேகமும் வீச்சும் தொடர்ந்து அதிகரிக்கவே செய்யும். பெருநகரங்களிலும் புறநகர்ப் பகுதிகளிலும் நகர்ப்புற கட்டமைப்பு வளர்ச்சி என்பது பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகோலுவதோடு, வேலைவாய்ப்புகளையும் அதிகரிக்கும். உலகத் தரத்திலான கட்டமைப்பு, கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும்  பொதுமக்களுக்கான வசதிகள் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் நவீன இந்தியாவை உருவாக்க எமது அரசு இடைவிடாது செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள், மலைப்பகுதிகள், பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகள் ஆகியவற்றில் தொடர்பு வசதியை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் நாட்டின் வடகிழக்குப் பகுதியைச் சேர்ந்த குடிமக்களின் வாழ்க்கை வசதிகளை மேம்படுத்துவதோடு, சுற்றுலா, விவசாயம் மற்றும்  தொடர்புடைய இதர துறைகளும் இத்தகைய சிறப்பான தொடர்பு வசதியில் இருந்து பயன் பெறும். வடகிழக்குப் பகுதியில் இயற்கை வேளாண்மையை விரிவுபடுத்த சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

 

  1. ‘பாரத்மாலா திட்ட’த்தின் மூலம் 2022-ம் ஆண்டிற்குள் 35,000 கிலோமீட்டர் நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலைகள் உருவாக்கப்படுவதும், மேம்படுத்தப்படுவதும் மேற்கொள்ளப்படவுள்ளன.  மேலும்  ‘சாகர்மாலா திட்ட’த்தின் மூலம் கடற்கரையோரப் பகுதிகள், அதைச் சுற்றியுள்ள துறைமுகப் பகுதிகள் ஆகியவற்றில் நல்ல தரமான சாலைகளைக் கொண்ட வலைப்பின்னல் உருவாக்கப்பட்டு வருகிறது.

 

  1. நெடுஞ்சாலைகளோடு கூடவே, ரயில்வே, விமானவழிகள், உள்நாட்டு நீர்வழிகள் ஆகிய துறைகளிலும் அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது. ‘உதான் திட்ட’த்தின் கீழ் சிறு நகரங்களுக்கு இடையே விமானப் போக்குவரத்து வசதி மிக வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

 

  1. தற்போதைய மற்றும் எதிர்காலத் தேவைகளை நிறைவேற்றும் வகையில், நகர்ப்புற போக்குவரத்து கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டமைப்பை உருவாக்கும் அதே நேரத்தில் மாசுபடுதலால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ளவும் போதிய கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வேகமான, பாதுகாப்பானதாக மட்டுமின்றி, சுற்றுச்சூழலுக்கு உகந்த முறையிலான போக்குவரத்து அமைப்பையே எமது அரசு உருவாக்கி வருகிறது. இதற்கென அரசுப் போக்குவரத்து அமைப்பிற்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு நகரங்களிலும் மெட்ரோ ரயில் வலைப்பின்னல் மிக வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. எளிமையான, இலகுவான, வசதியான போக்குவரத்து என்ற கனவை நனவாக்கவே  ‘ஒரு நாடு – ஒரே அட்டை’ என்ற வசதி தொடங்கப்பட்டுள்ளது. அதைப் போன்றே வாகனங்களின் மூலமான மாசுபடுதலை குறைக்கும் வகையில், மின்சாரத்தின் மூலம் செயல்படும் வாகனங்களுக்கு ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய வாகனங்கள் மின்சாரம் ஏற்றிக் கொள்வதற்கான நிலையங்களின் வலைப்பின்னலும் மிக வேகமாக விரிவாகி வருகிறது.

 

