பிரதமர் அலுவலகம்

அகமதாபாத் நகரில் அதிநவீன வசதிகள் கொண்ட சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் நிறுவனத்தை பிரதமர் திறந்து வைத்தார். ஏழைகளுக்காக அரசு துணை நிற்கும்; சுகாதார வசதிகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்துகிறது என்று பிரதமர் கூறினார்

Posted On: 17 JAN 2019 7:58PM by PIB Chennai

அதி நவீன வசதிகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி பொது மருத்துவமனையான சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை, பிரதமர் திரு. நரேந்திர மோடி அகமதாபாத் நகரில் இன்று திறந்து வைத்தார். அகமதாபாத் மாநகராட்சியால் கட்டப்பட்டுள்ள, 78 மீட்டர் உயரம் கொண்ட, 1500 படுக்கை வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனையில், விமான ஆம்புலன்ஸ் உள்பட மிக அதிநவீன வசதிகள் அனைத்தும் உள்ளன.

மருத்துவமனையில் உள்ள வசதிகளை பிரதமர் ஆய்வு செய்தார். உலகத் தரமான மருத்துவமனையை உருவாக்கியதற்காக அகமதாபாத் மாநகராட்சிக்கு  அவர் பாராட்டு தெரிவித்தார். “அகமதாபாத் மருத்துவமனையில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், நாட்டில் மற்ற அரசு மருத்துவமனைகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும்” என்று அவர் கூறினார்.

ரூ.750 கோடி செலவில் கட்டப்பட்ட, 17 மாடிகள் கொண்ட இந்த மருத்துவமனையில், குறைந்த செலவில் உலகத் தரத்திலான மருத்துவ வசதிகள் கிடைக்கும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்துடன் இணைந்ததாக இந்த மருத்துவமனை உள்ளது. தொடக்க நிகழ்ச்சியின் போது பேசிய திரு. மோடி, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் காரணமாக, சிறிய நகரங்களிலும் கூட புதிய மருத்துவமனைகள் உருவாக்குவதற்கான தேவைகள் அதிகரித்துள்ளன. புதிய மருத்துவமனைகள் வேகமாக திறக்கப் படுகின்றன. டாக்டர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த நிபுணர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் சுகாதாரத் துறையில் இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப் பட்டுள்ளன”' என்று அவர் கூறினார்.

கடந்த நான்கு ஆண்டுகளில் சுகாதார வசதிகள் மற்றும் மருத்துவக் கல்வித் துறையில் நாடு பெரிய விரிவாக்கத்தைக் கண்டிருக்கிறது என்றும், குடிமக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இது பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

“ஏழைகளுக்கு அரசு துணை நிற்கிறது. சுகாதார சேவை வசதிகள் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பிரதமரின் ஜன அவ்ஷாடி திட்டம் மூலமாக ஜெனரிக் மருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கச் செய்ததன் மூலமாகவும் அரசின் முன்னுரிமைகள் தெரிய வருகிறது. நாடு முழுக்க சுமார் 5000 பிரதமரின் ஜன அவ்ஷாடி மருந்து விற்பனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன” என்று பிரதமர் கூறியதன் மூலம், ஏழைகள் மீதும், அவர்களுக்கான சுகாதார வசதிகள் மீதும் கொண்டுள்ள அக்கறை வெளிப்பட்டது.

அனைவருக்கும் சம அளவிலான வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதில் தமது அரசு உறுதியாக இருப்பதாக பிரதமர் கூறினார். பொதுப் பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு அளிக்கும் திட்டம், அந்த வகையிலான ஒரு நடவடிக்கை என்று அவர் குறிப்பிட்டார். இதற்காக, கல்வி நிலையங்களில் உள்ள இடங்களின் எண்ணிக்கை 10% அதிகரிக்கப் படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார். பொதுப் பிரிவினரில் உள்ள ஏழைகளுக்கு அரசுப் பணிகள் மற்றும் கல்வி நிலையங்களில் 10% இடஒதுக்கீடு அளிக்கும் திட்டத்தை முதன்முதலில் அமல் செய்தமைக்காக குஜராத் அரசுக்கு அவர் பாராட்டு தெரிவித்தார்.

புத்தாண்டில் குஜராத்துக்கு முதல்முறையாக தாம் வந்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திருவிழா நடக்கும் நேரத்தில் இந்தப் பயணம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அகமதாபாத் மக்களுக்கு பெரியதொரு சுகாதாரத் திட்டத்தை அர்ப்பணிப்பதற்கு வந்திருப்பது நல்ல தருணமாக அமைந்திருக்கிறது என்றும் அவர் கூறினார். நாட்டில் மிகச் சில மாநகராட்சிகள் தான் இதுபோன்ற உலகத் தரத்திலான சுகாதார வசதிகளை அளிக்க முன்வருகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். அகமதாபாத் நகரின் மேயராக சர்தார் படேல் ஆற்றிய பங்களிப்பை அவர் நினைவுகூர்ந்தார். நகரில் சுகாதாரம், ஆரோக்கியம் மற்றும் தூய்மையைப் பேணுவதில் அவர் முன்னுதாரணமாகத் திகழ்ந்தார் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

அனைவருக்கும் சம அளவில் வாய்ப்பு அளிப்பது மற்றும் வளர்ச்சி காண்பது என்ற உறுதியான நிலைப்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு புதிய இந்தியாவை உருவாக்குவதில் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற அணுகுமுறை தான் சரியான பாதையாக இருக்கும் என்று கூறி, தன்னுடைய உரையை பிரதமர் நிறைவு செய்தார்.

 

***



(Release ID: 1560473) Visitor Counter : 185