பிரதமர் அலுவலகம்

வாரணாசியில் பிரதமர்: பல்வகை முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்; முக்கியமான சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைத்தார்

Posted On: 12 NOV 2018 9:19PM by PIB Chennai

   பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (12.11.2018) வாரணாசியில்  பயணம் மேற்கொண்டார்.

     ரூ.2,400 கோடிக்கும் அதிகம் மதிப்புள்ள திட்டங்களை அவர் அர்ப்பணித்தார், தொடங்கி வைத்தார்  அல்லது அடிக்கல் நாட்டினார்.

       கங்கை நதியின் மீது பல்வகை முனையத்தை நாட்டுக்கு அர்ப்பணித்த அவர் முதலாவது சரக்குப் பெட்டகத்தையும் வரவேற்றார். வாரணாசி வட்டச்சாலை பகுதி -1, மற்றும் தேசிய நெடுஞ்சாலை 56-ல் உள்ள பபட்பூர் – வாரணாசிப் பிரிவில்  நான்கு வழிச் சாலை கட்டுமானம் மற்றும் மேம்பாட்டை அவர்  தொடங்கி வைத்தார். வாரணாசியில்,  மேலும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர்  தொடங்கி வைத்தார், அடிக்கல்லும் நாட்டினார்.

   இந்த நிகழ்ச்சியின்போது ஆர்வத்துடன் ஏராளமாகத் திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், இந்த நாள் காசிக்கு, பூர்வாஞ்சலுக்கு, கிழக்கு இந்தியாவுக்கு, ஒட்டுமொத்த இந்தியாவுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றார்.  இன்று செயல்படுத்தப்படும் வளர்ச்சிப்பணி பத்தாண்டுகளுக்கு முன்பே பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். போக்குவரத்து வசதிக்கு அடுத்தத் தலைமுறையின் கட்டமைப்புக்கான தொலைநோக்குப் பார்வையுடன் வாரணாசியுடன் ஒட்டுமொத்த தேசமும், எப்படி  மாறி  வருகிறது என்பது இப்போது கண்முன் தெரிகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

      உள்நாட்டு நீர்வழியில் முதலாவது சரக்குப் பெட்டகம் வாரணாசிக்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நீர்வழிப்பாதையின் மூலம் கிழக்கு உத்தரப்பிரதேசம் தற்போது வங்காள விரிகுடாவுடன்  இணைக்கப்பட்டுள்ளது என்றார்.

   கங்கைப் பாதுகாப்பு திட்டங்கள், மற்றும் சாலைகள், உட்பட பல்வேறு திட்டங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன அல்லது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

    உள்நாட்டு நீர்வழிப்பாதை நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும், சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும்,   எரிபொருள் செலவைக் குறைக்கும், வாகனப் போக்குவரத்தால் ஏற்படும் மாசினையும் குறைக்கும் என்று  பிரதமர் தெரிவித்தார்.

   பபட்பூர் விமான நிலையத்தின் சாலை வாரணாசியுடன் இணைக்கப்படுவது போக்குவரத்து வசதியைத் தவிர சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் என்று அவர் கூறினார்.

       கடந்த நான்கு ஆண்டுகளில் நவீனக் கட்டமைப்புகள் வெகு வேகமாக உருவாகி வருகின்றன என்றும் பிரதமர் குறிப்பிட்டார். தொலைதூரப் பகுதிகளில் விமான நிலையங்கள், வடகிழக்கின் பகுதிகளில் ரயில்போக்குவரத்து, ஊரகச் சாலைகள், மற்றும் நெடுஞ்சாலைகள் மத்திய அரசின் அடையாளங்களில் ஒரு பகுதியாக மாறியிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.

  கங்கை தூய்மைத் திட்டத்திற்கு இதுவரை ரூ.23,000 கோடி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் கூறினார். கங்கை நதியின் கரையோரங்களில் உள்ள ஏறத்தாழ எல்லா கிராமங்களும் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லாதவையாக தற்போது மாறியிருக்கின்றன என்று அவர் தெரிவித்தார்.  கங்கையைத் தூய்மைப்படுத்துவது என்ற மத்திய அரசின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் உள்ளன என்று அவர் கூறினார்.

 

 

வி.கீ./எஸ்.எம்.பி./கீ



(Release ID: 1552547) Visitor Counter : 131