பிரதமர் அலுவலகம்

சியோல் அமைதிப் பரிசு பெறும் நிகழ்ச்சியில் பிரதமரின் ஏற்புரை

Posted On: 22 FEB 2019 12:41PM by PIB Chennai

சியோல் அமைதிப் பரிசு கலாச்சார அறக்கட்டளையின் தலைவர் திரு க்வான் ஈ-ஹையாக் அவர்களே

தேசிய அவையின் தலைவர் திரு மூன் ஹி-சங் அவர்களே

கலாச்சாரத் துறை அமைச்சர் திரு டோ ஜாங்க்-வான் அவர்களே

ஐக்கிய நாடுகள் அவையின் முன்னாள் பொதுச் செயலாளர் திரு பான் கி மூன் அவர்களே

சியோல் அமைதிப் பரிசு கலாச்சார அறக்கட்டளையின் பிற உறுப்பினர்களே

மதிப்பிற்குரிய பிரமுகர்களே

அன்பர்களே

நண்பர்களே

நமஸ்கார்! 

आन्योंग
हा-सेयो
योरा-बुन्न
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்

சியோல் அமைதிப்பரிசு எனக்கு வழங்கப்பட்டு இருப்பதை மிகப்பெரிய கவுரவமாக கருகிறேன்.  இந்த விருது தனிப்பட்ட முறையில் எனக்கு சொந்தமானதல்ல, இந்திய மக்களுக்கானது.  கடந்த ஐந்தாண்டுக்கும் குறைவான காலத்தில், 130 கோடி இந்தியர்கள் தமது  வலிமையாலும், திறன்களாலும் சாதித்திருக்கும் வெற்றிக்கு சொந்தமானது. ஆகையால், அவர்கள் சார்பில் இந்த விருதை நான் நன்றியுடன் பெற்றுக் கொள்கிறேன்.  உலகமே ஒரு குடும்பம் என்ற தத்துவத்திற்கு கிடைத்திருக்கும் அங்கீகாரமே இந்த விருது.  போர்க்களத்தில் கூட அமைதியை போதிக்கும் கலாச்சாரத்திற்கு கிடைத்த விருது இது.  மகாபாரதத்தில், போர்க்களத்தில் கிருஷ்ண பகவான் பகவத் கீதை எனும் போதனைகளை அளித்தார்.  நமக்கு பயிற்றுவித்த மண்ணுக்கு சொந்தமானது இந்த விருது. 

ॐ द्यौ: शान्तिरन्तरिक्षं शान्ति, पृथ्वी शान्तिराप: शान्तिरोषधय: शान्ति:।
वनस्पतय: शान्तिर्विश्वे देवा: शान्तिर्ब्रह्म शान्ति,सर्वँ शान्ति:, शान्तिरेव शान्ति, सा मा शान्तिरेधि॥
ॐ शान्ति: शान्ति: शान्ति:॥

இதன் பொருள்:

எங்கும் அமைதி நிலவட்டும், விண்ணிலும், புவியிலும், இயற்கையிலும்,

எங்கும், என்றும் அமைதி நிலவட்டும்.

 

தனிநபர் விருப்பங்களுக்கு அப்பால், சமூக நலனை எப்பொழுதும் முன்நிறுத்தும் மக்களுக்கானது இந்த விருது. மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாள் விழாவை கொண்டாடும் இந்த ஆண்டில் இந்த விருது எனக்கு வழங்கப்படுவதை கவுரவமாகக் கருதுகிறேன்.  இந்த விருதுடன் அளிக்கப்படும் பரிசுப் பணமான 200,000 டாலர் அதாவது ரூ.1,30,00,000-ஐ கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு (நமாமி கங்கா)  அளிக்க விரும்புகிறேன்.  கங்கை நதியை தூய்மை செய்வது, இந்திய மக்கள் அதனை புனிதமாக கருதுகிறார்கள் என்பதற்காக மட்டுமல்ல.  லட்சக்கணக்கான நமது நாட்டு குடிமக்களுக்கு, இந்த நதி, பொருளாதார வாழ்க்கைக்கான ஆதாரமாக உள்ளது.

