பிரதமர் அலுவலகம்

வாரணாசி, கான்பூர், காஜியாபாத் நகரங்களுக்கு பிரதமர் நாளை பயணம்

வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயில் பாதைக்கான அடிக்கல் நாட்டுகிறார்
லக்னோ மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்படவுள்ளது
கான்பூர் நகரில் பான்கி மின்சார நிலையம் திறக்கப்படவுள்ளது மற்றும் ஆக்ரா நகர மெட்ரோ ரயில் திட்ட்த்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டவிருக்கிறார்
காஜியாபாத் நகரில் ஹிண்டன் விமான நிலைய மக்கள் முனையம் தொடங்கவிருக்கிறது
காஜியாபாத் நகரில் டெல்லி-காஜியாபாத்-மீரட் நகர்களுக்கு இடையிலான துரித ரயில் திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார்

Posted On: 07 MAR 2019 5:48PM by PIB Chennai

2019 மார்ச் 8-ம் தேதியன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாரணாசி, கான்பூர், காஜியாபாத் ஆகிய நகர்களுக்கு பயணம் மேற்கொள்ள விருக்கிறார். இந்த மாநிலத்திற்கான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் தொடங்கி வைக்கவுள்ளார்.

வாரணாசி:

வாரணாசியில் பிரதமர் காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்வார். காசி விஸ்வநாதர் கோவிலுக்குச் செல்லும் பாதையை வலுப்படுத்துவது; அழகுபடுத்துவது ஆகிய பணிகளுக்கான திட்டத்திற்கு அவர் அடிக்கல் நாட்டுவார். இத்திட்டம் மேற்கொள்ளப்படும் இடத்தையும் பிரதமர் பின்னர் பார்வையிடுவார்.

வாரணாசியில் உள்ள தீன் தயாள் ஹஸ்தகலா சங்குலில் பெண்கள் வாழ்வாதாரம் குறித்த தேசியக் கூட்டத்திலும்  பிரதமர் பங்கேற்பார். ஐந்து மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு பாராட்டுப் பத்திரங்களையும் அவர் வழங்குவார். இந்த மகளிர் சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தங்களின் அனுபவங்களை பிரதமருடன் பகிர்ந்து கொள்வார்கள்.

பயனாளிகளுக்கு மூன்று சக்கர மின்சார வண்டி, சூரிய சக்தியின் மூலம் இயங்கும் ராட்டை, தேன் சேகரிக்கும் கூடுகள், காசோலைகள் ஆகியவற்றை பிரதமர் விநியோகிப்பார்.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தேசிய கிராமப்புற வாழ்வாதார இயக்கத்தின் தீன் தயாள் அந்த்யோதயா திட்டத்தின்   மூலம் பயனடைந்துள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் ‘பாரத் கே வீர்’ நிதிக்கு தங்களின் பங்களிப்பாக பிரதமரிடம் காசோலையை வழங்கவுள்ளன.

ஒரு பொதுக்கூட்டத்திலும் பிரதமர் உரையாற்றுவார்.

கான்பூர் நகரில்

புதிய 660 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி - விநியோகத் திட்டமான பான்கி மின் உற்பத்தி நிலையத்தை பிரதமர் தொடங்கி வைப்பார். லக்னோ மெட்ரோ ரயில் திட்டத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். லக்னோவில் உள்ள சவுத்ரி சரண் சிங் விமான நிலையத்தை ஒட்டிய ரயில் நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் சேவையை காணொளிக் காட்சியின் மூலம் அவர் தொடங்கி வைப்பார். ஆக்ரா மெட்ரோ ரயில் திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார்.

பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வீடுகளுக்கான சாவிகளையும் பிரதமர் வழங்குவார்.

பின்னர், அங்கு கூடியிருப்பவர்களிடையே பிரதமர் உரையாற்றுவார். 

காஜியாபாத் நகரில்

மெட்ரோ சேவையின் தில்ஷாத் கார்டன் – ஷாஹீத் ஸ்தல் ( புதிய பேருந்து மையம்) இடையேயான சேவையை பிரதமர் தொடங்கி வைப்பார். ஷாஹீத் ஸ்தல் மெட்ரோ நிலையத்திலிருந்து மெட்ரோ ரயில் சேவையை அவர் கொடியசைத்துத் தொடங்கி வைப்பார். சாலைக்கு மேலாகச் செல்லும் இந்த மெட்ரோ சேவைப் பிரிவில் 8 ரயில் நிலையங்கள் உள்ளன. இது காஜியாபாத் மற்றும் புது டெல்லி நகர்களில் வசிக்கும் மக்களுக்கு வசதியான போக்குவரத்து வசதியை வழங்கும் என்பதோடு, போக்குவரத்து நெருக்கடியையும் பெருமளவிற்குக் குறைக்கும்.

காஜியாபாத் நகரில் உள்ள ஹிண்டன் விமான நிலைய மக்கள் முனையத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். மேற்கு உத்தரப் பிரதேசம், தேசிய தலைநகர் பகுதிய் ஆகியவற்றைச் சேர்ந்த பயணிகள் ஹிண்டனில் உள்ள புதிய விமான நிலையத்திலிருந்து செயல்படும் உள்நாட்டு விமான சேவைகளின் மூலம் பயனடைவார்கள்.

டெல்லி- காஜியாபாத்- மீரட் ஆகிய நகரங்களுக்கு இடையிலான துரித ரயில்பாதை திட்டத்திற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டுவார். இந்த பிரதேச துரித ரயில் சேவை அமைப்பு அதிவேகத்துடனும் தொடர்ச்சியான வகையிலும் செயல்படவுள்ளது. இப்பகுதியின் போக்குவரத்து வசதிகளை பெருமளவிற்கு இது மேம்படுத்தும் என்பதோடு ஏராளமான வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கும்.

காஜியாபாத் பகுதியில் கல்வி, வீட்டுவசதி, குடிநீர் வசதி, துப்புரவு வசதி, கழிவுநீர் மேலாண்மை ஆகியவை குறித்த பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைப்பார்.

பல்வேறு திட்டங்களின் பயனாளிகளுக்கு அவர் சான்றிதழ்களை வழங்குவார்.

அதன்பின்பு, பொதுமக்களிடையே அவர் உரையாற்றுவார். 

 

 

*******

 



(Release ID: 1568345) Visitor Counter : 164