பிரதமர் அலுவலகம்

தொலைபேசி மூலம் பிரதமருக்கு குவிந்த வாழ்த்துகள்

Posted On: 26 MAY 2019 5:05PM by PIB Chennai

இந்திய பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியை,  பாகிஸ்தான் பிரதமர் திரு இம்ரான்கான், மாலத்தீவின் முன்னாள் அதிபர் திரு முகமது நஷீத் மற்றும் நேபாள முன்னாள் பிரதமர் திரு மாதவ் நேபாள் ஆகியோர் இன்று  (26.05.2019) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தனர். 

 தம்மை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்தமைக்காக பாகிஸ்தான் பிரதமருக்கு திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார். அண்டை நாடு முதலில் என்ற இந்தியாவின் கொள்கையை நினைவு கூர்ந்த பிரதமர் திரு. மோடி, வறுமையை ஒழிப்பதில் கூட்டாக செயல்படுவோம் என  பாகிஸ்தான் பிரதமருக்கு தாம் ஏற்கனவே தெரிவித்த ஆலோசனையையும் சுட்டிக் காட்டினார். தெற்காசிய பிராந்தியத்தில், அமைதி, முன்னேற்றம் மற்றும் வளம் ஏற்பட ஏதுவாக, இருநாடுகள் இடையேயான ஒத்துழைப்பை  மேம்படுத்த, நம்பிக்கையையும் வன்முறை, தீவிரவாதமற்ற சூழலையும் உருவாக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.

பிரதமர் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றிக்காக  வாழ்த்துத் தெரிவித்த மாலத்தீவு முன்னாள் அதிபர் திரு முகமது நஷீத்,  மாலத்தீவு- இந்தியா இடையேயான நட்புறவு, அண்மைக் காலத்தில் மேம்பட்டிருப்பதாகக் கூறினார். தெற்காசிய பிராந்தியத்தில் பயங்கரவாதம் மற்றும் மதவாத சக்திகளை எதிர்த்துப் போரிடுவதில்  இருநாடுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். அவருக்கும் நன்றி தெரிவித்த பிரதமர், பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்காகவும், இருதரப்பு நன்மைக்காகவும், இருநாடுகளிடையேயான ஒட்டுமொத்த ஒத்துழைப்புகளை மேலும் வலிமைப்படுத்த உறுதிபூண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

தாம் சார்ந்துள்ள கட்சி மற்றும் கூட்டணியின் வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் வெற்றிக்கு வித்திட்டதற்காக, பிரதமர் மோடிக்கு நேபாள முன்னாள் பிரதமர் திரு மாதவ் நேபாள், தமது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.  உலக அரங்கில் இந்தியா முன்னணி சக்தியாக உருவெடுத்து வருவது, தெற்காசிய பிராந்தியத்தைக் குறிப்பிடத்தக்க அளவுக்கு மேம்படச் செய்ய உதவும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். திரு மாதவ் நேபாளின் அன்பான வாழ்த்துகளுக்காக நன்றி தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா – நேபாளம் இடையேயான வரலாற்று ரீதியான பன்முக நட்புறவை மேலும் மேம்படுத்த தாம் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார்.

--------



(Release ID: 1572659) Visitor Counter : 131