பிரதமர் அலுவலகம்

துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டுக்கு முந்தைய உலக வர்த்தக காட்சியை காந்திநகரில் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேலும் ஒரு முக்கிய நிகழ்வான அகமதாபாத் விற்பனை விழா இன்று தொடங்கியது
துடிப்பான குஜராத் உச்சிமாநாடு 2019 நாளை காந்திநகரில் தொடங்குகிறது
குஜராத் மாநில முதலீடுகளை மேம்படுத்துவதற்கான 9-வது துடிப்பான குஜராத் உச்சி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைக்க உள்ளார்.

Posted On: 17 JAN 2019 3:31PM by PIB Chennai

9-வது துடிப்பான குஜராத் உச்சிமாநாடு நாளை (18.01.2019) காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திர் கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் தொடங்குகிறது.  குஜராத் மாநிலத்தின் முதலீடுகளுக்கு  ஊக்கமளிப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த நிகழ்ச்சியின் துவக்க விழாவில்  பிரதமர் திரு நரேந்திர மோடி, உரையாற்றுகிறார்.

     இம்மாதம் 18 முதல் 20 வரை நடைபெற உள்ள  துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக  பிரதமர் திரு மோடி, கண்காட்சி மையத்தில் உலக வர்த்தக காட்சியை தொடங்கி வைத்தார். பிரதமர் இந்தக் கண்காட்சியின் பல்வேறு அரங்குகளுக்குச் சென்று பார்த்தார். இஸ்ரோ, டிஆர்டிஓ, காதி  அரங்குகளை மிக்க ஆர்வத்துடன்  அவர் சென்று பார்த்தார்.   இந்த அரங்குகள் சர்க்காவிலிருந்து சந்திரயான் வரை  என்ற தலைப்புடன் பிரதமரின் தொலைநோக்குத் திட்டமான இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை வலியுறுத்துவதாக அமைந்திருந்தன. பிரதமருடன் குஜராத் முதலமைச்சர் திரு விஜய் ரூபானி மற்றும் முக்கிய பிரமுகர்கள் சென்றனர். உலக வர்த்தக காட்சி இரண்டு லட்சம் சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது. இதில் 25 தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் தங்கள் உத்திகள், உற்பத்திப் பொருட்கள், வடிவமைப்புகள், ஆகியவற்றை காட்சிப்படுத்தியுள்ளன.

   உச்சி மாநாட்டுடன் பல நிகழ்ச்சிகளுக்கும் திட்டங்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் அகமதாபாத் விற்பனை விழா 2019 இதில் ஒரு முக்கிய அம்சமாகும். விழாவை பிரதமர் இன்று மாலை (17.01.2019) தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் போது துடிப்பான குஜராத், அகமதாபாத் விற்பனை விழா சின்னத்தையும் பிரதமர் திறந்து வைக்கிறார். அகமதாபாத் விற்பனை விழா 2019 என்பது இந்தியாவிலேயே இத்தகைய காட்சிகளில் முதலாவதாகும்.  அகமதாபாத் நகரைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்கள் பொருட்களைக் காட்சிப்படுத்த இந்த விழா சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.

     துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக முற்றிலும் புதிய அமைப்புகள் தொடங்கப்பட உள்ளன. இவை அறிவு பகிர்வினை பன்முகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டவை. மேலும், பங்கேற்பாளர்களிடையே தொடர்புகளை அதிகப்படுத்தவும் இவை உதவும்.

பின்னணி:

    பிரதமர் திரு நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது 2003 ஆம் ஆண்டில் துடிப்பான குஜராத் உச்சிமாநாட்டின் கருத்துரு உதயமானது. குஜராத் மாநிலத்தை அனைவரும் விரும்பும் முதலீட்டு இடமாக மீண்டும் அமைப்பது இதன் நோக்கமாகும். உலக சமூகப் பொருளாதார மேம்பாடு, அறிவுப்பகிர்வு, திறம்பட்ட கூட்டாண்மையை உருவாக்குதல் ஆகிய அம்சங்களில் கருத்துப் பகிர்வுக்கான மேடையை இந்த உச்சிமாநாடு வழங்குகிறது.

   துடிப்பான குஜராத் 2019 நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

1) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதக்கல்வி மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றுக்கான வாய்ப்புகள் குறித்த வட்டமேஜை. இதில் பிரபல கல்வியாளர்கள், முக்கிய கொள்கை வகுப்பாளர்கள் இணைந்து அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பாடங்களில் கல்வி மற்றும் பயிற்சிக்கான வாய்ப்புகளின் வரைபடத்தை உருவாக்குவார்கள்.

2) அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றுக்கான சர்வதேச மாநாடுகள்.

3) விண்வெளிப் பயணத்தின் எதிர்கால தொலைநோக்கை விவரிக்கும் எதிர்கால தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி ஆய்வு குறித்த கண்காட்சி.

4) துறைமுக மேம்பாடு மற்றும் ஆசியாவின் கப்பல் போக்குவரத்து மையமாக இந்தியாவை உருவாக்கும் அணுகுமுறைகள்.

5) இந்தியாவில் தயாரிப்போம் திட்டத்தின் வெற்றிக்கதைகளை காட்சிப்படுத்தும் மற்றும் அரசின் முக்கிய உதவித்திட்டங்கள் குறித்த கருத்தரங்குகள்.

6) பாதுகாப்பு மற்றும் வான்வழித் தொழில்களில் வாய்ப்புகள் குறித்த கருத்தரங்குகள் நடத்தி  அதன் மூலம் குஜராத்தின் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் வாய்ப்புகளை பங்கேற்பாளர்களுக்கு உணர்த்துதல். மேலும் இந்தியாவும், குஜராத்தும் பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் உற்பத்தி மையங்களாக மாற்றுவதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல்.

2003-ல் துடிப்பான குஜராத் உச்சிமாநாடு தொடங்கிய பிறகு அது, இதர  மாநிலங்கள் முன்வந்து இத்தகைய உச்சிமாநாடுகளை நடத்துவதன் மூலம் வர்த்தகம் மற்றும் முதலீடுகளை மேம்படுத்துவதில் முன்னோடி மாதிரியாகவும், உந்து விசையாகவும் செயல்பட்டு வருகிறது.

------



(Release ID: 1560391) Visitor Counter : 208