பிரதமர் அலுவலகம்

பிரதமர் அவரது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆலோசனைக்குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினார்

Posted On: 13 NOV 2018 2:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆலோசனைக்குழு உறுப்பினர்களை இன்று சந்தித்துக் கலந்துரையாடினார். இந்தக் குழு அறிவியல், தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்பு, இவை தொடர்பான பிரதமரின்  தொலைநோக்குப் பார்வைக்கான அமலாக்கத்தை கண்காணித்து ஆலோசனை கூறுகிறது.

    புதிய கண்டுபிடிப்புகளை அதிகரிப்பதற்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முக்கிய துறைகளில் ஆராய்ச்சிக்கும் மேற்கொள்ளப்படும் பல்வேறு நடவடிக்கைகளைக் குழுவின் உறுப்பினர்கள் பிரதமருக்கு எடுத்துரைத்தனர்.

    அறிவியல், தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகளின் பயன்கள், சாமானிய மக்களையும் சென்றடைய வேண்டும், என்றும் அவர்களின் அன்றாடப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் இந்திய மக்களின் வாழ்க்கை எளிதாக இருப்பதற்கு வசதி செய்ய வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார். இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கும்,  ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு சோதனைக் கூடங்களுக்கும், தொழில்துறைக்கும், அரசின் பல்வேறு துறைகளுக்கும் இடையே வலுவான தொடர்புகளை உருவாக்கக் குழு உறுப்பினர்கள் பாடுபடவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். கல்வி நிறுவனங்களுக்கும், ஆராய்ச்சி நிறுவனங்களுக்கும் இடையே உள்ள தடைகளைத் தகர்ப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்தார் .

    பள்ளிக் குழந்தைகளிடம் உள்ள அறிவியல் திறனைக் கண்டறிந்து வளர்ப்பதற்கும், அவர்களை மாவட்ட மற்றும் மண்டல நிலையில் உள்ள  அடல் டிங்கரிங்  சோதனைக் கூடங்களுடன் இணைப்பதற்குப் பொருத்தமான அமைப்புகளையும், நடைமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்று பிரதமர் கேட்டுக் கொண்டார்.  இந்நிலையில், விவசாய வருமானத்தை அதிகரித்தல், ரத்தசோகை போன்ற நாள்பட்ட மற்றும் மரபு வழி நோய்களுக்குத் தீர்வு காணுதல், கழிவுப் பொருள் நிர்வாகம், சைபர் பாதுகாப்பு போன்ற ஆராய்ச்சிக்குரிய முன்னுரிமைத் துறைகள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

   பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகர், பேராசிரியர் கே. விஜயராகவன் , குழுவின் உறுப்பினர்கள், மத்திய அரசின் மூத்த அதிகாரிகள், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

 

வி.கீ./எஸ்.எம்.பி./கீதா



(Release ID: 1552626) Visitor Counter : 122