மத்திய அமைச்சரவை

அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ஐ செயல்படுத்திட உயர்மட்ட குழுவினை ஏற்படுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல். போடாக்களின் பல்வேறு நீண்டகால கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

Posted On: 02 JAN 2019 5:57PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய மத்திய அமைச்சரவை, 2003, தீர்வு உடன்படிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ஐ செயல்படுத்திடவும் மற்றும்  போடோ சமூகத்தின் இதர பிரச்சினைகள் தொடர்பாகவும் உயர்மட்ட அளவிலான குழுவினை அமைத்திட ஒப்புதல் அளித்தது.

 

1979-1985 வரை நடைபெற்ற அசாம் போராட்டத்திற்கு பின்பாக, 1985, ஆகஸ்ட், 15 அன்று அசாம் ஒப்பந்தம் கையெழுத்தானது. அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு 6-ல், அசாம் மக்களின் கலாச்சார, சமூக, மொழி அடையாளம் மற்றும் பாரம்பரியம் ஆகியவற்றுக்கு பாதுகாப்பு அளித்திடவும் மற்றும் ஊக்குவிக்கவும் உரிய அரசியலமைப்பு, சட்டமன்ற மற்றும் நிர்வாக பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

 

இருப்பினும், ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு 35 ஆண்டுகள் ஆகியும், அசாம் ஒப்பந்தத்தின் பிரிவு-6 முழுமையாக செயல்படுத்தப்படவில்லை. ஆகையால், மத்திய அமைச்சரவை, அசாம் ஒப்பந்தம், பிரிவு 6-ல் கூறப்பட்டுள்ளவாறு அரசியலமைப்பு, சட்டமன்ற மற்றும் நிர்வாக பாதுகாப்புகள் குறித்து பரிந்துரைக்க உயர்மட்ட அளவிலான குழுவினை ஏற்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கியது. அசாம் ஒப்பந்தம், பிரிவு 6-ஐ செயல்படுத்துவதற்காக 1985 முதல் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் செயல்திறன்கள் குறித்து இக்குழு ஆராயும். இக்குழு அனைத்து தரப்பினரிடமும் கலந்துரையாடி, அசாம் சட்டமன்ற பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் அசாம் மக்களுக்கு தேவையான இட ஒதுக்கீடு குறித்து மதிப்பீடு செய்யும். அசாமிஸ் மற்றும் இதர அசாம் உள்நாட்டு மொழிகளை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும், அசாம் அரசின் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு குறித்தும், அசாம் மக்களின் கலாச்சாரம், சமூக, மொழி அடையாளம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்தல் மற்றும் ஊக்குவித்தல் குறித்தும் இக்குழு மதிப்பீடு செய்யும்.

 

உள்துறை அமைச்சகத்தால் இக்குழுவிற்கான உள்ளடக்கம் மற்றும் விதிமுறைகள் தனியே வெளியிடப்படும். இக்குழுவின் உருவாக்கம், அசாம் ஒப்பந்தத்தை எழுத்தாலும், உணர்வாலும் செயல்படுத்திட வழி செய்வதுடன், அசாம் மக்களின் நீண்ட கால எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய உதவும்.

 

போடோ சமூகத்தினர் தொடர்பாக நிலுவையில் உள்ள பிரச்சினைகளை நிறைவேற்றுவதற்கான பல்வேறு நடவடிக்கைகளுக்கும் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 2003-ல் கையெழுத்திடப்பட்ட போடோ ஒப்பந்தம், இந்திய அரசியலமைப்பு சட்டம், 6வது அட்டவணையின் கீழ் போடாலாந்து பிராந்திய சபை ஏற்படுத்துவதற்கு வழிவகுத்தது. இருப்பினும், போடோக்களின் பல்வேறு அமைப்புகளிலிருந்து நிலுவையில் இருந்த பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றி தருமாறு கோரிக்கைகள் பெறப்பட்டன.

 

போடோ அருங்காட்சியகம்-மற்றும் மொழி மற்றும் கலாச்சார கற்றல் மையத்தினை ஏற்படுத்திடவும், கோக்ராஜ்ஹரில் தற்போதுள்ள அகில இந்திய வானொலி நிலையம் மற்றும் தொலைக்காட்சி நிலையத்தை நவீனப்படுத்தவும் மற்றும் பிடிடாட் வழியாக பயணிக்கும் அதிவேக ரயிலுக்கு அரோனாய் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிடவும் மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியது. இம்முடிவுகளை செயல்படுத்துவதற்கான தேவையான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மேற்கொள்ளும்.

 

மேலும், உரிய நில கொள்கை மற்றும் நில சட்டங்கள் தொடர்பாகவும்,  உள்நாட்டு சமூகங்களின் சடங்குகள், பாரம்பரியங்கள் மற்றும் மொழிகள் ஆராய்ச்சி மற்றும் ஆவணப்படுத்துதலுக்கான நிறுவனங்களை ஏற்படுத்திடவும் மாநில அரசு தேவையான நடவடிக்கைளை மேற்கொள்ளும். 

*****



(Release ID: 1558356) Visitor Counter : 366