பிரதமர் அலுவலகம்

புதுதில்லி ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற்ற மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு சிறப்பு மாநாட்டின் நிறைவு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை

Posted On: 02 OCT 2018 8:50PM by PIB Chennai

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் மேதகு அண்டோனியோ குட்டெர்ரெஸ் அவர்களே, தூய்மை குறித்த எனது உறுதிப்பாட்டிற்கு ஆதரவளிக்க உலகம் முழுவதிலும் இருந்து பல்வேறு நாடுகளிலிருந்தும் இங்கு வருகை தந்துள்ள மாண்புமிகு அமைச்சர்களே, சுஷ்மா ஜி, உமா பாரதி ஜி, ஹர்தீப் பூரி ஜி, ரமேஷ் ஜி ஆகிய எனது அமைச்சரவை சகாக்களே, உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள மாட்சிமைமிக்க விருந்தினர்களே, சகோதர, சகோதரிகளே,

உங்கள் அனைவரையும் இந்தியாவிற்கு, மிகுந்த மதிப்பிற்குரிய பாபுவின் நாட்டிற்கு மனமார வரவேற்கிறேன். 125 கோடி இந்திய மக்களின் சார்பில் உங்கள் அனைவரையும் வாழ்த்துகிறேன். உங்கள் அனைவரின் மத்தியில், உலகத் தலைவர்களின் மத்தியில், துப்புரவுத் துறையில், நீடித்த வளர்ச்சிக்கான துறையில் உலகத்திலேயே தலைசிறந்த நபர்களின் மத்தியில் இருப்பதற்கு மிகவும் அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்றே கருதுகிறேன். தூய்மை என்ற மிக முக்கியமான விஷயத்தில் உங்களுக்குள்ள உறுதிப்பாட்டிற்காகவும், கூட்டான முறையில் மனித குலத்திற்கு முன்னால் அதை எடுத்துக் கூறி அவர்களை உத்வேகப்படுத்துவதற்காகவும் உங்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு சிறப்பு மாநாட்டில் பங்கேற்று உங்கள் நாட்டின் அனுபவங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, ஒரு வகையில் உங்கள் அனுபவங்கள், உங்கள் கருத்துக்கள், உங்களின் தொலைநோக்குகள் ஆகியவற்றின் மூலம் இந்த உச்சிமாநாட்டினை செழுமைப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்றைய உலகமானது சவாலானதொரு கட்டத்தைக் கடந்து கொண்டிருக்கும் ஒரு தருணத்தில் மனித குலம் தொடர்பான முக்கியமானதொரு பிரச்சனையின் மீது ஏராளமான நாடுகள் ஒன்றாகக் கூடி அந்தப் பிரச்சனை குறித்து விவாதிப்பது என்பதே இதுவரை காணாத ஒரு நிகழ்வாகும்.

உங்களாலும், உங்களின் பங்கேற்பாலும்  இன்றைய நிகழ்வானது, உலகளாவிய சுகாதாரம் என்ற திசையை நோக்கிய பயணத்தில் முக்கியமானதொரு தருணமாக இருக்கவிருக்கின்ற இந்த வாய்ப்பு, மனித குலத்தின் நலன் தொடர்பான நிகழ்ச்சிகளிலேயே முக்கியமானதொரு தருணமாகவும் திகழவிருக்கிறது.

நண்பர்களே,

இன்று நாம் மகாத்மா காந்தியின் 150வது பிறந்த தினத்திற்குள் நுழைந்திருக்கிறோம். உலகம் முழுவதிலும் அவரது 150வது பிறந்த தினத்தை முழுமையானதொரு வகையில் கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். உங்கள் அனைவரின் சார்பாக பெருமதிப்பிற்குரிய பாபுவிற்கு எனது அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன். தூய்மைக்கான தீவிரமான பற்றுறுதிதான் பெருமதிப்பிற்குரிய பாபுவின் கனவாக இருந்திருக்கிறது. இன்று தூய்மைக்கான செயல்களோடு தொடர்புடைய பல்வேறு நபர்களையும் பெருமைப்படுத்துவதற்கான வாய்ப்பு இன்று எனக்குக் கிடைத்தபோது, அவருக்கு இவ்வாறு அஞ்சலி செலுத்துவதோடு கூடவே ஒரு வகையில் இந்த வேலையை செய்வதற்காக நமது மரியாதையை அவர்களுக்குத் தெரிவிக்கும் வாய்ப்பாகவும் அது அமைந்து விட்டது.