நண்பர்களே,

1988 ஆம் ஆண்டு சியோலில் நடைபெற்ற 24 ஆவது கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளின் வெற்றியையும், உணர்வையும் குறிப்பதற்காக சியோல் அமைதிப் பரிசு நிறுவப்பட்டது.  இந்த விளையாட்டுப் போட்டிகள் இந்தியாவுக்கு நன்றாகவே நினைவில் இருக்கின்றன.  அவை கொரியப் பண்பாட்டின் உன்னதத்தையும்,  கொரியர்களின் இதமான விருந்தோம்பலையும், கொரியப் பொருளாதாரத்தின் வெற்றியையும் எடுத்துக்காட்டின.  மட்டுமல்ல, உலக அரங்கில் புதிய விளையாட்டு ஆற்றல் கூடம் உருவாகியிருப்பதை கோடிட்டு காட்டியதையும் மறந்து விடக்கூடாது.   உலக வரலாற்றில் இந்த விளையாட்டுப் போட்டிகள் முக்கியமான மைல்கல்லாகும்.  1988-ல்  உலகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருந்த வேளையில் இந்த ஒலிம்பிக் போட்டி நடத்தப்பட்டது.  ஈரான்- ஈராக் போர் அப்போதுதான் நடந்து முடிந்திருந்தது.  அதற்கு முந்தைய ஆண்டில்தான் ஆப்கானிஸ்தான் சூழல் தொடர்பான ஜெனிவா ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  பனிப்போர் நிறைவடைந்து கொண்டிருந்தது.  புதிய பொற்கால சகாப்தம் மலரும் என்ற பெரிய நம்பிக்கை இருந்தது.  குறைந்த காலத்திற்கு அது நடக்கவும் செய்தது.  1988-ல் இருந்ததை விட, பல அம்சங்களில், உலகம் தற்போது சிறந்ததாகவே இருக்கிறது.  உலகளாவிய வறுமை சீராக குறைந்து வருகிறது.    சுகாதாரமும் கல்வியும் மேம்பட்டு வருகின்றன.  இருப்பினும், உலகை அச்சுறுத்தும் பல சவால்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றன.

பழையன சில, புதியவை சில. சியோல் ஒலிம்பிக் போட்டிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு பருவநிலை மாற்றத்திற்கான  முதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இன்று இது மனித இனத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சியோல் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதற்கு சில வாரங்களுக்கு முன் அல்-கொய்தா என்கின்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இன்று முற்போக்குவாதமும், பயங்கரவாதமும் உலகமயமாக்கப்பட்டு, உலகளாவிய அமைதிக்கும் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. மேலும், உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் போதுமான அளவில் தரமான உணவு, உறைவிடம், சுகாதாரம், துப்புரவு, மின்சக்தி மற்றும் அனைத்திற்கும் மேலாக கண்ணியமான வாழ்க்கை இல்லாமல் இன்னமும் இருக்கின்றனர். நாம் சந்திக்கும் துயரங்களுக்கான தீர்வு  கடின உழைப்பில் உள்ளது. இந்தியா தனது பங்கை ஆற்றுகிறது. மனித இனத்தில் ஆறில் ஒரு பங்காக உள்ள இந்திய மக்களின் நலனை மேம்படுத்துவதற்கு நாங்கள் பணியாற்றி வருகிறோம். இன்று இந்தியா வலிமையான பொருளாதார அடிப்படையோடு உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது. நாங்கள்  அறிமுகப்படுத்தியிருக்கும் பெரிய அளவிலான பொருளாதார மாற்றங்களினால் இது சாத்தியமாகியுள்ளது. “இந்தியாவில் தயாரிப்போம்”, “திறன் இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “தூய்மை இந்தியா” ஆகிய முக்கியமான முன்முயற்சிகள், வெளிப்படையாக கண்டுணரும் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கியுள்ளன. நாடெங்கிலும் வளர்ச்சியைப் பரவலாக்கவும், இந்தியாவின் அனைத்து குடிமக்களுக்கும்  வளம் சேர்க்கவும், நாங்கள் உள்ளடக்கிய நிதி முறை,  கடன் கிடைக்கச் செய்தல், டிஜிட்டல் பரிவர்த்தனை, தொலைதூர இணைப்பு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஆதரவு ஆகியவற்றுக்கு முன்னுரிமை தந்துள்ளோம். “தூய்மை இந்தியா” திட்டம் இந்தியாவை தூய்மையாக்குகிறது; 2014-ஆம் ஆண்டில் சுமார் 38 சதவீதமாக இருந்த துப்புரவு விகிதம் தற்போது 98 சதவீதமாகியுள்ளது. சமையல் எரிவாயுத் திட்டம், தூய்மையான சமையல் எரிசக்தியின் மூலமாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கையை முன்னேற்றியுள்ளது. சுகாதார காப்பீட்டுத் திட்டத்தினால், ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடிய  500 மில்லியன் மக்கள் சுகாதாரம் மற்றும் காப்பீடு  பெறுகின்றனர். இது போன்ற முன்முயற்சிகளின் மூலமாக ஐக்கிய நாடுகளின் நீடித்த வளர்ச்சி இலக்குகளை நோக்கி இந்தியா முன்னேறுவதற்கான ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு நாங்கள் பங்களிப்பு வழங்கியுள்ளோம். எங்களது அனைத்து முயற்சிகளிலும், நாங்கள் மகாத்மா காந்தி போதித்தவாறு, நாம் எப்போதோ பார்த்த கடைக்கோடி ஏழை மற்றும் பலவீன மனிதனின் முகத்தை நினைவூட்டிக்கொண்டு நாம் தொடங்கும் திட்டம் இந்த மனிதனுக்கு ஏதேனும் பலன் தருமா என்பதை  வழிகாட்டியாகக் கொண்டுள்ளோம்.

