பிரதமர் அலுவலகம்

காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் உரை

Posted On: 08 MAR 2019 11:56AM by PIB Chennai

வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். அங்கு மேற்கொள்ளப்படவுள்ள பணிகளை தொடங்கி வைப்பதன் அடையாளமாக நடைபெற்ற பூமி பூஜைக்குப்பிறகு, காசி விஸ்வநாதர் கோயிலில் கூடியிருந்த பக்தர்களிடையே அவர் உரையாற்றினார். அப்போது, காசி விஸ்வநாதர் ஆலய பணிகளை மேற்கொள்வதால் தாம் ஆசீர்வதிக்கப்பட்டு இருப்பதாக கருதுவதாக அவர் கூறினார். இந்தப் பணிகளில், அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை நிறைவேற்றும் அதிகாரிகளுக்கு தமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார். கோயில் சுற்றுப்புறப் பகுதிகளில் நிலம் வைத்திருந்து, அதனை இந்த திட்டத்திற்காக கையகப்படுத்துவதற்கு அனுமதித்த நில உரிமையாளர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

காசி விஸ்வநாதர் ஆலயம் பல நூற்றாண்டுகளாக பல்வேறு ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து இன்றைக்கும் உறுதியுடன் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு ராணி அஹில்யா பாய் ஹோல்கர், காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பல்வேறு சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டதை நினைவுகூர்ந்த அவர், இதற்காக பாராட்டும் தெரிவித்தார்.

அதன் பிறகு ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், இந்த கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் மீது போதிய அக்கறை செலுத்தவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

காசி விஸ்வநாதர் ஆலயத்தைச் சுற்றியுள்ள 40 கோயில்கள், அவ்வப்போது ஆக்கிரமிக்கப்பட்டு வந்ததாக கூறிய பிரதமர், தற்போது அந்த ஆக்கிரமிப்புகளிலிருந்து கோயில் நிலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். ஒட்டுமொத்த கோயில் வளாகத்தையும் புதுப்பிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்தப் பணிகளின் பலனை கண்கூடாக காணலாம் என்றும் கூறினார். கங்கை நதிக்கும் காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கும் இடையே நேரடி இணைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சீரமைப்புப் பணிகள் பிற பகுதிகளில் உள்ள கோவில்களில்  மேற்கொள்ளப்படும் பணிகளுக்கு ஒரு முன் மாதிரியாக அமைவதுடன், காசிக்கு சர்வதேச அளவில் ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

                              ****



(Release ID: 1568211) Visitor Counter : 167