மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

கேரளாவில் மழை, வெள்ளத்தால் சான்றிதழ்கள் பாதிக்கப்பட்ட பள்ளிகள் மற்றும் மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ. உதவி

சி.பி.எஸ்.இ. மாணவர்களுக்கு டிஜிட்டல் சான்றிதழ்கள் / மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்

இடுகை இடப்பட்ட நாள்: 28 AUG 2018 11:59AM by PIB Chennai

கேரளாவைச் சேர்ந்த சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவர்களுக்கு உதவும் ஒரு சிறப்பு நடவடிக்கையாக, மழை, வெள்ளத்தால் சேதமடைந்த அல்லது காணாமல் போன கல்வி சான்றிதழ்கள், குறிப்பாக, மதிப்பெண் சான்றிதழ்கள் / இடப்பெயர்வு சான்றிதழ்கள் / தேர்ச்சி சான்றிதழ்களுக்கு பதிலாக புதிதாக டிஜிட்டல் சான்றிதழ்களை வழங்க சி.பி.எஸ்.இ. நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கேரளாவில் சி.பி.எஸ்.இ. கட்டுப்பாட்டில் 1,300-க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன. சி.பி.எஸ்.இ. வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான கல்வி சான்றிதழ்கள், உயர் படிப்பு மற்றும் வேலைவாய்ப்புக்கு மிக அவசியம் என்பதால் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன.

தேசிய மின் ஆளுகைப் பிரிவின் தொழில்நுட்ப ஒத்துழைப்புடன், “பரிணாம் மஞ்சுஷா” என்ற டிஜிட்டல் பள்ளி சான்றிதழ் சேமிப்பு திட்டம் ஒன்றை சி.பி.எஸ்.இ. சொந்தமாக உருவாக்கி உள்ளது. இந்தத் திட்டத்தின்கீழ், மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டவை டிஜிலாக்கர் முறையில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகின்றது.

பரிணாம் மஞ்சுஷா / டிஜிலாக்கர் முறையில் பராமரிக்கப்படும் டிஜிட்டல் கல்வி சான்றிதழ்களில்,  சி.பி.எஸ்.இ.  அமைப்பின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் டிஜிட்டல் கையொப்பமிட்டிருப்பதால், இந்த சான்றிதழ்கள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி செல்லத்தக்கவையாகும் என்றும் சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. இத்தகைய சான்றிதழ்களில் கியூ.ஆர்.கோட். எனப்படும் விரைவு செயல்பாட்டு குறியீடுகளை பயன்படுத்தி டிஜிலாக்கர், செல்போன் செயலி மூலம், இவற்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் சான்றிதழ்களைப் பெறுவதற்கான வழிமுறைகள்:

1. மாணவர்கள் https://cbse.digitallocker.gov.in என்ற  பரிணாம் மஞ்சுஷா வலைதளத்திற்கு சென்று உரிய கடவு சொற்களைப் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

2. மாணவர்களுக்கு வசதியாக வலைதளத்திற்குள் செல்வதற்கான அனுமதி எண் மற்றும் கடவுச்சொல், மாணவர்கள் ஏற்கெனவே தங்களது பொதுத்தேர்வின்போது கொடுத்த செல்போன் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

3. தேர்வின்போது செல்போன் எண் கொடுக்காதவர்களும், செல்போன் எண்ணை மாற்றியவர்களும், டிஜிலாக்கர் வலைதளத்துடன் ஆதார் எண் மற்றும் பள்ளிக்கூட வரிசை எண், தேர்ச்சி பெற்ற ஆண்டு போன்றவற்றை இணைத்து  சான்றிதழ்களைளப் பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் விவரங்களுக்கு www.pib.nic.in என்ற வலைதளத்தைப் பார்க்கவும்.

       ******


(வெளியீட்டு அடையாள எண்: 1544149) வருகையாளர் எண்ணிக்கை : 155
இந்த வெளியீட்டை படிக்க: Urdu , English , Marathi , Bengali , Malayalam