பெருமதிப்பிற்குரிய பாபு விடுதலைப் போராட்டத்திற்காக நாட்டைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தபோது சபர்மதி ஆற்றங்கரையில் அவர் இருந்த ஆஸ்ரமத்திலும் நீங்கள் அனைவரும் ஒரு நாளைக் கழித்திருக்கிறீர்கள். அந்த இடத்தின் எளிமை, உயிர்ப்பு ஆகியவற்றையும் மிக நெருக்கமாகவே நீங்கள் கண்ணுற்றிருப்பீர்கள். தூய்மைக்கான இயக்கத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களுக்கு பாபுவின் கருத்துக்கள் நிச்சயமாக புதியதொரு வேகத்தையும், புதியதொரு உணர்வையும், புதியதொரு உத்வேகத்தையும் தந்திருக்கும் என்றும் நான் உறுதியாக நம்புகிறேன். மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு சிறப்பு மாநாட்டின் நிறைவை ஒட்டி நாம் அனைவரும் இன்று இங்கு கூடியிருப்பதும் மிகவும் பொருத்தமானதே ஆகும்.

சற்று நேரத்திற்கு முன்பாக தூய்மைக்கான சேவகர்கள் ஒரு சிலரைப் பாராட்டி பரிசளிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. இதில் பரிசு பெற்ற அனைவரையும் நான் பாராட்டுகிறேன். குறிப்பாக நம் அனைவரின் மதிப்பிற்குரிய தாயை நான் வணங்குகிறேன். இந்த இயக்கம் தொடங்கிய நேரத்திலிருந்தே அதுபற்றிய பிரச்சாரத்தை செய்வதென்ற பொறுப்பை தானே எடுத்துக் கொண்டு செயல்பட்டவர் அவர். அவரைப் போன்ற ஏராளமானவர்கள்தான் இந்த தூய்மைக்கான இயக்கத்தை ஒரு மக்களின் இயக்கமாக, இதுபோன்ற மகத்தான மனிதர்களிடமிருந்தும், ஞானிகளின் வாழ்க்கைகளில் இருந்து  உத்வேகம் பெற்று அதை மிகவும் வலுவானதொரு சக்தியாக மாற்றியிருக்கின்றனர்.

நண்பர்களே,

விடுதலை இயக்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்தபோது காந்திஜி ஒரு முறை குறிப்பிட்டார். தூய்மை, விடுதலை ஆகியவை பற்றி யாராவது தன்னைக் கேட்டால் தன் நாட்டு விடுதலையை விட தூய்மைக்கே முன்னுரிமை அளிப்பேன் என்று அவர் அப்போது கூறினார். விடுதலைப் போராட்டத்திற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த காந்திஜியும் கூட விடுதலையை விட தூய்மைக்கே முன்னுரிமை அளித்துள்ளதாக உறுதியளித்தார்.

1945-ம் ஆண்டில் தனது சிந்தனைகளை அவர் எழுத்தாக்கினார். செயலூக்கமானதொரு திட்டம் என்ற வகையில் அச்சிடப்பட்ட வடிவில் அவர் அந்த சிந்தனைகளை வழங்கினார். கிராமப்புற தூய்மை என்ற மிக முக்கியமான அம்சம் உள்ளிட்டு இங்கு நான் விவாதித்த முக்கியமான விஷயங்கள் அனைத்தும் மகாத்மா காந்தியின் அந்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டவையே ஆகும்.

விஷயம் என்னவெனில், காந்திஜி ஏன் தூய்மைக்கு இவ்வளவு அழுத்தம் கொடுத்தார்? தூய்மை இல்லாத நிலை நோய்வாய்ப்படுவதற்கு இட்டுச் செல்லும் என்பதாலா?  காரணம் அதுவல்ல என்றே என் மனதிற்குப்படுகிறது. அது இவ்வளவு குறுகிய கண்ணோட்டம் கொண்டதல்ல.

