பிரதமர் அலுவலகம்
நகர்ப்புற மேம்பாட்டு முயற்சிகள் தொடங்கப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றினார் பிரதமர்
Posted On:
28 JUL 2018 8:52PM by PIB Chennai
நகர்ப்புற மேம்பாடு தொடர்பாக மூன்று முக்கிய அரசு திட்டங்கள் தொடங்கப்பட்டதன் மூன்றாவது ஆண்டு நிறைவையொட்டி, “நகர்ப்பகுதி நிலஅமைப்பை மாற்றியமைத்தல்” குறித்து லக்னோவில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி உரையாற்றினார். பிரதம மந்திரி வீட்டுவசதி திட்டம் (நகர்ப்புறம்); நகர்ப்புற மாற்றியமைப்பு மற்றும் புத்துயிரூட்டலுக்கான அடல் திட்டம் (அம்ருத்); பொலிவுறு நகரங்கள் திட்டம் ஆகியவையே இந்த மூன்று திட்டங்கள்.
நகர்ப்புற மேம்பாட்டுக்கான முக்கியத் திட்டங்கள் குறித்த கண்காட்சியை பிரதமர் பார்வையிட்டார். பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்டத்தின் (நகர்ப்புறம்) கீழ் பயனடைந்தவர்களில் ஒவ்வொரு மாநிலம்/யூனியன் பிரதேசத்திலிருந்து தலா ஒருவர் வீதம், 35 பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
பிரதம மந்திரியின் வீட்டுவசதித் திட்ட பயனாளிகளின் கருத்துகளை, உத்தரப்பிரதேசத்தின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பயனாளிகளிடம் காணொலிக் காட்சி மூலம் கேட்டறிந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில், முக்கிய இயக்கங்களின் கீழ் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டிவைத்தார்.
கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய பிரதமர், இங்கு கூடியுள்ள நகர்ப்புற நிர்வாகிகள், நகரங்களின் பிரதிநிதிகளாக இருப்பதாகத் தெரிவித்தார். இது புதிய இந்தியா மற்றும் புதிய சந்ததிகளின் விருப்பங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளின் அடையாளமாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
பொலிவுறு நகரங்கள் திட்டத்தின்கீழ், ரூ.7,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும், ரூ.52,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். கீழ்நிலை, கீழ் நடுத்தர மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு சிறப்பான பொது வசதிகளை அளிப்பதும், அவர்களது வாழ்க்கையை எளிதாக்குவதுமே இந்த இயக்கத்தின் இலக்கு என்று அவர் தெரிவித்தார். இந்த இயக்கத்தின் முக்கிய பகுதியாக ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையங்கள் திகழ்வதாக பிரதமர் கூறினார். 11 நகரங்களில் இந்த மையங்கள் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும், மேலும் பல்வேறு நகரங்களில் செயல்படுத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்-இன் முயற்சிகளை நினைவுகூர்ந்த திரு.நரேந்திர மோடி, நகர்ப்புற இந்தியாவின் அமைப்பை மாற்றியமைப்பதற்கான இலக்கு, திரு.வாஜ்பாய் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த லக்னோ-வுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.
திரு.அடல் பிகாரி வாஜ்பாய் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை வரவேற்ற பிரதமர், இந்த நடவடிக்கைகளை தொடரச் செய்வதுடன் வாழ்க்கைத் தரத்தை வேகமாகவும், தரமானதாகவும் மாற்ற மத்திய அரசு பணியாற்றி வருவதாக தெரிவித்தார். 2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு வழங்க அரசு விரும்புவதாக பிரதமர் கூறினார். புள்ளி விவரங்களை தெரிவித்த பிரதமர், இந்த கோணத்தில் ஏராளமான பணிகள் மேற்கொள்ளப்பட்டது குறித்து விளக்கினார். கழிவறைகள் மற்றும் மின்சார இணைப்புடன் இன்று வீடுகள் கட்டப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். பெண்களின் பெயரில் வீடுகள் பதிவுசெய்யப்படுவதால், இவை பெண்கள் மேம்பாட்டின் அடையாளமாகவும் திகழ்வதாக கூறினார்.
அண்மையில் எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிரதமர், ஏழைகள் மற்றும் வறிய நிலையில் இருப்பவர்கள்; விவசாயிகள் மற்றும் பாதுகாப்புப் படை வீரர்களுடன் அவர்களின் துயரத்திலும், கடும் இன்னல்களிலும் கூட்டாளியாக இருப்பதாகவும்; அவர்களின் இன்னல்களை முடிவுக்கு கொண்டுவர உறுதிப்பூர்வமாக விரும்புவதாகவும் தெரிவித்தார்.
ஒரு காலத்தில், நன்கு திட்டமிடப்பட்ட நகர்ப்புற பகுதிகளைக் கொண்ட இடமாக இந்தியா இருந்ததாக பிரதமர் தெரிவித்தார். ஆனால், அரசியல் உறுதிப்பாடு மற்றும் தெளிவான சிந்தனை இல்லாததால், குறிப்பாக சுதந்திரத்துக்குப் பிறகு, நமது நகர்ப்புற மையங்களுக்கு கடும் பாதிப்புகள் ஏற்பட்டதாக பிரதமர் கூறினார்.
இந்தியா இன்று வேகமாக வளர்ந்து வருவதாக பிரதமர் தெரிவித்தார். மேலும், வளர்ச்சிக்கான காரணிகளாக உள்ள நகரங்கள், ஏனோதானோவென்று வளரும் நிலை தொடர்வதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார். புதிய இந்தியாவின் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், நமது நகரங்களை தயார்படுத்துவதற்கு பொலிவுறு நகரங்கள் இயக்கம் உதவும்; மற்றும் 21-ம் நூற்றாண்டுக்கான உலகத்தரம் வாய்ந்த சிறந்த நகர்ப்புற மையங்களை தயார்படுத்தும் என்றும் பிரதமர் கூறினார். வாழ்வதற்கான பகுதிகள் ஆங்கில எழுத்தான 5 ஈ(E)-க்கள் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். அதாவது, எளிதாக வாழ்தல் (Ease of Living); கல்வி (Education), வேலைவாய்ப்பு (Employment), பொருளாதாரம் (Economy) மற்றும் பொழுதுபோக்கு (Entertainment).
பொலிவுறு நகரங்கள் இயக்கம், பொதுமக்களின் பங்களிப்பு, பொதுமக்களின் விருப்பம் மற்றும் பொதுமக்களின் பொறுப்பு அடிப்படையிலானது என்று பிரதமர் தெரிவித்தார். நகராட்சி பத்திரங்கள் மூலம் குறிப்பிட்ட அளவு தொகையை புனே, ஐதராபாத், இந்தூர் நகரங்கள் வசூலித்ததாக அவர் குறிப்பிட்டார்; லக்னோ, காசியாபாத் போன்ற மற்ற நகரங்களும் இதனை விரைவில் பின்பற்ற உள்ளன. பொதுமக்களுக்கான சேவைகள், ஆன்லைன் மூலம் கிடைக்கப் பெற வேண்டும். ஊழலுக்கு ஆதாரமாக திகழும், வரிசையில் நிற்கும் முறை, நீக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். கோடிக்கணக்கான மக்களின் வாழ்க்கை முறையை சிறப்பான, பாதுகாப்பான, நீடித்த மற்றும் வெளிப்படையான முறைகள் மாற்றியமைக்கும் என்று பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறினார்.
***
(Release ID: 1540600)