பிரதமர் அலுவலகம்

பிரதமர் கன்னியாகுமரியில் வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

Posted On: 01 MAR 2019 5:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மதுரைக்கும் சென்னைக்கும் இடையேயான தேஜஸ் விரைவு ரயிலை இன்று (01.03.2019) கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கன்னியாகுமரியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சியில் ராமேஸ்வரத்திற்கும், தனுஷ்கோடிக்கும் இடையேயான ரயில் இணைப்பை புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டியதோடு, பாம்பன் பாலத்தை நவீனப்படுத்துவதற்கான திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். மேலும், சில சாலைத்திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

       பொது மக்களிடையே உரையாற்றிய பிரதமர், துணிவான விங் கமாண்டர் அபிநந்தன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை அடைவதாகக் கூறினார்.

       சில நாட்களுக்கு முன்பு காந்தி அமைதி விருதைப் பெற்ற விவேகானந்தா கேந்திரத்திற்கும் அவர் வாழ்த்துக்கள் தெரிவித்தார். 

  தேஜஸ் விரைவு ரயில்  மிக நவீனமான ரயில்களில் ஒன்று என்று தெரிவித்த அவர், “இந்தியாவில் தயாரிப்போம் ” திட்டத்திற்கு அது ஆகச்  சிறந்த எடுத்துக்காட்டு என்றார்.

       50 ஆண்டுகளுக்கு முன்பு 1964-ஆம் ஆண்டில் பேரிடரால் சேதமடைந்த ராமேஸ்வரம் – தனுஷ்கோடி ரயில் தடம் இதுவரை கவனிக்கப்படவில்லை என்றும்  எப்போதும் நடக்காது என்பதைவிட தாமதமாவது பரவாயில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

       பிரதம மந்திரி கிஸான் சம்மான் நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக சுமார் 1.1 கோடிக்கும் கூடுதலான விவசாயிகள் தங்களது வங்கிக் கணக்குகளில் ஏற்கனவே முதல் தவணைத் தொகையை பெற்றிருப்பதாகக் கூறினார். பிப்ரவரி மாதம் ஒன்றாம் தேதியன்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் அதே மாதத்திலேயே  செயல்படுத்தப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார். “24 நாட்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதற்கு நாங்கள் 24 மணி நேரமும் அயராமல் பணியாற்றினோம்” என்று அவர் கூறினார்.  கடினமாக உழைக்கும் விவசாயப் பெருமக்கள், பத்து ஆண்டுகளில் சுமார் 7.5 லட்சம் கோடி ரூபாய் பெற்றிருப்பார்கள் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

       மக்கள் அரசிடமிருந்து நேர்மை, வளர்ச்சி, முன்னேற்றம், வாய்ப்புக்கள் மற்றும் பாதுகாப்பை கோருவதாகப் பிரதமர் கூறினார்.

       பாதுகாப்பு பற்றி பேசுகையில், இந்தியா, பல ஆண்டுகளாக பயங்கரவாதம் எனும் தீமையை எதிர்கொண்டு வருவதாகவும், பயங்கரவாதத்தைப் பொறுத்தவரை, இனி இந்தியா, உதவியற்று இருக்காது என்பதுதான் தற்போதுள்ள வித்தியாசம் என்றும் தெரிவித்தார். தற்போதுள்ளது புதிய இந்தியா என்று குறிப்பிட்ட அவர், இது பயங்கரவாதிகள் இழைத்த பாதிப்பை  வட்டியுடன் திருப்பித்தரும் என்றார். தேசிய பாதுகாப்பைப் பொறுத்தவரை, நாம் முதலில் இந்தியர்கள், இந்தியர்கள் மட்டுமே என்று பிரதமர் கூறினார். 

       ஊழலுக்கு எதிராக மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளையும்  பிரதமர் விரிவாக எடுத்துரைத்தார்

 

----



(Release ID: 1567072) Visitor Counter : 275