  1. எரிவாயு பகிர்வு திட்டம், அதிவேக போக்குவரத்து வழிகள் போன்ற நவீன வசதிகளும் மிக வேகமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. அழுத்தம் தரப்பட்ட இயற்கை எரிவாயு அடிப்படையிலான வீட்டு எரிபொருள், சுருக்கப்பட்ட இயற்கை எரிவாயு அடிப்படையிலான போக்குவரத்து வசதிகள் போன்றவையும் வளர்த்தெடுக்கப்பட்டு வருகின்றன. நவீன இந்தியாவில் உயிரி எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கும் நாங்கள் சிறப்பான முக்கியத்துவம் வழங்கி வருகிறோம். 2014க்கு முன்பாக சுமார் 67 கோடி லிட்டர் எத்தனால் கரைக்கப்பட்டு வந்தது எனில்,  இந்த ஆண்டு 270 கோடி லிட்டர் எத்தனால் கரைப்பது என இலக்கு நிர்ணயித்துள்ளோம். எத்தனால் கரைக்கப்பட்ட எரிபொருளை அதிகமாகப் பயன்படுத்துவது நமது விவசாயிகளுக்கு பயன் தரும் என்பதோடு நமது சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும். மேலும் பெட்ரோலியப் பொருட்களை இறக்குமதி செய்வதையும் இது குறைத்து அந்நியச் செலாவணியையும் மிச்சப்படுத்தும்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. கங்கை நதி தங்குதடையின்றி ஓடுவது, மாசில்லாமல் இருப்பது என்ற நிலையை உருவாக்குவதில் எமது அரசு முற்றிலும் தீவிரமாக உள்ளது. கங்கை நதி பாயும் பகுதிகளில் பல இடங்களில் நீரில் வாழும் உயிரினங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உள்ளதற்கான சான்றுகள் சமீபத்தில் கிடைத்துள்ளன. இந்த ஆண்டு ப்ரயாக்ராஜில் நடைபெற்ற அர்த்தகும்ப விழாவில், கங்கையில் தூய்மையான நிலையும், பக்தர்களுக்கு வழங்கப்பட்டிருந்த வசதிகளும் உலகம் முழுவதிலும் செய்தியானது. அர்த்தகும்ப நிகழ்வை வெற்றிகரமாக நடத்துவதில் பங்களித்த ஒவ்வொருவரையும் மரியாதை செய்ததன் மூலம் அவர்களது பெருமையையும் சுயமதிப்பையும் எமது அரசு உயர்த்தியுள்ளது.

 

  1. ‘நமாமி கங்கா’ (கங்கையைப் போற்றுவோம்) திட்டத்தின் கீழ் கங்கை நதியில் கழிவுகளை கலந்து கொண்டிருக்கும் குழாய்களை அடைப்பது என்ற இயக்கத்தை எமது அரசு மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. கங்கை நதியை சுத்தமாக்குவதில் மேற்கொள்ளப்படுவது போன்ற முயற்சிகளை, காவேரி, பெரியார், நர்மதா, யமுனா, மகாநதி, கோதாவரி ஆகிய நதிகளை சுத்தப்படுத்துவதிலும் எமது அரசு மேற்கொள்ளும்.

 

  1. காடுகள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் எமது அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சமீப ஆண்டுகளில் காடு மற்றும் மரங்களின் அளவு ஒரு சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் நாட்டில் பாதுகாக்கப்பட்ட பகுதிகளும் அதிகரித்துள்ளன. 2014-ம் ஆண்டில் நாட்டில் இருந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் எண்ணிக்கை 692 ஆக இருந்தது. அவை இப்போது 868 ஆக அதிகரித்துள்ளது. காற்று மாசின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில் நாட்டிலுள்ள 102 நகரங்களில்‘தூய காற்றுக்கான தேசிய திட்டம்’ தொடங்கப்பட்டுள்ளது.

 

  1. பருவநிலை மாற்றம், உலகளாவிய வெப்பமயமாதல் ஆகியவற்றின் மோசமான விளைவுகளை குறைப்பதில் சூரிய ஒளியின் மூலம் பெறப்படும் சக்தி மிக முக்கியமானதொரு பங்கினை வகிக்கிறது. இந்தியாவின் தீவிர முயற்சிகளின் விளைவாக, சூரிய ஒளிவழி சக்திக்கான சர்வதேச கூட்டணி தோன்றியுள்ளது. இந்த அமைப்பின் மூலம் உலகத்தின் வளரும் நாடுகளில் சூரிய ஒளிவழி சக்தி கணிசமாக வளர்ச்சி பெறுவதிலும் இந்தியா குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. வரவிருக்கும் பேரழிவுகள் பற்றிய முன்கூட்டிய எச்சரிக்கைகள், இயற்கை வள ஆதாரங்களை கண்டறிவது, பல்வேறு வகையான தகவல் தொடர்புக்குத் தேவையான அறிகுறிகளை வழங்குவது, நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்வது போன்றவற்றை வழங்கும் விண்வெளி தொழில்நுட்பம், சாதாரண மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் மிக முக்கியமான பங்கினை வகிக்கிறது. மனித நலனுக்காக விண்வெளி தொழில்நுட்பத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே எமது அரசின் விருப்பமாகும். சாலைகள், ஏழைகளுக்கான வீடுகள், விவசாயிகளுக்கான, மீனவர்களுக்கான கருவிகள், ஆகிய பலவகையான வசதிகளுமே விண்வெளி தொழில்நுட்பத்தோடு தொடர்புடையதே ஆகும்.

