பிரதமர் அலுவலகம்

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரதமர் ஊதிய உயர்வு அறிவித்தார்

Posted On: 11 SEP 2018 1:30PM by PIB Chennai

ஆஷா மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி, குறிப்பிடத்தக்க ஊதிய உயர்வை அறிவித்துள்ளார்.  இன்று லட்சக்கணக்கான ஆஷா, அங்கன்வாடி பேறுகால உதவி செவிலியர்கள் ஆகியோரிடையே காணொலி மூலம் கலந்துரையாடியபோது பிரதமர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.  அடுத்த மாதம் முதல் ஊதிய உயர்வு அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

மத்திய அரசு ஆஷா பணியாளர்களுக்கு அளித்து வரும் வழக்கமான ஊதியம் இரண்டு மடங்காக உயர்த்தப்படும் என்று பிரதமர் அறிவித்தார்.  மேலும், பிரதமர் ஆயுள் காப்பீட்டுத் திட்டம், பிரதமர் விபத்து காப்பீடு திட்டம் ஆகியவற்றின் மூலம் அனைத்து ஆஷா பணியாளர்கள், அவரது உதவியாளர்கள் ஆகியோருக்கு இலவச காப்பீடுகள் வழங்கப்படும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் குறிப்பிடத்தக்க அளவு உயருவதாக பிரதமர் அறிவித்தார்.  இதுவரை ரூ.3000 பெற்றவர்கள் இனி ரூ.4500 பெறுவார்கள்.  இதேபோல ரூ.2200 பெற்றவர்கள் இனிமேல் ரூ.3500 பெறுவார்கள்.  அங்கன்வாடி உதவியாளர்களின் மதிப்பூதியமும் ரூ.1500-லிருந்து ரூ.2250-ஆக உயர்த்தப்படுகிறது.

பொதுப் பயன்பாட்டு மென்பொருள் (ஐ.சி.டி.எஸ்-சி.ஏ.எஸ்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கூடுதல் ஊக்குவிப்பு தொகைகள் வழங்கப்படும் என்றும் பிரதமர் அறிவித்தார்.  இவர்களது செயல் திறன்களுக்கு ஏற்ப ரூ.250 முதல் ரூ.500 வரை இந்தத் தொகைகள் இருக்கும்.

பிரதமர் நாடெங்கிலும் உள்ள ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பேறுகால உதவி செவிலியர்கள் ஆகியோரிடையே பிரதமர் கலந்துரையாடினார்.  சேர்ந்து உழைப்பது, புதுமையான வழிவகைகள், தொழில்நுட்பங்கள் பயன்படுத்துவது, மருத்துவ, ஊட்டச்சத்து சேவைகள் வழங்குதலை மேம்படுத்துவது, போஷான் அபியான் (ஊட்டச்சத்து இயக்கம்) இலக்குகளை அடைவது, ஊட்டச்சத்துக் குறைவை குறைப்பது ஆகியவற்றில் இவர்களது சேவைகளை பிரதமர் பாராட்டினார்.       

 *****



(Release ID: 1545641) Visitor Counter : 231