நண்பர்களே,

இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் இந்திய மக்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த உலகத்திற்கும் சிறந்ததாகும். நாம் பெருமளவு இணைக்கப்பட்ட உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 3-வது பெரிய பொருளாதாரம் என்ற முறையில் நமது வளர்ச்சியும், வளமும் உலகளாவிய வளர்ச்சிக்கும், முன்னேற்றத்திற்கும் நிச்சயமாக பங்களிக்கும். அமைதியான ஸ்திரத் தன்மை கொண்ட பொருளாதாரத்தால் இணைக்கப்பட்ட உலகத்தை உருவாக்க நாங்கள் உறுதி கொண்டுள்ளோம்.   சர்வதேச சமுதாயத்தின் பொறுப்புள்ள உறுப்பினர் என்கின்ற முறையில் இந்தியா பருவநிலை மாற்றத்திற்கு எதிரான கூட்டு முயற்சியில் முன்னணியில் உள்ளது. மிகக் குறைந்த அளவிலான கரியமில பதிவுகளின் வரலாற்றைக் கொண்டிருந்தாலும் பருவநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. உள்நாட்டு அளவில் கரியமில வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான தேசிய செயல்திட்ட தொடக்கம், காடுகளின் பரப்பளவை அதிகரித்தல், மற்றும் பாரம்பரிய கரியமில வாயு எரிசக்திக்குப் பதிலாக புதுப்பிக்கக் கூடிய எரிசக்திக்கு மாற்றம்  ஆகியவை செய்யப்பட்டுள்ளன. ஐ.நா. அமைதிப் படைகளைப் பொறுத்தவரை அதிக எண்ணிக்கையிலான ராணுவப் படைகளை வழங்கும் நாடுகளில் ஒன்றாக நாங்கள் இருக்கிறோம். மேலும், கொரிய தீபகற்பத்தின் அமைதிக்கு பங்களிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

தேவைப்படும் தேசங்களுக்கு நாங்கள் எப்பொழுதுமே உதவிக் கரங்களை நீட்டியுள்ளோம். மனித நேயம் மிக்க செயல்களிலும் பேரிடர் நிவாரணப் பணிகளிலும் நாங்கள் பங்கேற்றுள்ளோம். போர் மண்டலங்களில் பாதுகாப்பு தொடர்பான பணிகளை மேற்கோண்டு இந்தியர்கள் மட்டுமின்றி பிற நாட்டு மக்களையும் நாங்கள் மீட்டுள்ளோம். வளர்ந்து வரும் நாடுகளின் சமூகம் சார்ந்த உள்கட்டமைப்பை மேம்படுத்த நாங்கள் எங்களின் வழிகாட்டுக் கொள்கை மூலம் உதவியுள்ளோம். இந்த முயற்சிகளின் மூலம் அனைவரும் உலகமயமாக்குதலின் பயனை அடைவதை உறுதி செய்கிறோம். கடந்த சில ஆண்டுகளாக எனது அரசு, அனைத்து கண்டங்களிலும் உள்ள உறவை மறுசீரமைத்துள்ளது. கிழக்காசியாவைப் பொறுத்தவரை, கிழக்கு நாடுகள் சார்ந்த கொள்கையின் கீழ் கொரியா உட்பட இந்த மண்டலத்தில் உள்ள பிற நாடுகளுடனான எங்களின் உறவை மேம்படுத்தி உள்ளோம். எங்களின் அணுகுமுறை அதிபர் மூனின் புதிய கிழக்கு கொள்கையிலும் எதிரொலித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.