 

  1. நிலம், ஆகாயம், நீர் ஆகியவற்றின் வழியாக நமது நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்துவதிலும் விண்வெளி தொழில்நுட்பம் நமக்கு உதவி செய்கிறது. பருவநிலையை மிகச் சரியாகப் புரிந்து கொள்வதிலும் நமது திறன் தற்போது மேம்பட்டுள்ளது. நமது நாட்டின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை சமீபத்தில் ‘பானி புயல்’  தாக்கியபோது இந்தத் திறமை வெளிப்பட்டது. சரியான தகவல், உரிய நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் விளைவாக உயிர், மற்றும் பொருட்சேதம் பெருமளவிற்கு தவிர்க்கப்பட்டது.

 

  1. வான்வெளியில் உள்ள மர்மங்களை புரிந்து கொள்ளவும், வெளியிடவுமான தலைமைப் பொறுப்பை ஏற்பதை நோக்கி, இந்தியா தற்போது நடைபோட்டு வருகிறது. சந்திரனை அடையவிருக்கின்ற இந்தியாவின் முதல் விண்கலமான  ‘சந்த்ராயன் 2’ –ஐ செலுத்துவதற்கான தயாரிப்புகளில் நமது விஞ்ஞானிகள் ஈடுபட்டு வருகின்றனர். 2022க்குள் இந்தியாவிற்கு சொந்தமான  ‘ககன்யான்’ விண்கலம் மூலம், முதல் இந்தியரை விண்ணுக்குச் செலுத்துவது என்ற இலக்கை நோக்கியும் நாம் தீவிரமாக முன்னேறி வருகிறோம்.

 

  1. மக்களவைக்கான தேர்தலின்போது நமது நாடு மற்றொரு முக்கிய நிகழ்வை சந்தித்தது. எனினும் அது போதுமான கவனத்தைப் பெறவில்லை. ‘மிஷன் சக்தி’ யை வெற்றிகரமாக சோதனை செய்ததன் மூலம் பாதுகாப்புத் தயார்நிலை மற்றும் விண்வெளி தொழில்நுட்பம் ஆகியவற்றில் இந்தியாவின் திறமைக்கு புதியதொரு வடிவம் கிடைத்துள்ளது. அதற்காக, நமது விஞ்ஞானிகளையும் பொறியாளர்களையும் இன்று மீண்டும் ஒருமுறை பாராட்டுகிறேன்.

 

  1. பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு தொடர்ந்து விரிவாகிக் கொண்டே வருகிறது. இதை கருத்தில் கொண்டு, விண்வெளி, இணையவெளி, மற்றும் சிறப்பு படைகள் ஆகிய மூன்று படைப்பிரிவுகளுக்கான கூட்டு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த கூட்டு முயற்சிகள் நாட்டின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும்.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

  1. உலக மக்களிடையே அதன் உரிய இடத்தைப் பெறுவதை நோக்கி புதிய இந்தியா மிக வேகமாக நகர்ந்து வருகிறது. இன்று இந்தியா புதியதொரு தோற்றத்தைப் பெற்றுள்ளதோடு மற்ற நாடுகளுடனான நமது உறவுகளும் கூட வலுவடைந்துள்ளன. 2022-ம் ஆண்டில் இந்தியா ஜி-20 உச்சிமாநாட்டை நடத்தவிருக்கிறது என்பது மிகுந்த பெருமைக்குரியதொரு விஷயமாகும்.
  2. ஐக்கிய நாடுகள் சபை ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கருத்தை சர்வதேச நாடுகள் மிகவும் உற்சாகமாக ஆதரித்தன. தற்போது சர்வதேச யோகா தினத்தோடு இணைந்து பல்வேறு நிகழ்ச்சிகளும் மிகுந்த உற்சாகத்துடன் பல்வேறு நாடுகளிலும் நடத்தப்படுகின்றன. நாளை ஜூன் 21 அன்று இத்தகைய மிக முக்கியமான நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.

