பிரதமர் அலுவலகம்
பிரதமர் போகிபீல் பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்; முதலாவது பயணிகள் ரயிலை கொடியசைத்து துவக்கி வைத்தார்
Posted On:
25 DEC 2018 4:32PM by PIB Chennai
பிரதமர் திரு. நரேந்திர மோடி அஸ்ஸாமில் போகிபீல் பாலத்தை இன்று நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள திப்ருகர் மற்றும் தேமாஜி மாவட்டங்களுக்கு இடையே ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றின்மீது அமைந்துள்ள இந்தப் பாலம், பொருளாதார ரீதியில் நாட்டுக்கு மிகவும் பயனுள்ளதாகும். பிரம்மபுத்திராவின் வடக்கு கரையோரம் உள்ள காரேங் சப்போரியில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர், இந்தப் பாலம் வழியாகச் செல்லும் முதலாவது பயணிகள் ரயில் போக்குவரத்தை இன்று (25.12.18) கொடியசைத்து துவக்கிவைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், அஸ்ஸாமின் பிரபலப் பாடகரான தீபாலி போர்த்தாக்கூர் அண்மையில் மறைந்ததற்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார். மேலும், அம்மாநிலத்தின் பல்வேறு துறைகளில், வரலாற்றுச் சிறப்புமிக்க பிரபலங்களின் மறைவுக்கும் தனது இரங்கலை பதிவு செய்தார். தமது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களையும் மக்களுக்குத் தெரிவித்துக்கொண்டார். முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பேய்-ன் பிறந்த நாளான இன்று, நாட்டின் “நல்ஆளுமை தினம்”-ஆக கொண்டாடப்படுவதாக பிரதமர் தெரிவித்தார்.
கடந்த நான்கரை ஆண்டுகளில் மத்திய அரசு நல்ஆளுமையை நோக்கமாக கொண்டு செயலாற்றி வந்திருப்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார். வரலாற்றுச் சிறப்புமிக்க போகிபீல் ரயில்-சாலைப் பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருப்பது இந்த நோக்கத்தின் அடையாளம் என்பதையும் அவர் குறிப்பிட்டார். பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தின் அற்புதமான வெளிப்பாடுதான் இந்த பாலம் என்று குறிப்பிட்ட திரு. மோடி, நாட்டிற்கு இது முக்கியத்துவம் வாய்ந்த்து என்றும் கூறினார். அஸ்ஸாம் மற்றும் அருணாச்சலப் பிரதேச மாநிலங்களுக்கு இடையேயான தூரத்தை இந்தப் பாலம் வெகுவாக குறைத்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், இப்பகுதியில் எளிதான வாழ்க்கை முறையை மேம்படுத்தியிருப்பதாகவும் தெரிவித்தார். இப்பகுதியில் பல தலைமுறைகளாக மக்களின் கனவாக இருந்த இந்தப் பாலம் தற்போது செயல்பாட்டுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். சுகாதார சேவை, கல்வி மற்றும் வர்த்தகம் ஆகியவற்றுக்கு திப்ருகர் முக்கியமான மையமாக உள்ளது என்று பிரதமர் கூறினார். பிரம்மபுத்திராவின் வடக்குப் பகுதியில் வசிக்கும் மக்கள் தற்போது நகரெங்கும் இலகுவாக சென்றுவர முடியும் என்றும் திரு. மோடி தெரிவித்தார்.
இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த அனைவரையும் பிரதமர் பாராட்டினார்.
அஸ்ஸாமின் சதியா நகரில், கடந்த 2017-மே மாதம் நாட்டின் மிக நீளமான பூபென் ஹஸாரிகா சாலைப் பாலத்தை தாம் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்ததை அப்போது அவர் நினைவுகூர்ந்தார்.
60 – 70 ஆண்டுகளில் பிரம்மபுத்திரா ஆற்றின்மீது மூன்று பாலங்கள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும், மேலும் 3 பாலங்கள் கட்டிமுடிக்கப்பட்டதை தெரிவித்தார். மேலும் ஐந்து பாலங்களின் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் திரு. மோடி கூறினார். பிரம்மபுத்திராவின் வடக்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளின் இணைப்பு அதிகரித்திருப்பது, நல்ஆளுமையின் வெளிப்பாடாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வளர்ச்சியின் வேகம், வடகிழக்குப் பிராந்தியத்தை உருமாற்றும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.
இத்தகைய போக்குவரத்து திட்டங்கள் மூலம், மத்திய அரசின் தொலைநோக்குப் பார்வை வெளிப்படுவதாக குறிப்பிட்ட பிரதமர், நாட்டின் உள்கட்டமைப்பு வசதி அதிவேகத்தில் வளர்ந்து வருவதையும் எடுத்துரைத்தார்.
நிலுவையில் உள்ள திட்டங்களை நிறைவேற்றுவதற்கு அஸ்ஸாம் அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை பிரதமர் பாராட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளில் 700 கிலோமீட்டர் தூர தேசிய நெடுஞ்சாலைப் பணிகள் நிறைவடைந்திருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார். மேலும், வடகிழக்குப் பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு இணைப்புத் திட்டங்கள் குறித்தும் அவர் குறிப்பிட்டார். நாட்டின் கிழக்குப் பகுதியின் வலுவான முன்னேற்றம்தான் உறுதியான இந்தியாவுக்கு திறவுகோல் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டினார். உள்கட்டமைப்பு நீங்கலாக, உஜ்வாலா, ஸ்வச் பாரத் அபியான் ஆகிய பல்வேறு திட்டங்களுக்கான முயற்சிகளும் அஸ்ஸாமில் வேகமான முன்னேற்றத்துடன் நடைபெற்று வருவதாகவும் திரு. மோடி கூறினார்.
தொலைதூரப் பகுதிகளில் வாழும் இளைஞர்கள் நாட்டிற்கு கௌரவத்தை தேடித் தருவதாக பிரதமர் தெரிவித்தார். அஸ்ஸாமில் பிரபலமான ஓட்டப் பந்தய வீரர் ஹீமாதாஸ் பெயரைக் குறிப்பிட்ட அவர், புதிய இந்தியாவின் தன்னம்பிக்கையின் அடையாளங்களாக இளைஞர்கள் உருவாகி வருவதாக தெரிவித்தார்.
இந்தியாவின் எதிர்கால தேவைகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் முயற்சிகளில் அரசு ஈடுபட்டு வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறினார்.
*********
(Release ID: 1557322)
Visitor Counter : 276