பிரதமர் அலுவலகம்

இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் தொடங்கி வைத்தார் – அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைக்கான பெரிய முன்முயற்சி

Posted On: 01 SEP 2018 5:56PM by PIB Chennai

இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (01.09.2018) புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். தில்லியில் நடைபெற்ற இந்த முதன்மை நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 3,000 இடங்களில் நேரடியாக காணப்பட்டது.

  இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கி மூலம், நாட்டின் மிகவும் தொலைதூர இடங்களில் வாழ்கின்ற மக்களுக்கும், எளிமையாக வங்கி சேவைகள் சென்றுசேரும் என்றார்.

  அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவையை உருவாக்க ஏற்கெனவே ஜன்தன் எனும் மக்கள் நிதித் திட்டத்தை மத்திய அரசு தொடங்கியதை அவர் நினைவுக்கூர்ந்தார். இந்த நோக்கத்தை நிறைவேற்ற மேலும் ஒரு நடவடிக்கையாக இன்று இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கி தொடங்கப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த வங்கியின் கிளைகள் இன்று 650 மாவட்டங்களிலும் திறக்கப்படுகின்றன.

  கிராமங்களில் மதிக்கத்தக்க மற்றும் ஏற்புடைய மனிதராக அஞ்சல் ஊழியர் இருப்பதாக பிரதமர் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ளபோதும், அஞ்சல் ஊழியர்கள் மீதான நம்பிக்கை அப்படியே உள்ளது என்று அவர் கூறினார். தற்போதுள்ள கட்டமைப்புகளையும், நடைமுறைகளையும் சீர்திருத்தி மாறிவரும் காலத்திற்கேற்ப அவற்றில்  மாற்றம் செய்வது அரசின் அணுகுமுறை என்றும் அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் 1.5 லட்சம் அஞ்சலகங்கள் இருப்பதாகவும், அவற்றில் 3 லட்சம் அஞ்சல் ஊழியர்கள் பணிபுரிவதாகவம், இவர்கள் நாட்டின் மக்களை இணைப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். தற்போது அவர்களுக்கு நவீன செல்பேசிகளையும், டிஜிட்டல் கருவிகளையும் அளித்து நிதிச் சேவைகள் வழங்கும் அதிகாரம் அளிக்கப்படவுள்ளது.

  இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியின் பயன்கள் பற்றி விவரித்த அவர், இதன் மூலம் பணப் பரிமாற்றம் செய்யவும், அரசின் பணப் பயன்களை மாற்றிக்கொள்ளவும், கட்டணங்கள் செலுத்தவும், முதலீடு மற்றும் காப்பீடு போன்ற பிற சேவைகளைப் பெறவும் முடியும் என்றார். இந்த சேவைகளை அஞ்சல் ஊழியர் வீடுதேடி வழங்குவார். இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியில் டிஜிட்டல் பரிவர்த்தனை வசதியும் உள்ளது. பிரதமரின் பயிர் காப்பீட்டுத் திட்டம் போன்றவற்றுக்கான பயன்களை பெற இது உதவும். விவசாயிகளுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

  இந்தியாவின் வங்கித் துறையில் கடனுக்கான முன்பணம் வழங்குவதில், பாகுபாடுக் காட்டியதன் காரணமாக எழுந்த பல்வேறு பிரச்சினைகளை சீர்குலைவுகளைக் கையாள்வதில் 2014-லிருந்து மத்திய அரசு கண்டிப்புடன் உள்ளது என்று பிரதமர் கூறினார். தற்போதுள்ள கடன்கள் மறுஆய்வு செய்யப்பட்டுள்ளன. வங்கித்துறை தொடர்பாக தொழில் ரீதியான அணுகுமுறை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். தலைமறைவு, பொருளாதார குற்றவாளிகள் மசோதா போன்ற நடவடிக்கைகளால் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவது உறுதியாகும் என்று அவர் தெரிவித்தார்.

  சுயவேலை வாய்ப்புகளை உருவாக்க ஏழை, எளியவர்கள் மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு 13 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முத்ரா கடன்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதமர் கூறினார். ஆசிய விளையாட்டுகளில் இந்தியா மிகச்சிறந்த சாதனைகளை செய்துள்ளது. இந்திய பொருளாதாரம் வெகு சிறப்பான வளர்ச்சியைக் காட்டுகிறது. ஒட்டுமொத்த தேசமும்,  புதிய தன்னம்பிக்கையால் நிறைந்துள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். இவையெல்லாம் மக்களின் கூட்டு முயற்சியால் ஏற்பட்ட விளைவுகள் என்று அவர் கூறினார். இந்தியா உலகிலேயே வெகு விரைவான பொருளாதார வளர்ச்சி பெறும் நாடு மட்டுமல்ல, அது அதிவேகமாக வறுமையை அகற்றிவரும்  நாடும் ஆகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.

  கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும், ஒவ்வொரு விவசாயிக்கும், ஒவ்வொரு சிறு தொழில் நிறுவனங்களுக்கும், நிதிச் சேவைகள்  வழங்குவதில் 3 லட்சம் அஞ்சல் ஊழியர்களும் முக்கியப் பங்கு வகிப்பார்கள் என்று பிரதமர் தெரிவித்தார். அண்மை மாதங்களில் அஞ்சல் ஊழியர்களின் நலன்களுக்கு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள அவர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகாணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இவை அவர்களின் ஊதியத்தில் கணிசமான உயர்வுக்கு வழிவகுத்துள்ளன என்றும் அவர் கூறினார். இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கி அடுத்த சில மாதங்களில் நாடு முழுவதும் உள்ள 1.5 லட்சம் அஞ்சலகங்களில் செயல்படும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

=============


(Release ID: 1544747) Visitor Counter : 382