 

  1. பருவநிலை மாற்றத்தைக் கையாளுதல், பொருளாதாரம், கணினிவழிக் குற்றச் சம்பவங்களைத் தடுத்தல், ஊழலுக்கும் கறுப்புப் பணத்துக்கும் எதிரான நடவடிக்கைகள், மின்சக்தி பாதுகாப்பு ஆகிய பல பிரச்சினைகளில் உலக சமுதாயம் இந்தியாவை ஆதரித்து வருகிறது. பயங்கரவாதப் பிரச்சினையில் இன்று உலகமே இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளது. இந்திய மண்ணில் நிகழ்ந்த மிகப் பெரிய பயங்கரவாதச் செயல்களுக்கு மூல காரணமான மசூத் அஸார், சர்வதேச பயங்கரவாதி என்று ஐ.நா. சபையில் பிரகடனம் செய்தது இதற்கு மிகப்பெரிய சாட்சியாகும்.   

 

  1. நமக்கு அண்டையில் உள்ள தெற்காசியா மற்றும் இதர நாடுகளுக்கு முன்னுரிமை தருகிற நமது அணுகுமுறைக்கு “அண்டைநாடுகளுக்கு முன்னுரிமை” என்ற கேட்பாடே சான்றாக உள்ளது. இந்த மண்டலத்தின் மேம்பாட்டுக்கு இந்தியா மிக முக்கியமான பங்கினை ஆற்றும். வர்த்தகம், போக்குவரத்து வசதி,  தொடர்பு, மக்களுக்கு இடையே நேரடியான தொடர்பு ஆகியவற்றுக்கு ஊக்கமளிக்கப்படுகிறது. வங்கக் கடலில் அமைந்துள்ள நாடுகளின் (BIMSTEC) தலைவர்கள், அரசுத் தலைவர்கள், தற்போது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (Shanghai Cooperation Organisation) தலைவராக உள்ள கிர்கிஸ்தான், மொரீஷியஸ் ஆகியவற்றின் தலைவர்களும்  புதிய அரசின் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது இந்தக் கொள்கையின் பிரதிபலிப்பாகும்.

 

  1. வெளிநாடுகளில் வசிக்கும், வேலை பார்க்கும் இந்தியர்களின் நலன்களைக் பாதுகாப்பதில் எனது அரசு விழிப்போடு உள்ளது. யாராவது ஓர் இந்தியர் வெளிநாட்டில் ஏதாவது பிரச்சினையில் சிக்க நேரிட்டால், உரிய நேரத்தில் உதவியும், நிவாரணமும் கிடைக்கும் என்று நம்புகிறார். பாஸ்போர்ட் வாங்குவது முதல் விசா நடைமுறை வரையில் பல பணிகள் எளிதாக்கப்பட்டுவிட்டன.

 

  1. எனது அரசின் முயற்சிகளினால், இந்தியத் தத்துவம், பண்பாடு, சாதனைகள் உலக அளவில் அங்கீகாரம் பெற்றுள்ளது. இந்த ஆண்டு  மகாத்மா காந்தியடிகளின் 150-வது பிறந்த நாளாகும். இது உலகஅளவில் கொண்டாடப்படுவது இந்தியாவின் எண்ண ஆளுமைக்கு (Thought Leadership) ஊக்கம் அளிக்கிறது. அதைப் போல் குருநானக் தேவ்ஜியின் 550வது பிறந்த நாள் கொண்டாட்டம் இந்தியாவின் ஆன்மிக ஞான ஒளியை உலகம் முழுவதும் பரப்புவதற்குத் துணை புரியட்டும்.

 

  1. புதிய இந்தியா பொருளாதார வளம் மிக்கதாக இருக்கும். அப்படி வளம் மிக்கதாகத் திகழ பாதுகாப்பு மிகவும் இன்றியமையாதது. எனது அரசாங்கம் நாட்டின் பாதுகாப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே, நக்சலைட் வன்முறை, தீவிரவாதம் ஆகியவற்றை ஒடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
  2. இந்தியா தனது நோக்கம் மற்றும் திறமையை உரியவகையில் வெளிப்படுத்தியிருக்கிறது. புல்வாமா தாக்குதல் , துல்லியத் தாக்குதல் ஆகியவற்றை நிகழ்த்திக் காட்டியது. எதிர்காலத்திலும் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும்.