நண்பர்களே,

இந்த விஷயத்தை நீங்கள் கவனமாகப் பார்த்தீர்களானால், அதைப் பற்றி சிந்தித்தீர்களானால், தூய்மைப்படுத்தாமல் அல்லது அசுத்தத்தை அகற்றாமல் இருந்தால் நமது சுற்றுப் புறத்தை அப்படியே ஏற்றுக் கொள்ளும் போக்கும் நமக்குள்ளே உருவாவதற்கான காரணமாக அந்த தூய்மையற்ற நிலை மாறிவிடுகிறது என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள். இயற்கையாகவே இத்தகைய போக்குகளை நாம் வளர்த்துக் கொண்டு வருகிறோம். ஏதாவதொன்று தூய்மையற்றதாக இருந்தால், ஓர் இடம் சுத்தமாக இல்லாமல் இருந்தால், அங்கிருக்கும் நபர் அந்தச் சூழ்நிலையை மாற்றாமல் இருந்து, அந்த இடம் அசுத்தமானதாகவே நீடிக்குமானால் அந்த அசிங்கமான தன்மையை அவர் படிப்படியாக ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிடுவார். சிறிது காலத்திற்குப் பிறகு இத்தகைய ஒரு நிலை, இந்த அசுத்தம் என்பது அசுத்தமானதாகவே காணாத ஒரு மனநிலையை அவரிடத்தில் உருவாக்கி விடும். எனவே அந்த அசுத்தமானது அந்த மனிதனின் ஆன்மாவை, அவரது சிந்தனைப் போக்கை கைப்பற்றிக் கொண்டு அவரை செயலற்ற நிலைக்கு மாற்றி விடுகிறது.

இதற்கு நேர் எதிரான ஒரு சூழ்நிலையை சற்றே சிந்தித்துப் பாருங்கள். அந்த நபர் இந்த அசுத்தத்தை, தூய்மையற்ற நிலையை ஏற்றுக் கொள்ளவில்லை எனில், அதை சுத்தப்படுத்துவதற்கான முயற்சியை அவர் மேற்கொள்கிறார். அவரது மனமும் வேகமெடுக்கிறது. இருக்கும் சூழ்நிலையை அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற போக்கும் அவரிடத்தில்  வளர்கிறது.

நமது பெருமதிப்பிற்குரிய பாபு தூய்மைக்கான இயக்கத்தை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியபோது அந்த நபரின் மனப்போக்கை மாற்றுவதென்பதே அவரது செயலுக்குப் பின்னால் இருந்த சிந்தனை ஆகும். மாற்றமேதுமற்ற ஒரு நிலையில் இருந்து மக்களை உணர்வுள்ளதொரு நிலையை நோக்கி அழைத்துச் செல்வது. செயலற்றதொரு நிலைக்கு முடிவு கட்டி, அந்த இடத்தில் இந்த உணர்வை கொண்டுவர வேண்டும் என்பதே அவரது முயற்சியாக இருந்தது. நம்மிடையே இத்தகையதொரு உணர்வு விழித்தெழும்போது விடுதலைப் போராட்டம், அதைத் தொடர்ந்த விடுதலை போன்றவற்றின் தாக்கங்களை நம்மால் காண முடிந்தது.

இந்திய நாட்டு மக்களாகிய நாமும், என்னைப் போன்ற வேறுபலரும் பெருமதிப்பிற்குரிய பாபுவின் சிந்தனைகளை புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால், அவரது தத்துவத்தைப் புரிந்து கொள்ள நாம் முயற்சி செய்யாமல் இருந்திருந்தால், உலகத்திற்கு அதை வழங்கியதன் மூலம் அவரது சிந்தனைகளை மதிப்பீடு செய்யாமல் இருந்திருந்தால், அவற்றை புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால், இந்த திட்டமானது எந்தவொரு அரசாங்கத்தின் முன்னுரிமை திட்டமாக மாறியிருக்காது என்ற இந்த விஷயத்தை உங்கள் முன்பாக நான் ஏற்றுக் கொள்கிறேன்.

இன்று அது முன்னுரிமை பெற்றதொரு திட்டமாக மாறியுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று செங்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து இதை கூறவேண்டும் என்றும் நான் விரும்பினேன். ஏனெனில், காந்திஜியின் இலக்குகளும் கருத்துக்களும் என் மீது தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. எந்தவித எதிர்பார்ப்புகளும் இன்றி இந்த வேலையில் தங்களை இணைத்துக்கொண்ட லட்சோப லட்சம் மக்களுக்கு உத்வேகம் அளிப்பதற்கும் இதுவே காரணமாகும்.

இன்று காந்திஜி காட்டிய பாதையைப் பின்பற்றி 125 கோடி இந்தியர்கள் தூய்மை இந்தியா இயக்கத்தை உலகின் மிகப்பெரிய மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளது குறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.

மக்களின் இந்தப் பற்றுறுதியின் விளைவாகத்தான் கிராமப்புறத் தூய்மையின் விகிதம் 2014-ம் ஆண்டுக்கு முன்பு கிட்டத்தட்ட 38 சதவீதமாக இருந்தது இன்று 94 சதவீதமாக மாறியுள்ளது.  நான்கே ஆண்டுகளில் 38 சதவீதத்தில் இருந்து  94 சதவீதம். சாதாரண மக்களின் பொறுப்புகளோடு இணைத்துக் கொள்வதன் மிகப்பெரிய, மிக வெற்றிகரமான உதாரணமாகவும் இது திகழ்கிறது.

