பிரதமர் அலுவலகம்

தமிழகத்தின் திருப்பூருக்கு பிரதமர் வருகை

திருப்பூரில் ஈஎஸ்ஐ நிறுவனத்தின் பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டினார்
சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்தின் 45 கிலோமீட்டர் தொலைவுக்கான முதற்கட்ட திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்தது
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்

Posted On: 10 FEB 2019 4:04PM by PIB Chennai

தமிழகத்தின் திருப்பூருக்கு வருகை தந்த பிரதமர் திரு நரேந்திர மோடி, மாநிலத்தில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கிவைத்தார்.

திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் கிராமத்தில் நடைபெற்ற விழாவில், பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கிவைத்தார்.

திருப்பூரில், தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகத்தின் (ESIC) பன்னோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.  100 படுக்கை வசதி கொண்ட இந்த அதிநவீன மருத்துவமனை, திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், ஈஎஸ்ஐ திட்டத்தில் இணைந்துள்ள சுமார் ஒருலட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மருத்துவத் தேவைகளை பூர்த்தி செய்வதாக அமையும்.  இதற்குமுன் இந்தத் தொழிலாளர்கள் திருப்பூர் நகரில் உள்ள இரண்டு ஈஎஸ்ஐ மருந்தகங்கள் மூலம் மட்டுமே பயனடைந்து வந்தனர்.   அதிநவீன மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர், 50 கிலோமீட்டர் தூரம் பயணம் செய்து கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குத்தான் செல்ல வேண்டியிருந்தது.

சென்னை ஈஎஸ்ஐ மருத்துவ மனையையும் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார். 470 படுக்கைகளுடன் அதிநவீன மருத்துவ வசதிகளைக்  கொண்ட  இந்த மருத்துவமனை, மருத்துவத் துறையின் அனைத்து வகையான பிரிவுகளிலும் தரமான சிகிச்சையை வழங்கும்.

இதுதவிர, திருச்சி விமான நிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடம் மற்றும் சென்னை விமான நிலைய நவீனமயமாக்கல் பணிகளுக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். திருச்சியில் புதிய ஒருங்கிணைந்த விமான முனையம் அமைக்கப்படுவதன் மூலம், நெரிசல் நேரங்களில்   தற்போது 2,900 பயணிகளை கையாண்டு வரும் இந்த விமானநிலையம் இனி ஆண்டுக்கு 3.63 மில்லியன் பயணிகளை கையாளும் வகையில் விரிவுபடுத்தப்படுகிறது.

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் (BPCL) எண்ணூர் கடலோர முனையத்தையும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  தற்போது தண்டையார்பேட்டையில் உள்ள முனையத்தைவிட பெரிதாகவும், ஒரு மாற்று முனையாகமாகவும் இது திகழும்.  இந்தப் புதிய முனையம் செயல்பாட்டுக்கு வரும்போது, கொச்சியிலிருந்து கடல் மார்க்கமாகவே பொருட்கள் கொண்டுவரப்படுவதால், சாலை மார்க்கமாக பொருட்களை கொண்டு வருவதால் ஏற்படும் செலவினமும் குறையும்.

சென்னை துறைமுகத்திலிருந்து மணலியில் உள்ள சென்னை பெட்ரோலியம் நிறுவன (CPCL) சுத்திகரிப்பு ஆலைக்கு குழாய் மூலம் கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கான புதிய திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்.  மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் அமைக்கப்பட்டுள்ள இந்த எண்ணெய் குழாய்கள், கச்சா எண்ணெயை பாதுகாப்பாகவும், நம்பகமான முறையிலும் கொண்டு செல்லவும், தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதாகவும் அமையும்.

சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக, ஏ.ஜி-டி.எம்.எஸ் -வண்ணாரப்பேட்டை இடையேயான  பயணிகள் போக்குவரத்து சேவையையும்    பிரதமர் தொடங்கிவைத்தார். பத்து கிலோமீட்டர் தூரமுள்ள இந்தப் பிரிவு, சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒரு பகுதியாகும்.  இதன் மூலம் 45 கிலோமீட்டர் தொலைவுக்கான முதற்கட்ட திட்டம் முழுமையாக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

இந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர், தமது பயணத்தின் நிறைவுக் கட்டமாக ஹூப்ளிக்கு புறப்பட்டுச் சென்றார்.  

****



(Release ID: 1563715) Visitor Counter : 202