பிரதமர் அலுவலகம்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம், எய்ம்ஸ் மருத்துவ சேவை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது: பிரதமர்
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனைக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்
மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மேம்பாட்டுத் திட்டத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்
12 அஞ்சலக பாஸ்போர்ட் சேவை மையங்களும் திறந்துவைக்கப்பட்டன
Posted On:
27 JAN 2019 3:28PM by PIB Chennai
மதுரை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் வாழும் மக்களுக்கு சுகாதார வசதிகள் மற்றும் சேவைகள் வழங்குவதில் ஒரு பெரும் உத்வேகத்தை அளிக்கும் விதமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் பல்வேறு திட்டங்களை பிரதமர் திரு. நரேந்திர மோடி, இன்று தொடங்கிவைத்தார்.
மதுரை தோப்பூரில் புதிய எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ளது. இப்பகுதியில், அதிநவீன மருத்துவ சிகிச்சைகள், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி வழங்குவதில் இந்த மருத்துவமனை முன்னோடியாகத் திகழும். இந்த மருத்துவமனை அமையும் இடம் தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள பின்தங்கிய மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு மிகுந்த பயனுடையதாக இருக்கும்.
மதுரையில் இன்று, இந்த அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருப்பது, நமது அரசின் கொள்கையான “ஒரே இந்தியா உன்னத இந்தியா” என்ற கருத்தை பிரதிபலிப்பதாக உள்ளது என்று இந்த நிகழ்ச்சியின் போது பேசிய பிரதமர் தெரிவித்தார். தில்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை, மருத்துவ சேவையில் தனக்கென ஒரு தனிச்சிறப்பைப் பெற்றுள்ளது. மதுரையிலும், அத்தகைய எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதன் மூலம் காஷ்மீரிலிருந்து மதுரை வரையிலும், குவஹாத்தியிலிருந்து குஜராத் வரையிலும் நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் உயர்தர மருத்துவ சேவை கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது. மதுரையில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் பலனளிக்கும்.
பிரதமரின் சுகாதார காப்பீட்டு திட்டத்தின்கீழ், மதுரை ராஜாஜி மருத்துவக் கல்லூரி, தஞ்சை மருத்துவக் கல்லூரி மற்றும் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிகளில் அமைக்கப்பட்டுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளையும் பிரதமர் தொடங்கிவைத்தார். இத்திட்டம் நாடு முழுவதிலும் உள்ள 73 மருத்துவக்கல்லூரிகளை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்படுகிறது. மூன்று மருத்துவ கல்லூரிகளில் இத்தகைய சிறப்பு சிகிச்சைப் பிரிவுகளை தொடங்கிவைத்திருப்பது குறித்து பிரதமர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அனைவரும் சுகாதாரமாகத் திகழவும், மருத்துவ வசதிகள் குறைந்த செலவில் கிடைக்கச் செய்யவும், மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருவதை பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும் இந்திர தனுஷ் இயக்கத்தின் வேகம் மற்றும் வீச்சு, நோய்த்தடுப்பு முறையில் புதிய பரிமாணத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறினார். பிரதமரின் பேறுகால கவனிப்புத் திட்டம் மற்றும் பிரதமரின் பாதுகாப்பான பேறுகாலத் திட்டம் போன்றவை பாதுகாப்பான பிரசவத்தை ஒரு மாபெரும் மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளன. கடந்த நான்கரை ஆண்டுகளில் இளநிலை மருத்துவ பட்டப்படிப்பு இடங்களின் எண்ணிக்கை சுமார் 30 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆயுஷ்மான் பாரத் திட்டம் தொடங்கப்பட்டு இருப்பதும் ஒரு மாபெரும் நடவடிக்கை ஆகும்.
நம்நாட்டிற்கு தேவையான உலகளாவிய சுகாதார காப்பீடு வழங்கும் வகையில் மிகுந்த கவனத்துடன் சிந்தித்து உருவாக்கப்பட்ட திட்டம் இது. உடல்நலப் பிரச்சினைகளில் பாதிக்கப்படுவோருக்கு, இதுவரை இல்லாத வகையில் முழு அளவிலான காப்பீட்டு வசதியை வழங்கும் திட்டமாக ஆயுஷ்மான் பாரத் அமைந்துள்ளது. ஒட்டுமொத்த ஆரம்ப சிகிச்சை மற்றும் நோய் தடுப்பு சேவைகளை வழங்குவதற்காக ஒன்றரை லட்சம் சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ், ஒரு கோடியே 57 லட்சத்திற்கும் அதிகமானோர் பயன்பெற உள்ளனர்.
தமிழ்நாட்டில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 89000 பயனாளிகள் இத்திட்டத்தின்கீழ், அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்காக 200 கோடி ரூபாய்க்கும் மேல் செலவு செய்யப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் ஏற்கனவே 1320 சுகாதார மற்றும் நலவாழ்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
நோய் தடுப்பு பணியைப் பொறுத்தவரை, மாநிலங்களுக்கு மத்திய அரசு தொழில்நுட்ப மற்றும் நிதியுதவிகளை அளித்து வருகிறது. 2025-க்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. அதேநேரத்தில் காசநோயற்ற சென்னை என்ற முன்முயற்சி மூலமாக 2023-க்குள்ளாகவே தமிழகத்தில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்க மாநில அரசு முனைப்புடன் இருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழகத்தின் 12 இடங்களில் அஞ்சலக பாஸ்போர்ட் மையங்களை அர்ப்பணிப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
மக்களின் வாழ்க்கை முறையை எளிதாக்கும் முயற்சியில் இது மற்றுமொரு உதாரணமாகும்.
மதுரையில் தமது நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்ட பிரதமர், கொச்சி புறப்பட்டுச் சென்றார். அங்கு அவர், எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறை திட்ட விரிவாக்க பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்கிறார்.
******
(Release ID: 1561586)
Visitor Counter : 277