 

  1. சட்டவிரோதமாக உள்நாட்டில் குடியேறுவது பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது பல நாடுகளில் சமூக ஏற்றத் தாழ்வுகளுக்கு வழிசெய்து விடுகிறது. அத்துடன் அதிக அழுத்தம் வேறு தரப்படுகிறது. இதனால், ஊடுருவலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தேசிய குடிமக்கள் பதிவு முறையை (National Register of Citizens) அமல்படுத்துவது என்று முடிவு செய்துள்ளது. இந்த ஊடுருவலைத் தடுப்பதற்காக எல்லைப்புறப் பகுதிகளில் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும்.

 

  1. ஊடுருவலைத் தடுப்பதற்கு ஒருபுறம் அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்க, மறுபுறம் பாதிக்கப்பட்டோருக்கு உரிய பாதுகாப்பு, வாழ்வாதாரத்தை அமைத்துத் தருகிறோம். இது விஷயத்தில் குடியுரிமைச் சட்டத்தை (Citizenship Act) திருத்தவும் நடவடிக்கை எடிக்கப்படும். அதே சமயம் அவர்களது மொழி, பண்பாடு, சமூக அடையாளங்கள் பாதுகாக்கப்படும்.

 

  1. ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் மக்களுக்கு பாதுகாப்பு, அமைதியுடன் கூடிய சூழல் உருவாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அண்மையில் நடந்து முடிந்த உள்ளாட்சி மற்றும் மக்களவைக்கான தேர்தல்கள் அமைதியான முறையில் நடந்து முடிந்தது எங்களது முயற்சிகளுக்கு வலுவூட்டியுள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் வளர்ச்சிக்காக எனது அரசாங்கம் உரிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.

 

  1. நாட்டில் உள்ள நக்சல் தீவிரவாதத்தை ஒழிப்பதற்கு எனது அரசு உறுதி பூண்டுள்ளது. இதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக குறிப்பிடத் தக்க வெற்றியும் கிடைத்துள்ளது. நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் எல்லை, தொடர்ச்சியாகக் குறைந்து வருகிறது. வரும் ஆண்டுகளில் இதில் வளர்ச்சித் திட்டங்கள் முடுக்கிவிடப்படும். அத்திட்டங்கள் அங்கு வசிக்கும் பழங்குடியின சகோதர சகோதரிகளுக்குப் பலன் அளிக்கும்

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. எனது அரசாங்கம், நமது ராணுவம், ஆயுதப் படைகள் ஆகியவற்றை நவீனமயமாக்கும் பணியை வேகமாக மேற்கொண்டு வருகிறது. இந்தியா முதல் முறையாக ரஃபேல் (Rafale) போர் விமானத்தை விரைவில் பெற இருக்கிறது. அதே போன்று அப்பாச்சே (Apache) ரக ஹெலிகாப்டர்களையும் வாங்க உள்ளேம்.

 

  1. இந்தியாவில் தயாரிப்போம் (Make in India) திட்டத்தின் கீழ் நவீன ராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்வதற்கு அரசு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது. நவீன துப்பாக்கிகள், பீரங்கிகள், டாங்கிகள், போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது என்ற கொள்கை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது. பாதுகாப்பு தாழ்வாரங்கள் (Defence Corridors) தமிழ்நாட்டிலும் உத்தரப்பிரதேசத்திலும் அமைக்கப்படுவது இந்தக் கோட்பாட்டுக்கு வலுவூட்டும். நமது பாதுகாப்புத் தேவைகளை நிறைவேற்றும் சமயத்தில் பாதுகாப்பு கருவிகள் ஏற்றுமதியும் ஊக்குவிக்கப்படும்.

 

  1. ராணுவ வீரர்களுக்கும், உயிர்துறந்த வீரர்களுக்கும் அளிக்கப்படும் மரியாதை,  பாதுகாப்புப் படையினரிடையே சுயமரியாதையையும் ஊக்கத்தையும் அதிகரிக்கச் செய்கிறது. நமது ராணுவத் திறமையையும் வலுப்படுத்துகிறது.  நமது ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினரின் நலன்களைக் காக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படுகின்றன. “ஒரே பதவி ஒரே ஓய்வூதியம்” (One Rank One Pension) என்ற திட்டத்தின் மூலம் ஓய்வு பெற்ற படைவீரர்களுக்கு ஓய்வூதிய அதிகரிப்பு, சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் ஆகியவை மூலம் அவர்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

