பிரதமர் அலுவலகம்

ஆஷரா முபாரகா – இமாம் ஹுஸைன் உயிர்த் தியாக நினைவு நாள் நிகழ்ச்சியில் பிரதமர் கலந்துகொண்டு உரையாற்றினார்

Posted On: 14 SEP 2018 2:59PM by PIB Chennai

இந்தூரில் தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் ஏற்பாடு செய்த இமாம் ஹுஸைன் உயிர்த்தியாக நினைவு நிகழ்ச்சியான ஆஷரா முபாரகாவில் இன்று (14.09.2018) பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துகொண்டு அங்குத் திரளாகக் கூடியிருந்தோரிடையே உரையாற்றினார்.

இமாம் ஹுஸைனின் தியாகத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இமாம் எப்பொதுமே அநீதிக்கு எதிராக நின்றார் எனவும் அமைதியையும் நீதியையும் உயர்த்திப் பிடிப்பதற்காக அவர் உயிர் தியாகம் புரிந்தார் எனவும் கூறினார். இமாமின் போதனைகள் இன்றும் பொருத்தப்பாடு உடையது என்றும் அவர் குறிப்பிட்டார். டாக்டர் ஸ்யேட்னா முஃபாடல் சைஃபுதீனின் பணிகளைப் பாராட்டிய பிரதமர், தேசத்தின் பால் கொண்ட அன்பும் அர்ப்பணிப்புமே அவரது போதனைகளின் அடிநாதமாகும் என்றார்.

அனைவரையும் அரவணைத்துச் செல்லும் பண்பு பிற நாடுகள் அனைத்திலிருந்தும் இந்தியாவை வேறுபடுத்தும்  என்று பிரதமர் கூறினார். “ நாம் நமது கடந்த காலம் குறித்துப் பெருமிதம் கொள்கிறோம், நமது நிகழ்காலத்தை நம்புகிறோம், நமது ஒளிமயமான எதிர்காலம் குறித்து நம்பிக்கை கொள்கிறோம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தாவூதி போஹ்ரா சமுதாயத்தினரின் பங்களிப்புகள் பற்றிப் பாராட்டிய பிரதமர், இந்தியாவின் முன்னேற்றத்திலும் அதன் வளர்ச்சி வரலாற்றிலும் இந்தச் சமுதாயத்தினர் எப்போதுமே ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்துள்ளனர் என்று கூறினார். இந்தியாவின் கலாச்சாரத்தின் வலிமையை உலகெங்கும் பரப்பும் மாபெரும் பணியை இந்தச் சமுதாயத்தினர் தொடர்ந்து செய்வார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

போஹ்ரா சமுதாயத்தினரைப் புகழ்ந்து பேசிய பிரதமர் திரு. மோடி, இந்தச் சமுதாயத்தின் பேரன்பைப் பெற்றது தனது அதிர்ஷ்டமே என்றார். தான் குஜராத்தின் முதல்வராக இருந்தபோது இந்தச் சமுதாயத்தினர் அளித்த உதவியை நினைவு கூர்ந்த மோடி இந்தச் சமுதாயத்தினர் காட்டிய பேரன்பே தம்மை இந்தூருக்கு அழைத்துவந்ததாகக் குறிப்பிட்டார்.

தாவூதி போஹ்ரா சமுதாயத்தினர் மேற்கொண்டுவரும் பல்வேறு சமூக முன்முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், குடிமக்களின், குறிப்பாக வறியவர்கள் மற்றும் உதவி தேவைப்படுவோரின் முன்னேறிய வாழ்க்கைத்தரத்தை உத்தரவாதப்படுத்த அரசு எடுத்துவரும்  பல்வேறு முயற்சிகளைக் குறிப்பிட்டார். ஆயுஷ்மான் பாரத், ஸ்வச் பாரத் அபியான், பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா போன்ற அரசின் பல்வேறு மேம்பாட்டு ரீதியான முன்முயற்சிகளையும் அவர் குறிப்பிட்டார். இந்த முன்முயற்சிகள் சாதாரண மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்துள்ளதாக அவர் கூறினார்.

ஸ்வச் பாரத் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்காக இந்தூர் மக்களுக்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்தார். ‘ஸ்வச்சதா ஹி சேவா’ திட்டம் நாளை தொடங்கப்படும் என்று தெரிவித்த அவர், இந்த மாபெரும் இயக்கத்தில் துடிப்புடன் செயல்படுமாறு குடிமக்களைக் கேட்டுக் கொண்டார்.

வணிகத்தில் போஹ்ரா சமுதாயத்தினர் நேர்மையைக் கடைபிடித்துவருவதாகக் குறிப்பிட்ட பிரதமர், சரக்கு மற்றும் சேவை வரி, நொடித்தல் மற்றும் திவால் குறியீடு ஆகியவற்றின் மூலம் நேர்மையான வியாபாரிகள் மற்றும் பணியாளர்களை அரசு ஊக்குவிக்கிறது என்றார். இந்தியப் பொருளாதாரம் வளர்ச்சி கண்டு வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர், புதிய இந்தியா உதயமாகி வருகிறது என்றார்.

இந்த நிகழ்ச்சியில் மத்தியப் பிரதேச மாநில முதல்வர் திரு. சிவராஜ் சிங் சவுஹான் கலந்துகொண்டார். முன்னதாக, டாக்டர் ஸ்யேத்னா முஃபாட்டல் சைஃபுதீன் பிரதமரின் தன்னிகரற்ற பணிகளுக்காக அவரைப் பாராட்டி, நாட்டுக்கான அவரது பணிகள் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தார்.    



(Release ID: 1546152) Visitor Counter : 147