நண்பர்களே,

பல காலமாக இந்தியா அமைதிக்கான நாடாக உள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக இந்திய மக்கள் அமைதி மற்றும் நல்லிணக்கம் சார்ந்த வாழ்க்கை முறையைப் பின்பற்றி வந்துள்ளனர். நூற்றுக்கணக்கான மொழிகள், வட்டார பேச்சு மொழிகள், பல்வேறு மாநிலங்கள் மற்றும் முக்கிய மதங்கள் என உலகளவில் பல்வேறு வேறுபாடுகளை கொண்டுள்ள நாடாக இந்தியா இருப்பது பெருமை அளிக்கிறது. அனைத்து விதமான நம்பிக்கைகளும், சமூகத்தினரும் செழிக்கும் நாடாக இந்தியா உள்ளது என்பது எங்களுக்கு பெருமை தருகிறது. பொறுமை மட்டுமின்றி பல்வேறு கலாச்சாரங்களை கொண்டாடும் சமூகமாக நாங்கள் இருப்பது பெருமைக்கு உரிய விஷயமாக உள்ளது.

நண்பர்களே,

கொரியாவைப் போல் இந்தியாவும் எல்லை கடந்த தாக்குதலின் வலியை அனுபவித்துள்ளது. அமைதியான, வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள எங்களின் பெரும் முயற்சிகளை எல்லை கடந்த தாக்குதல் தகர்த்துள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லைக் கடந்த தீவிரவாதத்தினால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தேசங்களும் எல்லைகளுக்கு மரியாதை அளிக்காத  இந்த அச்சுறுத்தலை இன்று சந்தித்து வருகின்றன. மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒருங்கிணைந்து, தீவிரவாத அமைப்புகளையும், அவர்களுக்கு நிதி மற்றும் பிற ஆதரவுகளை வழங்கும் நபர்களை முழுவதுமாக அழிக்கவும், தீவிரவாதம் தொடர்பான நம்பிக்கைகளையும், பிரச்சாரங்களையும் எதிர்கொள்ள வேண்டிய நேரம் வந்து விட்டது.  இதனை செய்வதன் மூலம் மட்டுமே, வெறுப்பை நல்லிணக்கத்தின் மூலம், அழிவை வளர்ச்சி மூலம், தீவிரவாதமும் மற்றும் பகை உணர்வு கொண்ட இடங்களை அமைதிக்கான அடையாளமாக மாற்ற முடியும்.

நண்பர்களே,

கொரியா கடந்த ஆண்டு வளர்ச்சிப் பாதையில் அடைந்துள்ள முன்னேற்றம் மனதை நெகிழ வைக்கிறது. காலம் காலமாக நிலவி வரும் அவநம்பிக்கையை எதிர்கொள்ள எடுக்கப்பட்ட முயற்சிகளிலும் டி.பி.ஆர்.கே. மற்றும் சர்வதேச சமூகத்தினரிடையே இருந்த சந்தேகங்களைத் தகர்த்து, அவர்களை கலந்துரையாடலில் பங்கேற்க வைத்த அதிபர் மூனின்  பங்கு பாராட்டுக்குரியது.

பிரபல கொரிய பழமொழியின்படி:

ஷிஷாகி பனிதா,

“சிறந்த ஆரம்பம் பாதி போர்க்களத்தை தாண்டியதாகும்”

கொரிய மக்களின் தொடர் முயற்சியினால் கொரியாவில் விரைவில் அமைதி நிலவும் என்று நான் நம்புகிறேன். நண்பர்களே, 1988 ஒலிம்பிக்ஸ் போட்டியின் பாடலைக் குறிப்பிட்டு எனது உரையை முடிக்க விரும்புகிறேன். ஏனென்றால் இந்தப் பாடல் நாளை நம் அனைவருக்கும் சிறந்த தினமாக அமைய வேண்டும் என்ற தற்போதைய நிலைமையை மிக அழகாக உணர்த்துகிறது: இந்த உலகை நாம் வாழ்வதற்கான சிறந்த இடமாக மாற்ற நாடுகள் கடந்து, நாம் கையோடு கை சேர்த்து துணை நிற்போம்.

கம்சா ஹம்நிதா!

நன்றி.

மிக்க நன்றி.

 

*************



(Release ID: 1565956) Visitor Counter : 245