  1. இந்தியா விடுதலை பெற்று 70 ஆண்டுகள் கழித்து  தில்லி, இந்தியா கேட் அருகில் மத்திய அரசால் அமைக்கப்பட்டுள்ள தேசிய போர் நினைவுச் சின்னம் (National War Memorial ), உயிர் நீத்த மாவீரர்களுக்கு நன்றியோடு நாடு செலுத்தும் அஞ்சலியாகும். அதே போல் நாட்டைப் பாதுகாப்பதில், உயிர் துறந்த காவல் துறையினரைப் போற்றும் வகையில் எனது அரசு தேசிய காவல்துறையினர் நினைவுச் சின்னத்தை (National Police Memorial) அமைத்துள்ளது.

 

மாண்புமிகு உறுப்பினர்களே,

 

  1. வரலாற்றிலிருந்து பெறப்படும் உத்வேகம், எதிர்காலத்தில் இந்தியாவைக் கட்டமைக்க வழிகாட்டுகிறது. தேசத்தைக் கட்டியெழுப்பிய அந்த மாவீரர்களை நன்றியோடு நினைவு கூர்வதற்காக இத்தகைய நினைவுச் சின்னங்களைப் பாதுகாப்பது நமது கடமை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதைப் போன்று பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்துள்ளன. மகாத்மா காந்தியின் வரலாற்றுச் சிறப்புள்ள தண்டி யாத்திரையைப் போற்றும் அருங்காட்சியகம் (Dandi Museum), இரும்பு மனிதர் சர்தார் வல்லப பாய் பட்டேலுக்கு பிரம்மாண்டமான சிலை எழுப்பி, “ஒற்றுமையின் சிலை” (Statue of Unity) எனப் பெயரிட்டு போற்றப்படுகிறது. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், அவருடன் இணைந்து நாட்டுக்காக பாடுபட்ட வீரர்களின் நினைவாக தில்லி செங்கோட்டையில் கிரந்தி மந்திர் (Kranti Mandir) என்ற நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. பாபா சாகேப் அம்பேத்கர் பவுத்த மதத்தைத் தழுவிய இடமான தில்லி, அலிப்பூர் சாலையில் உள்ள 26-ஆம் எண் இல்லம், தேசிய நினைவில்லமாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர்களின் பங்களிப்பை நினைவுபடுத்திப் போற்றும் வகையில் ஒரு நினைவுச் சின்னம் தில்லியில் அமைக்கப்பட்டு வருகிறது.

 

  1. சர்தார் பட்டேலால் உத்வேகம் பெற்றுள்ள எனது அரசு “ஒரே இந்தியா சிறந்த இந்தியா” (Ek Bharat, Shreshtha Bharat) என்ற கோட்பாட்டை வலுப்படுத்த உறுதி பூண்டுள்ளது. அதற்காக,  தேசிய லட்சியங்கள், மண்டல லட்சியங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது. இவற்றை எட்டுவதற்காக அனைத்து விதமான விவாதங்கள், கருத்துரையாடல்களுக்கும் ஊக்கம் அளிக்கப்படும். அனைவரின் மேம்பாடு, அனைவரின் உயர்வு, அனைவரின் நம்பிக்கை (Sabka Sath, Sabka Vikas aur Sabka Vishwas) என்ற கொள்கையின் வழிகாட்டுதலின்படி இந்தியாவின் மகத்தான வளர்ச்சியில் எந்த  ஒரு இந்தியக் குடிமகனும் பின்தங்கியிருக்கக் கூடாது என்பதில் எனது அரசு உறுதியாக இருக்கிறது.

 

  1. விடுதலைக்கான மற்றும் அதற்காக தியாகங்கள் செய்யும் விருப்பமும் எப்போதும் மறைந்து விடவில்லை. 1942-ல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவக்கப்பட்டபோது, மொத்த தேசமும் நாடு விடுதலையடைய வேண்டும் என்று உறுதிபூண்டது. அதற்காக தமது வாழ்க்கையை தியாகம் செய்யவும் மக்கள் தயாராக இருந்தனர். நமது நாட்டு மக்களின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பின்னே விடுதலைப் போராட்டத்திற்கு பங்களிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது.  1947-ல் நமது ஒட்டுமொத்த உணர்வின் வலிமையால் நாம் விடுதலை பெற்றோம்.

