பிரதமர் அலுவலகம்
ஜப்பான் பயணம் குறித்து பிரதமர் வெளியிட்ட பத்திரிகைக் குறிப்பின் தமிழாக்கம்
Posted On:
29 OCT 2018 5:06PM by PIB Chennai
பிரதமர் மற்றும் எனது நெருங்கிய நண்பர் திரு.அபே அவர்களே,
மேன்மை மிக்க பிரதிநிதிகளே,
நண்பர்களே,
வணக்கம்,
டோக்கியோவிலும், முன்னதாக யமானாஷியிலும் மற்றும் அவரது இல்லத்திலும் திரு. அபே, பாசத்துடன் தம்மை வரவேற்றது எனது ஜப்பான் பயணத்தை என்றுமே மறக்க முடியாத நிகழ்வாக்கிவிட்டது. கிழக்கு மற்றும் மேற்கு கலாச்சாரங்கள் ஒன்றிணைந்த மதிப்பு மிக்க சிறந்த நாடாக ஜப்பான் திகழ்கிறது. மனித சமுதாயத்தின் மேம்பாட்டிற்கான வழியை நமக்கு போதித்த சிறந்த நாடாகும் இது. இவ்வழி பண்டைய மற்றும் புதிய வழிகளுக்கான மோதல் அல்ல. அவை ஒன்றுக்கொன்று ஒத்துழைக்கக்கூடியதும், ஆக்கப்பூர்வமானதுமாகும். புதியனவற்றை ஏற்றுக்கொள்வதும் பழையனவற்றுக்கு மதிப்பளிப்பதும் என்பது உலக நாகரிகத்திற்கு ஜப்பான் அளித்துள்ள பங்களிப்பாகும். இந்தியா மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே நெருங்கிய ஒற்றுமையையும் இவை வெளிப்படுத்துகின்றன.
மேன்மைதாங்கியோரே,
இந்தியா, ஜப்பான் நாடுகளிடையேயான உறவு ஆழமானது மற்றும் இந்திய, பசிபிக் கடல் பகுதியிலும் அது விரிவானது. இந்த உறவுகள், ஜனநாயக மாண்புகளைப் பகிர்ந்து கொள்வதில் உறுதி, சுதந்திரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தவை. நமது உறவுகளின் எதிர்கால மேம்பாட்டிற்குரிய மகத்தான பார்வை குறித்து நேற்றும், இன்றும் நான் திரு. அபேயுடன் மிகவும் பயனுள்ள உரையாடலை நடத்தியுள்ளேன். இன்று இந்தப் பகிர்வின் தொலைநோக்கிற்கு நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். நமது எதிர்காலத்திற்கு புதிய ஒளியை இது வழங்கும். மின்னணு கூட்டாளித்துவத்திலிருந்து சைபர் ஸ்பேஸ், சுகாதாரத்திலிருந்து பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, கடலிலிருந்து விண்வெளி ஆகியவற்றுக்கான ஒத்துழைப்பை தடையின்றி வழங்கும் ஒப்பந்தத்தை நாம் முற்றிலுமாக ஏற்றுக் கொண்டுள்ளோம். ஜப்பான் முதலீட்டாளர்கள் இந்தியாவில் புதிதாக 2.5 பில்லியன் டாலர் முதலீடு செய்ய அறிவித்திருப்பது குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவில் 30,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்க இது உதவும். இந்தப் பயணத்தின் போது கையெழுத்தாகியுள்ள இரு நாடுகளின் பணமாற்று ஏற்பாட்டுக்கான ஒப்பந்தம் நமக்கிடையே உள்ள நம்பிக்கை மற்றும் மேம்பட்டு வரும் நெருங்கிய பொருளாதார பங்களிப்பை தெளிவாகப் பிரதிபலிக்கிறது.
நண்பர்களே,
21ஆவது நூற்றாண்டு, ஆசியாவின் நூற்றாண்டாகும். ஆனால், அதன் வடிவம் மற்றும் உண்மை நிலை குறித்து கேள்விகள் எழுகின்றன. யார் பயனடைவர்? செயல்படுத்துவதற்கான தேவைகள் என்ன? இப்படி பல கேள்விகள் உள்ளன. எனினும் ஒன்று மட்டும் மிகத் தெளிவாக உள்ளது. இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஒத்துழைப்பின்றி 21ஆவது நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டாக இருக்க முடியாது.
இந்தியா - ஜப்பான் இடையே வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் அளவிலான 2 + 2 ஆலோசனைக் கூட்டத்திற்கு திரு அபே-யும் நானும் ஒப்புக்கொண்டுள்ளோம். உலகில் அமைதியையும், ஸ்திரத்தன்மையையும் உருவாக்குவதே இதன் நோக்கமாகும். சர்வதேச சூரிய மின்சக்தி கூட்டணியில் ஜப்பான் இடம்பெற்றிருப்பது உலகின் நலனுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் மற்றொரு ஒளிமயமான எடுத்துக்காட்டாகும்.
நண்பர்களே,
அடுத்த ஆண்டு, ஜி-20 உச்சிமாநாட்டை ஒசாக்காவில் ஜப்பான் நடத்தவுள்ளது. உலகக் கோப்பைக்கான ரக்பி-யும் அடுத்த ஆண்டு ஜப்பானில் நடைபெறவுள்ளது. இந்த விளையாட்டு ஆசியாவில் முதல் முறையாக நடைபெறவுள்ளது. அதன் பிறகு 2020 ஒலிம்பிக் போட்டிகள் டோக்கியோவில் நடைபெற உள்ளன. உலக அளவிலான இந்த முக்கிய நிகழ்வுகளுக்கு எனது சார்பிலும், ஒட்டுமொத்த இந்தியாவின் சார்பிலும், எனது மனமார்ந்த வாழ்த்துக்களை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்களே,
ஜப்பானின் கெய்ஸன் தத்துவத்தின்படி, இந்தியா-ஜப்பான் உறவுகளின் முன்னேற்றத்திற்கு எல்லையில்லை. பிரதமர் திரு.அபே-யுடன் இந்த உறவை மேலும் வலுப்படுத்த நான் உறுதிபூண்டுள்ளேன். மீண்டும் திரு.அபே-க்கும், ஜப்பான் அரசுக்கும் உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
****
(Release ID: 1552049)
Visitor Counter : 184