பிரதமர் அலுவலகம்

ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவில் ஒட்டுமொத்தமான இ-கிரகப்பிரவேசத்தை பிரதமர் பார்வையிட்டு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Posted On: 05 JAN 2019 1:37PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (05.01.2019) ஜார்க்கண்ட் மாநிலம் பலாமுவுக்குப் பயணம் மேற்கொண்டார். 

பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் 25,000 பயனாளிகள் இ-கிரகப்பிரவேசம் செய்ததை அவர் பார்வையிட்டார். 

வடக்கு கோயல், (மண்டல் அணை) மறுசீரமைப்புத் திட்டம், கன்ஹார் சோனே குழாய் வழி நீர்ப்பாசனத் திட்டம் மற்றும் பல்வேறு பாசன முறைகளை வலுப்படுத்துதல், கரை அமைப்புப் பணிகள்  ஆகியவற்றுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.  இந்தத்  திட்டங்கள் மொத்தம் ரூ.3,500 கோடி மதிப்புடையவை என்று பிரதமர் கூறினார்.

அங்கு திரண்டிருந்தோர் இடையே உரையாற்றிய பிரதமர், பாசனத்திற்கான செலவைக் குறைப்பதன் மூலம் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் அரசின் முயற்சியின் முக்கியமான பகுதி இந்தத் திட்டங்கள் என்றார்.

வடக்கு கோயல் (மண்டல் அணை) திட்டம் சுமார் 47 ஆண்டுகளாக பூர்த்தியடையாமல் இருந்து வருகிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  இதன்காரணமாக இந்தப் பகுதியின் விவசாயிகள் மிக மோசமாக புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார். விவசாயிகள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண நியாயமான முயற்சியை மேற்கொள்ள தமது உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.  பல ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்ட 99 பெரும் பாசனத் திட்டங்கள் கண்டறியப்பட்டு சுமார் 90,000 கோடி ரூபாய் செலவில்  தற்போது துரிதமாகப் பணிகள்  நடைபெறுகின்றன என்று அவர் கூறினார்.  விவசாயிகளை “அன்னமிடும் பெரியோர்களாக” மதிக்கும் பார்வையோடு, மத்திய அரசு உறுதியுடன் செயல்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.  வேளாண்மையோடு தொடர்புடைய அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முயற்சி செய்வதன் மூலம் வேளாண்மையையும், விவசாயிகளையும் முன்னேற்ற புதிய பார்வையோடு அரசு செயல்பட்டு வருகிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

2022-க்குள் அனைவருக்கும் வீட்டு வசதி என்பதை நோக்கமாகக் கொண்ட பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ், 25,000 வீடுகள் வழங்கப்பட்டு இருப்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  கடந்த காலத்தில் தொடங்கப்பட்ட இதேபோன்ற திட்டங்களில் இருந்து இந்தத் திட்டம் எவ்வாறு வேறுபட்டுள்ளது என்பதை அவர் விவரித்தார். தற்போது பயனாளிகள் தெரிவு என்பது மிகவும் வெளிப்படைத்தன்மையோடு நடப்பதாக அவர் கூறினார். இணையத்தின் மூலம் பதிவு, நேரடி பணப் பரிமாற்றத்திற்கு வசதியாகப் பயனாளியின் வங்கிக் கணக்கை சரிபார்த்தல் ஆகிய நடைமுறை பின்பற்றப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளின் தரத்தைக் கண்காணிக்கப் புதியதொரு முறை உருவாக்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார்.   புகைப்படம் மற்றும் இணையம் மூலம் கண்காணிப்பதையும் இது உள்ளடக்கியதாகும்.  தற்போது வழங்கப்பட்டுள்ள வீடுகளில் மின்இணைப்பு, சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகள் ஆகியவை உள்ளன என்று அவர் தெரிவித்தார்.  மாறுபட்ட வடிவமைப்புகள் தற்போது இருப்பதாகவும், வீடுகளின் அளவும் அதிகரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.  வீடுகளின் கட்டுமானத்திற்கு உள்ளூர் பொருள்களைப் பயன்படுத்துவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.  கட்டுமான இடத்தின் அளவு அதிகரிக்கப்பட்டு இருப்பதோடு ஐந்தாண்டுகளுக்கும் குறைவான காலத்தில் சுமார் ஒருகோடியே 25 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன என்றும்  அவர் தெரிவித்தார். சராசரியாக  ஒரு வீடு கட்டுவதற்கு 12 முதல் 18 மாதங்கள் வரைதான் ஆகியிருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

தற்போது ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நான்கு தவணைகளில் பயனாளிகளின் கணக்கில் மிக எளிதாக சேர்கிறது என்றும் அவர் கூறினார்.  ஏற்கனவே இந்தத் தொகையின் அளவு 70,000 ரூபாயாக மட்டும் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார். வீடு வழங்குவது ஏழைகளுக்கு ஒட்டுமொத்தமாக அதிகாரமளித்தல் என்பது பொருளாகும் என்று அவர் கூறினார்.  விடுதலைக்குப் பின் முதன்முறையாக நடுத்தர வர்க்கத்தினரின் வீட்டுத் தேவைகள் பற்றியும் அரசு சிந்திக்கிறது என்றும், அவர்களுக்கு நிதியுதவியோடு வட்டியிலும் நிவாரணம் அளிக்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

மூன்று மாதங்களுக்கு முன் ஜார்க்கண்டில் இருந்து தொடங்கப்பட்ட பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் தற்போது லட்சக்கணக்கான ஏழை மக்களுக்கு மருத்துவ உதவியை அளிக்கிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.  முதல் 100 நாட்களில் இதன் மூலம் ஆறு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயனடைந்ததாகவும், தற்போது ஒவ்வொரு நாளும் இதன் மூலம் சுமார் 10,000 பேர் பயனடைந்து வருவதாகவும் அவர் கூறினார்.

********

விகீ/ எஸ்எம்பி/ வேணி



(Release ID: 1558761) Visitor Counter : 191