 

  1. இன்று நாம் அனைவரும், திரும்பவும் வரலாற்றை உருவாக்கும் தருணத்தில் இருக்கிறோம். புதிய சகாப்தத்திற்கான புதிய இயக்கத்தை துவங்கும் முனைப்பில் இருக்கிறோம். இன்று நாம் எடுக்கும் உறுதியானது, இந்தியா தனது சுதந்திர தின நூற்றாண்டை கொண்டாடும் தருணத்தில், அதாவது 2047 ஆம் ஆண்டில் இந்தியாவின் வடிவத்தைத் தீர்மானிக்கும்.

 

  1. சுதந்திரத்திற்கு பிறகு, இன்று நமது நாடு 72 ஆண்டு கால பயண அனுபவங்களுடன் விளங்குகிறது. இந்த அனுபவங்களிலிருந்து கற்றுக் கொள்வதால் மட்டுமே நமது நாடு முன்னேறி செல்கிறது. இந்தியா சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டை நாம் கொண்டாடும்போது, அதாவது 2022-ல் புதிய இந்தியாவை உருவாக்கும் கடப்பாட்டுடன் நாம் முன்னேறி செல்ல வேண்டியிருக்கிறது. சுதந்திரமடைந்த 75-வது ஆண்டில், புதிய இந்தியாவில்:
  1. விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியிருக்கும்
  2. ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் உறுதியான கூரையுடனான வீடு இருக்கும்.
  3. ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் தூய்மையான எரிபொருள் கிடைக்கும்.
  4. ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் மின்சார இணைப்பு கிடைக்கும்.
  5. ஏழை மக்களுக்கு திறந்தவெளியில் கழிப்பறையாக பயன்படுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இருக்காது.
  6. ஏழை மக்கள் ஒவ்வொருவருக்கும் மருத்துவ வசதி கிடைக்கும்.
  7. நம் நாட்டில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் சாலை வசதி இருக்கும்.
  8. தடையில்லாமல், தூய்மையாக கங்கை நதி பாயும்.
  9. மாநிலங்களுடன் இணைந்து இந்தியாவின் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலரை எட்டியிருக்கும்.
  10. உலகத்தின் 3 பெரிய பொருளாதாரங்களில் இணைவதை நோக்கி இந்தியா முன்னேறியிருக்கும்.
  11. உள்நாட்டு ஆதார வளங்களை மட்டுமே பயன்படுத்தி, விண்வெளியில் ஒரு இந்தியர் மூவர்ணக் கொடியை பறக்க விடுவார்.
  12. உலகளாவிய வளர்ச்சிக்கான தலைமையை புதிய உற்சாகத்தோடும், நம்பிக்கையோடும் இந்தியா அளிக்கும்.

 

  1. பொதுத் துறைக்கும், அரசுக்குமான இடைவெளி குறைக்கப்பட்டு, பொதுத் துறையுடனான கூட்டுறவு உறுதிப்படுத்தப்பட்டால் நமது நாட்டு மக்கள், அரசு திட்டங்களை மாபெரும் இயக்கங்களாக மாற்ற முடியும். நாட்டை மாற்றக் கூடிய இலக்குகளை அடைவதற்கு இதுவே வழியாகும். இந்த அணுகுமுறையை கடைபிடிப்பதால், “பெண் குழந்தையைப் பாதுகாப்போம், பெண் குழந்தைக்கு கற்பிப்போம்”, “தூய்மை இந்தியா திட்டம்” ஆகியவை மாபெரும் இயக்கங்களாக உருமாறியுள்ளன. மக்கள் பங்கேற்பின் வலிமையால் புதிய இந்தியாவின் நோக்கத்தை நாம் அனைவரும் எட்டுவோம்.

