பிரதமர் அலுவலகம்

பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நாணயங்களின் புதிய தொடரை பிரதமர் வெளியிட்டார்

Posted On: 07 MAR 2019 12:09PM by PIB Chennai

பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள் பயன்படுத்துவதற்கு உகந்த நாணயங்களின் புதிய தொடரை புதுதில்லியில் இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி வெளியிட்டார். புதிய தொடரின் ஒரு பகுதியாக ரூ.1, ரூ.2, ரூ.5, ரூ.10, ரூ.20 ஆகிய மதிப்பிலான நாணயங்கள் வெளியிடப்பட்டன.

பார்வைத் திறன் குறைபாடு உடைய குழந்தைகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு எண் 7, லோக் கல்யாண் மார்கில் நடந்த நிகழ்ச்சியில் இந்த நாணயங்கள் வெளியிடப்பட்டன. இவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி தெரிவித்த பிரதமர், அவர்களோடு கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு கிட்டியதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

புதிய தொடரை வெளியிட்ட பிரதமர், “அடைய வேண்டிய இலக்கு, பலன்கள் கடைக்கோடி நபரையும் சென்றடைதல்”  என்கிற தொலைநோக்கால், தமது அரசு வழிகாட்டப்படுவதாகக் கூறினார்.  அந்தத் தொலைநோக்கு பார்வையை கருத்தில் கொண்டு நாணயங்களின் புதிய தொடர் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டதாக அவர் கூறினார்.

பல வேறுபட்ட தன்மைகளைக் கொண்ட புழக்கத்தில் உள்ள புதிய நாணயங்கள் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்களுக்கு உதவியாக இருக்கும் என்று பிரதமர் கூறினார். நாணயங்களின் புதிய தொடர் பார்வை குறைபாடு உடையவர்களுக்கு உதவிட வழிவகுப்பதோடு அவர்களிடையே தன்னம்பிக்கையை உருவாக்கும் என்றார் பிரதமர்.

மாற்றுத்திறன் கொண்ட சமுதாயத்தினரின் நன்மைக்காக மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் குறிப்பிட்டார். ஒவ்வொரு திட்டமும் மாற்றுத்திறன் கொண்டவர்களின் பயன்பாட்டிற்கு உகந்ததாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் மத்திய அரசுக்கு இருப்பதாக அவர் கூறினார்.

சிறந்த முறையில் வடிவமைத்ததற்காக, தேசிய வடிவமைப்பு நிறுவனத்திற்கும், நாணயங்களை அறிமுகம் செய்ததற்கு இந்திய பாதுகாப்பு அச்சடிப்பு மற்றும் நாணய உருவாக்கக் கழகத்திற்கும், நிதியமைச்சகத்திற்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார்.

பிரதமருடனான கலந்துரையாடலின்போது நாணயங்களின் புதிய தொடரை அறிமுகப்படுத்தியதற்காக குழந்தைகள் பிரதமருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நாணயங்கள் தங்களது அன்றாட வாழக்கையை மேலும் எளிமைப்படுத்தும் என்றும் அவர் கூறினர். பார்வைத்திறன் குறைபாடு உடையவர்கள் நாணயங்களை பயன்படுத்துவதை மேலும் எளிமையாக்குவதற்கு பல்வேறு புதிய கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளன.

குறைந்த மதிப்பிலான நாணயங்களிலிருந்து உயர் மதிப்பிலான நாணயங்கள் வரை அவற்றின் அளவும் எடையும் வேறுபடுமாறு அமைக்கப்பட்டிருக்கின்றன. புதிதாக உருவாக்கம் கொள்ளப்பட்டுள்ள 20 ரூபாய் நாணயம் 12 பக்கங்களைக் கொண்டதாகவும் ரம்பப் பற்கள் இல்லாததாகவும் இருக்கும். மற்ற நாணயங்கள் வட்ட வடிவம் கொண்டவையாக இருக்கும்.

நிதியமைச்சர் திரு.அருண்ஜேட்லி, நிதித்துறை இணையமைச்சர் திரு.பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

                              *****



(Release ID: 1567908) Visitor Counter : 232