இன்று இந்தியாவில் பொது இடங்களில் காலைக்கடன்களைக் கழிக்கும் பழக்கத்தை விட்டொழித்த கிராமங்களின் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்திய நாட்டின் 25 மாநிலங்கள் இந்தப் பழக்கத்தில் இருந்து தாங்கள் முற்றிலுமாக விடுபட்டுவிட்டதாகவும் அறிவித்துள்ளன.

நண்பர்களே,

நான்கு ஆண்டுகளுக்கு முன்னால், உலக மக்கள் தொகையில் பொது இடங்களில் காலைக்கடன்களைக் கழிக்கும் பழக்கத்தை கொண்டவர்களின் எண்ணிக்கையில் 60 சதவீதம் பேர் இந்தியாவில் இருந்தனர். இப்போது அது 60 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக மாறியுள்ளது. எனவே எங்களால் மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி ஒருவகையில் புதியதொரு உற்சாகத்தை ஏற்படுத்தி, உலக வரைபடத்தில்  புதியதொரு உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன என்பது மட்டுமல்ல; கிராமங்களும் நகரங்களும் பொது இடங்களில் காலைக்கடன்களைக் கழிக்கும் பழக்கத்தை விட்டொழித்தவையாக மாறியுள்ளது மட்டுமல்ல; 90 சதவீத கழிப்பறைகள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன என்பதும் கூட முக்கியமான விஷயம்தான்.

இந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்ட கிராமங்களும் நகரங்களும் தங்களின் பழைய பழக்க வழக்கங்களுக்கு திரும்பிச் சென்றுவிடக் கூடாது என்பதால் அரசு இந்த விஷயத்தை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இதற்காக நடத்தையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கு தொடர்ந்து அழுத்தம் தரப்பட்டு வருகிறது. அதுதான் முக்கிய விஷயமாகும். இதற்காக முதலீடும் செய்யப்பட்டுள்ளது.

நண்பர்களே,

இந்த வேலையை நாங்கள் தொடங்கியபோது இந்தத் திட்டத்திற்காக ஏராளமான பணம் செலவு செய்யப்பட வேண்டுமென்ற கேள்வியும் எழுந்தது. எனினும் இந்திய அரசு பணத்தை ஒதுக்குவதற்குப் பதிலாக சமூக மாற்றத்திற்கே அதிகமான முன்னுரிமை தந்து, அதிகமான அழுத்தத்தையும் தந்தது. இவ்வாறு சிந்தனை மாறுமானால், உண்மையான மாற்றத்தை மக்கள் தாங்களாகவே செய்து விடுவார்கள்; அரசு அதைக் கொண்டுவர வேண்டிய அவசியம் எழாது.

இன்று தூய்மை இந்தியா பிரச்சாரம் எவ்வாறு இந்திய மக்களின் நடத்தையை மாற்றியுள்ளது; எவ்வாறு இந்திய கிராமங்களில் நோய்களின் தாக்குதல் குறைந்துள்ளது; இந்த நோய்களுக்கான செலவுகள் எவ்வாறு குறைந்துள்ளது என்பது போன்ற தகவல்களை கேட்கும்போதும் பார்க்கும்போதும் நான் மிகவும் திருப்தி அடைகிறேன்.

ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு நிறுவனங்களும் கூட இந்த விஷயம் குறித்து ஆய்வுகளை நடத்தியதோடு, தூய்மை இந்தியா இயக்கத்தின் பல்வேறு அம்சங்களையும் அந்த ஆய்வுகளின் மூலம் அவை வழங்கியுள்ளன.

சகோதர, சகோதரிகளே,

லட்சக் கணக்கான இந்தியர்கள் இந்த இயக்கத்தை நம்பிக்கையின், மாற்றத்தின் அடையாளமாக மாற்றியுள்ளனர். தூய்மை இந்தியா பிரச்சாரமானது உலகத்தின் மிகப்பெரிய டாமினோ விளைவு (ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்தும் செயல்முறை இவ்வாறு அழைக்கப்படுகிறது) என்பதாக மாறியுள்ளது.