 

  1. அரசியல் கட்சிகளும், மாநிலங்களும், 130 கோடி நாட்டு மக்கள் அனைவரும் இந்தியாவின் ஒருங்கிணைந்த மற்றும் விரைவுபடுத்தப்பட்ட வளர்ச்சியில் உறுதியுடன் இருக்கிறார்கள் என்று எனது அரசு நம்புகிறது. நமது துடிப்பான ஜனநாயகம் போதுமான அளவு பக்குவப்பட்டுள்ளது. கடந்த பல ஆண்டுகளாக நாட்டின் ஏதேனும் ஒரு பகுதியில் அடிக்கடி தேர்தல்கள் நடைபெற்று வந்ததால் நமது வளர்ச்சித் திட்டங்களின் வேகமும், தொடர்ச்சியும் பாதிக்கப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய விஷயங்களில் நமது நாட்டு மக்கள் தமது அறிவைப் பயன்படுத்தி தெளிவான தீர்ப்பை அளித்துள்ளனர். “ஒரு நாடு – ஒரே நேரத்தில் தேர்தல்கள்” என்பது அவசிய தேவையாக உள்ளது. இது வளர்ச்சியை விரைவுபடுத்தி நமது நாட்டு மக்களுக்கு பலனளிக்கும். இந்த அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டால், அனைத்து அரசியல் கட்சிகளும் தமது சித்தாந்தங்களுக்கு ஏற்ப, தமது ஆற்றலை வளர்ச்சிக்காகவும், பொதுமக்கள் நலனுக்காகவும் சிறப்பாக பயன்படுத்த முடியும். எனவே நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் “ஒரு நாடு – ஒரே நேரத்தில் தேர்தல்கள்” என்ற வளர்ச்சிக்கான திட்டம் குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
  2. இந்த ஆண்டானது, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் ஏற்றுக் கொண்டு 70 ஆண்டுகள் ஆவதைக் குறிக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினராக, நீங்கள் அனைவரும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கேற்ப உங்களது கடமைகளை உண்மையான நம்பிக்கையுடன் கடைபிடிப்பதாக உறுதி ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். நம் அனைவரையும் விட அரசியல் அமைப்பு உயர்ந்தது. நமது சமுதாய மற்றும் பொருளாதார நோக்கங்களை அடைவதற்கு அரசியல் அமைப்பு ரீதியிலான முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்று நமது அரசியல் அமைப்பின் தலைமை சிற்பி பாபா சாகேப் டாக்டர் பீம்ராவ் அம்பேத்கர் கூறியிருக்கிறார்.

 

  1. அனைத்து குடிமக்களுக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான நீதியை உறுதி செய்வதற்கும், சுதந்திரத்தையும், சமத்துவத்தையும், பெற்றுத் தருவதற்கும், அனைவரிடையேயும் சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கும், தனி நபர் மாண்பை உறுதி செய்வதற்குமான வழிகாட்டுதலை நமது அரசியல் அமைப்பு அளிக்கிறது.

 

  1. மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்களான நீங்கள் அனைவரும், நாடாளுமன்றவாதிகளாக உங்கள் கடமைகளை நிறைவேற்றும் போது, நமது அரசியல் அமைப்பின் இலக்குகளை அடைவதற்கான மகத்தான பங்கையும் அளிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த வகையில் புதிய இந்தியாவை உருவாக்குவதற்கான வீரியமான பங்காற்றுவீர்கள்.

 

  1. இந்த நாட்டின் குடிமக்களாகவும், பொது மக்களின் பிரதிநிதிகளாகவும் நமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாம் அனைவரும் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே நமது நாட்டு மக்களை, குடிமக்களாக தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு நாம் ஊக்குவிக்க முடியும்.

 

  1. காந்தியடிகளின் அடிப்படையான மந்திரத்தை எப்பொழுதும் நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நான் அறிவுறுத்துகிறேன். நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும், சமுதாயத்தின் நலிந்த மற்றும் ஏழை மக்களுக்கு ஏற்படும் தாக்கத்தை பொறுத்தே அமைய வேண்டும் என்று அவர் கூறினார். வாக்காளரானவர் தமது சொந்தப் பணிகளை ஒதுக்கி வைத்து விட்டு, தனது சிரமங்களை பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களித்து இந்த நாட்டுக்கான தனது பொறுப்பை நிறைவேற்றுகிறார் என்பதை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டும்.  அந்த வாக்காளரின் விருப்பங்களை நிறைவேற்றுவது உங்களது முன்னுரிமையாக இருக்க வேண்டும்.

 

  1. புதிய இந்தியாவை கட்டமைக்கும் பணியில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.  அடுத்த ஐந்தாண்டுகளுக்கு உங்கள் கடமைகளை உள்ளார்ந்த நேர்மையுடன் மேற்கொள்ள வேண்டும். மீண்டும் ஒருமுறை உங்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜெய் ஹிந்த்!

 

                                                          ****


(Release ID: 1575080) Visitor Counter : 968