பிரதமர் அலுவலகம்

பிரதமர் மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவையும் மற்றும் பல்லப்கார் – முஜேசர் மெட்ரோ இணைப்பையும் தொடங்கி வைத்தார்

Posted On: 19 NOV 2018 7:04PM by PIB Chennai

    பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹரியானா மாநிலம் குருகிராம் அருகே சுல்தான்பூரில் குண்டலி – மனேசர் – பல்வால் (KMP) மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவை இன்று தொடங்கி வைத்தார். மேலும். பல்லப்கார் – முஜேசர் மெட்ரோ இணைப்பையும் தொடங்கி வைத்த பிரதமர், விஷ்வ கர்மா திறன் பல்கலைக்கழகத்திற்கான அடிக்கல் நாட்டி உரையாற்றினார்.

    திரளாக கூடியிருந்த மக்களிடையே பேசிய பிரதமர், விரைவு வழித்தடமும், மெட்ரோ இணைப்பும் ஹரியானாவில் போக்குவரத்து புரட்சியை மேம்படுத்தும் என்று தெரிவித்தார். இப்பகுதியில் உள்ள இளைஞர்கள், விஸ்வ கர்மா திறன் பல்கலைக்கழகத்தின் மூலம் பெருமளவில் பயன் பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.

     குண்டலி – மனேசர் – பல்வால் (KMP) மேற்கு புறவழி விரைவு வழித்தடத் திட்டத்தை முன்னுரிமை அடிப்படையில், முடிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருந்ததை  சுட்டிக்காட்டிய திரு. மோடி,  விரைவு வழித்தடம் தில்லி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காற்று மாசுபடுவதை குறைப்பதில் பெரும் பங்காற்றும் என்றார்.  சுற்றுச் சூழலுக்கு உகந்த பயணத்துடன் வாழ்க்கையை எளிதாக்கவும் இந்தத் திட்டம் வழிவகுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

  போக்குவரத்து இணைப்பின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி, வளம், அதிகாரமயமாக்கல் மற்றும் அணுகுமுறைக்கும் அது பாலமாக அமைந்துள்ளது என்றார்.  நெடுஞ்சாலைகள், மெட்ரோக்கள் மற்றும் நீர்வழித்தடங்கள் பசுமைச் சுற்றுச்சூழலோடு அமைக்கப்படுவதால் உற்பத்தித் துறை கட்டுமானம் மற்றும் சேவைத் துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று கூறினார். நாள் ஒன்றுக்கு 27 கிலோ மீட்டர் தூர நெடுஞ்சாலை தற்போது அமைக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்ட பிரதமர், கடந்த 2014-ம் ஆண்டில் நாள் ஒன்றுக்கு 12 கிலோமீட்டர் தூர நெடுஞ்சாலை மட்டுமே அமைக்கப்பட்டது என்று கூறினார்.  இந்தியாவில் அதிக அளவில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் மத்திய அரசு கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வையை இது  வெளிப்படுத்துவதாக திரு.மோடி தெரிவித்தார்.

   நாட்டிலுள்ள இளைஞர்களின் ஆர்வங்களை நிறைவேற்றுவதில் மத்திய அரசு உறுதி பூண்டுள்ளதாகத் தெரிவித்த பிரதமர், விஸ்வ கர்மா திறன் பல்கலைக்கழகம், புதிய வாய்ப்புகளை பெறும் வகையில் இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும் என்றார்.

   மத்திய அரசின் திட்டங்களை வெற்றிகரமாக  அமல்படுத்தி வரும் ஹரியானா மாநில அரசின் முயற்சிகளை பிரதமர், பாராட்டினார். ஹரியானா மாநில இளைஞர்கள், நாட்டுக்கு ஆற்றிவரும் பங்களிப்புகளை குறிப்பாக விளையாட்டுத்துறையில் அவர்களின் பங்கை பிரதமர் திரு. நரேந்திர மோடி வெகுவாக புகழ்ந்தார்.  

--------------------

வி.கீ./நைனா/கீதா
 



(Release ID: 1553263) Visitor Counter : 152