நண்பர்களே,

தூய்மை இந்தியா இயக்கத்தின் விளைவாக இந்தியா மீண்டும் தூய்மை குறித்த தனது பழைய வலியுறுத்தலை நோக்கி விழித்தெழுந்துள்ளது என்பது குறித்தும் இன்று நான் மிகவும் பெருமை கொள்கிறேன். இந்த தூய்மை கலாச்சாரம் என்பது நமது பழைய பாரம்பரியத்தோடும், சிந்தனையோடும், கலாச்சாரத்தோடும் உள்ளடங்கிய ஒன்றாகும். மோசமான பழக்க வழக்கங்கள் பின்னாளில்தான் தலையெடுத்தன. பதஞ்சலி மகரிஷி அஷ்டாங்க யோகாவைப் பற்றிப் பேசும்போது வாழ்க்கை நடத்துவதற்கான சரியான வழியை அவர் விளக்குகிறார்.

தனிப்பட்ட தூய்மை, மகிழ்ச்சியான மன நிலை, கடும் உழைப்பு, சுய கல்வி, இறைவன் பற்றிய நினைப்பு ஆகிய ஐந்து விதிகள்தான் மனிதன் செழிப்பான வாழ்க்கையை நடத்த வழிவகுக்கும்.

இந்த ஐந்து விதிகளில் முதலிடத்தை வகிப்பது தூய்மையே ஆகும். தூய்மையை அடைந்த பிறகே கடவுளைப் பற்றிய நினைப்பும் தவமும் சாத்தியமாகும். தூய்மை குறித்த இந்த குண நலன் இந்திய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருந்து வந்துள்ளது.

மேதகு அண்டோனியோ குட்டெரெஸ் உடன் இங்கு வரும் வழியில் ஒரு கண்காட்சியை சென்று பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. சிந்து சமவெளி நாகரிக காலத்தில் கழிப்பறைகள், கழிவுநீர் வடிகால்கள் போன்றவற்றுக்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்ததை அந்தக் கண்காட்சி எடுத்துக் காட்டியிருந்தது.

நண்பர்களே,

மேதகு அண்டோனியோ குட்டெரெஸ் அவர்களின் தலைமையின்கீழ் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டுவதை நோக்கி ஐக்கிய நாடுகள் சபை முன்னேறிக் கொண்டிருக்கிறது. உலகத்தில் தூய்மை, பொது இடங்களில் காலைக்கடன்களை கழிப்பதிலிருந்து விடுதலை, 2030-ம் ஆண்டிற்குள் தூய்மையான மின்சாரம் போன்ற 17 இலக்குகள் அதன்கீழ் வகுக்கப்பட்டுள்ளன. இந்த இலக்குகளை நிச்சயமாக அடைவது என்று உறுதி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேதகு பொதுச் செயலாளர் அவர்களே,

இதில் முன்னணி பாத்திரத்தை இந்தியா வகிக்கும் என நான் இன்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன். குறித்த காலத்திற்கு முன்பாகவே எமது இலக்குகளை நாங்கள் எட்டிப் பிடிப்போம். செறிவான பாரம்பரியம், பண்டைய ஊக்கம், செயல்திறன் மிக்க திட்டங்களின் மூலமும் நவீன பேச்சின் மூலம் இந்த நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைவதை நோக்கி இந்தியா விரைவாக நகர்ந்து வருகிறது.

துப்புரவோடு கூடவே ஊட்டச்சத்து குறித்தும் சமமான முக்கியத்துவத்தை எமது அரசு வழங்குகிறது. இந்தியாவில் ஊட்டச் சத்துக் குறைவிற்கு எதிராக ஒரு மக்கள் இயக்கமும் தொடங்கியுள்ளது. உலகமே ஒரு குடும்பம் என்பதன் பொருள் நாங்கள் செய்து வருகின்ற வேலைகள், அதில் எங்களுக்குள்ள அர்ப்பணிப்பு உணர்வு ஆகியவை இப்போது உலகம் முழுவதன் முன்பாக, மனித குலத்தின் முன்பாக உள்ளது.

நண்பர்களே,

நான்கு நாட்கள் நடைபெற்ற நீண்ட உரையாடல்களுக்குப் பிறகு உலகத்தை தூய்மையான ஒரு இடமாக மாற்றுவதற்கு நான்கு விஷயங்கள் அவசியமானவை என்ற முடிவுக்கு வந்துள்ளது குறித்து உங்கள் அனைவரையும் பாராட்ட விரும்புகிறேன். இந்த நான்குமே நமது மந்திரச் சொற்கள் ஆகும்: அரசியல் தலைமை, அரசின் பொதுச் செலவு, கூட்டு மேலாண்மை, மக்களின் பங்கேற்பு ஆகியவையே அவை. டெல்லி அறிக்கையின் மூலம் முழுமையான தூய்மைக்கு இந்த நான்கு மந்திரங்களும் அவசியமானவை என நீங்கள் அங்கீகரித்துள்ளீர்கள். இதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இத்தருணத்தில் இந்த தூய்மை இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றமைக்காக லட்சோப லட்சக்கணக்கான தூய்மைத் தொண்டர்கள், எனது ஊடக நண்பர்கள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். ஊடகத்தை இங்கு குறிப்பிடுவது ஏனெனில் தூய்மை இந்தியா இயக்கமானது ஊடகம் குறித்த கருத்தோட்டத்தை மாற்றியுள்ளது. எனது நாட்டில் உள்ள சிறிய அல்லது பெரிய ஊடகப் பிரிவுகள், அது அச்சு ஊடகமாக இருந்தாலும் சரி அல்லது  மின்னியல் ஊடகமாக இருந்தாலும் சரி, தூய்மைக்காக செயல்படுவோர் குறித்து அவை தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருந்தன. நல்ல விஷயங்களை அவை சுட்டிக் காட்டி அதை மக்களிடையே கொண்டு சென்றன. ஒருவகையில் இத்தகைய செய்திகளின் மூலம் உத்வேகம் பெறுவதற்கான ஒரு சூழ்நிலையும் உருவானது. எனவேதான் இதில் தீவிரமாக பங்கேற்றதற்காக நான் ஊடகத் துறைக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்.

உங்கள் அனைவரின் பங்கேற்பு மற்றும் பங்களிப்பு ஆகியவற்றின் விளைவாக நமது நாடு இயலாத ஒன்றாகத் தோன்றிய இந்த இலக்கை எட்டிப் பிடிக்கும் திசைவழியில் முன்னேறிச் சென்று வருகிறது. இல்லையெனில் இது மிகவும் கடினமான ஒன்றாக இருந்திருக்கும். நமது வேலை இன்னும் முடியவில்லை. திருப்தி அடைந்துவிடுவதற்காக நாம் இங்கே கூடவில்லை. முடிக்கப்பட வேண்டிய வேலையை இன்னும் வேகமாக செய்து முடிக்க உத்வேகம் பெறுவதற்காகவே நாம் இங்கே கூடியிருக்கிறோம்.

நாம் முன்னே செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. தூய்மையான, நலம் மிக்க இந்தியாவின் மகத்தான அஞ்சலியை தேசப்பிதா மகாத்மா காந்திக்கு அவரது 150வது பிறந்த தினத்தன்று நாம் செலுத்த வேண்டிய அவசியம் உள்ளது. இந்தக் கனவை நனவாக்க இந்திய மக்களாக நம்மால் முடியும் என்றும், இந்த மனப்பூர்வமான உறுதிமொழியை நாம் நிறைவேற்றுவோம் என்றும், எந்தவித பொறுப்பையும் ஏற்கும் எந்தவொரு இந்தியனும் பின் தங்க மாட்டார் என்றும், இதற்கான எவ்வளவு கடினமான வேலைகளையும் செய்யத் தயாராக இருப்பார் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன்.

இந்த முக்கியமான தருணத்தில் நீங்கள் அனைவரும் இங்கே வந்திருக்கிறீர்கள். இந்தியாவில் உங்களை வரவேற்பதற்கான வாய்ப்பை எங்களுக்குத் தந்திருக்கிறீர்கள். இதற்காக இங்கு வந்துள்ள உங்கள் அனைவருக்கும், விருந்தினர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த முக்கியமான தருணத்தில் இந்திய அரசின் அஞ்சல்துறையின் சார்பாக நமது பெருமதிப்பிற்குரிய பாபுவின் அஞ்சல் தலை ஒன்றை வெளியிடும் வாய்ப்பும் நமக்குக் கிடைத்திருக்கிறது. அஞ்சல் துறையில் தீவிர செயல்பாட்டு உணர்வை நான் பாராட்டுகிறேன். இந்த அஞ்சல் தலையும் கூட அதனளவில் ஒரு செய்தியைக் கொண்டு செல்லும் தூதுவன் தான். அது வரலாற்றோடு நம்மை தொடர்பு படுத்துவதோடு, சமூகத்தின் மாறிவரும் செல்வாக்கோடும் நம்மை இணைக்கிறது.

இன்று மிக முக்கியமானதொரு தருணத்தையும் நான் கண்டேன். வைஷ்ணவோ ஜன் தோ தேனே ரே கஹியே என்ற பாடல் நமது பெருமதிப்பிற்குரிய பாபுவை ஓர் உலக மனிதனாகப் போற்றுகிறது. அவரைப் பற்றிக் கூறுவதுண்டு. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரைப் போன்ற ஒரு மனிதர் இருந்தார் என்று கூறும்போது அந்த நேரத்தில் அவர்கள் சொல்லக் கூடும். இல்லை அது உண்மையில்லை. அது கற்பனையாகத்தான் இருக்கும். அவரைப் போன்ற ஒரு மனிதர் இருக்க வாய்ப்பே இல்லை!

நமது பெருமதிப்பிற்குரிய பாபு அத்தகையதொரு மகத்தான மனிதர். அவரை மிகவும் கவர்ந்த விஷயம் வைஷ்ணவோ ஜன் தோ தேனே ரே கஹியே என்ற இந்தப் பாடல். எனக்கு ஒரு யோசனை தோன்றியது. உலகத்தின் 150 நாடுகளைச் சேர்ந்த புகழ்பெற்ற கவிஞர்கள், இசைக்கலைஞர்கள், பாடகர்கள் போன்ற அனைவரும் ஒன்று சேர்ந்து அதே வடிவத்தில் வைஷ்ணவோ ஜன் தோ தேனே ரே கஹியே பாடலை மீண்டும் ஒரு முறை வழங்க வேண்டும் என்பதுதான் அந்த யோசனை.

வழக்கமான வகையில்தான் இந்த யோசனையை நான் சுஷ்மா ஜி யிடம் சொன்னேன். என்றாலும் சுஷ்மா ஜியும் அவரது குழுவினர் அனைவரும், உலகம் முழுவதிலும் நியமிக்கப்பட்டுள்ள நமது தூதரக அதிகாரிகளும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து இதை உருவாக்கி இருக்கின்றனர். எவ்வளவு தரமான படைப்பு. இந்த பாடலை வெளிநாட்டுக் கலைஞர்கள் பாடியிருக்கிறார்கள். பல நாட்கள் இதற்காக அவர்கள் பயிற்சி எடுத்திருக்க வேண்டும். ஒரு வகையில் காந்திஜியின் தத்துவத்தோடு அவர்கள் ஒன்றிப் போயிருக்க வேண்டும்.

இப்போது நமக்கு ஓர் ஒலிநாடா கிடைத்திருக்கிறது. அந்த நாடுகளைச் சேர்ந்த கலைஞர்கள் காந்திஜியின் தத்துவத்தில் முழுமையாக ஒன்றிப் போயுள்ளனர் என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். இந்த விஷயங்களைப் பற்றிப் புரிந்துகொள்ள, இந்த மகத்தான மனிதர் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் மனதில் தோன்றியிருக்க வேண்டும். இந்த வைஷ்ணவ பஜனின் உலகளாவிய பதிப்பு முதன்முறையாக உலகத்திற்கு வழங்கப்படுகிறது.

காந்திஜியின் 150 ஆண்டுகள் தொடர்பாக உருவாக்கப்பட்ட இந்த முயற்சி, இந்த வார்த்தை, இந்த காட்சி, உலகம் முழுவதிலும் உள்ள நாடுகள் அனைத்தின் அடையாளம் என்றே நான் நம்புகிறேன். இந்த தொகுப்பில் புல்லாங்குழல் வாசித்தவர் அவரது நாட்டைச் சேர்ந்தவர் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலாளரிடம் நான் கூறினேன். இந்த பாடலில் அவரது தாய்நாட்டைச் சேர்ந்தவர்தான் குழல் வாசித்திருந்தார்.

இந்த நாடுகளைச் சேர்ந்த மக்கள் இதைப் பார்க்கும்போது, தங்கள் நாடுகளைச் சேர்ந்த கலைஞர்களின் குரலைக் கேட்கும்போது, ஒருவித ஆர்வம் ஏற்படும். அதைப் புரிந்து கொள்வதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படும்.

வைஷ்ணவ ஜனதோ என்ற இந்த பக்திப் பாடல் எந்த மொழியில் எழுதப்பட்டது என்று கூட இந்தியர்களாகிய நமக்குத் தெரியாது. அதை நாம் நம் மனதில் உள் வாங்கிக் கொண்டு விட்டோம். எனவே அதன் உண்மையான மொழியைப் பற்றி யாருக்குமே தெரியாது. இருந்தாலும் நாம் தொடர்ந்து பாடிக் கொண்டுதான் வருகிறோம். எந்தவொரு மொழியிலும் நாம் படித்திருக்கலாம்; வளர்ந்திருக்கலாம். என்றாலும் நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் இதைப் பாடி வரும் மக்களை நம்மால் காண முடியும்.

நிச்சயமாக இந்தப் பாடல் உலகம் முழுவதிலும் தனக்கென ஓர் இடத்தைப் பெறும் என்றும் நான் நம்புகிறேன். உலகம் முழுவதிலும் உள்ள மனித குல மனங்களிலும் கூட தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கும் என்றும் நான் நம்புகிறேன். இத்தகைய முயற்சிக்காக சுஷ்மா ஜி அவர்களின் குழுவினரை மீண்டும் ஒருமுறை மனமாரப் பாராட்டுகிறேன்.

தூய்மை என்ற துறையில் நாம் முடிவுகளை இன்று பெற்றுள்ளோம். இந்த முடிவுகள் மேலும் அதிகமாக செய்யவேண்டும் என்ற உந்துதலை நமக்கு ஏற்படுத்துகிறது. எல்லாவற்றையும் செய்து விட்டதாக நாம் கூறிக்கொள்ளவில்லை. எனினும் அசுத்தத்தை நாம் வெறுக்கிறோம்; அதைத் தொடக்  கூட நாம் தயாராக இல்லை; அதிலிருந்து விலகியோடுவதுதான் நமக்கு வழக்கமாக இருந்திருக்கிறது. ஆனால் அதைத் தொடுவதன் மூலம் தூய்மையை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும் அதிகமான வெற்றியை நம்மால் அடைய முடியும். சாதாரண மனிதன் அசுத்தத்தை விரும்புவதில்லை; தூய்மையுடன் தன்னை இணைத்துக் கொள்ள அவர் தயாராக இருக்கிறார் என்பதையே இந்த நம்பிக்கை வலுப்படுத்துகிறது.

உமா பாரதி ஜி, அவரது துறை, அவரது குழு, நாட்டின் குடிமக்கள், பல்வேறு அமைப்புகள் ஆகிய இதை உறுதிப்படுத்திய அனைவருமே பாராட்டப்பட வேண்டியவர்கள்தான். இன்று அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள். அரசு ஊழியர்களைப் பற்றி வெளியே குறிப்பிட்ட ஒரு தோற்றம் இருந்தாலும் கூட, எத்தகைய அர்ப்பணிப்புடன் இந்த வேலை செய்யப்பட்டுள்ளது என்பதை வெளியில் இருந்து எவராலும் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது. அவ்வகையில் உமா பாரதி ஜி, ரமேஷ் ஜி மற்றும் அவர்களின் குழுவினருக்கு எனது மனமார்ந்த பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விஷயத்தைப் பொறுத்தவரையில் இங்கே எந்தவித அதிகார வர்க்கப் போக்கும் இல்லை. காந்திஜியின் குறிக்கோள்களை, தூய்மையை பின்பற்றுவது என்பது மட்டும்தான் ஒரே விஷயமாக இருந்தது என்று என்னால் கூற முடியும்.

ஒரு குழுவாகவே இத்தகைய பிரம்மாண்டமான வேலை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொரு அதிகாரியும் ஊழியரும் அவர் பதவியில் பெரியவரோ அல்லது சிறியவரோ, இந்த திட்டத்தை தங்களின் சொந்த திட்டமாகவே ஆக்கியிருந்தனர். இது மிகவும் அரிதான ஒன்று.

இது குறித்த எனது உணர்வு பூர்வமான நெருக்கத்தின் காரணமாக, இதை நான் உன்னிப்பாக கவனிக்கும்போதுதான் எவ்வளவு பேர் மிகவும் கடினமாக வேலை செய்து வருகின்றனர்; எவ்வளவு முயற்சிகளை அவர்கள் மேற்கொள்கின்றனர்; அவர்கள் எவ்வளவு முழுமையாக அதற்கு தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்  என்பதை எல்லாம் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

இன்று நான் தீர்க்கமான உறுதியெடுத்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. திருப்தி அடையும் தருணமும் ஆகும். எனது நாட்டவர்கள் அதன் உண்மையான பொருளில் நமது பெருமதிப்பிற்குரிய பாபுவிற்குச் செலுத்தும் ஓர் அஞ்சலியாக, போற்றுதலாக, பெருமைப்படுத்தலாகவே இந்த வேலையை கருதியுள்ளனர். மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பெருமதிப்பிற்குரிய பாபுவின் பிறந்த தின நாளன்று நம்மோடு இருக்கும் வகையில் ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் தனது நேரத்தை ஒதுக்கி தந்துள்ளார். இப்போது ஐ.நா. சபை வகுத்தளித்துள்ள இலக்குகளை இந்தியாவில் நாம் முன்னெடுத்துச் செல்கிறோம். இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று நம்மை பெருமைப்படுத்தியுள்ளார். உலகளாவிய நமது நண்பர்களும் அதனோடு தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். இன்று அவருக்கும் மற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி உரித்தாகுக!

 

***


(Release ID: 1557397)