பிரதமர் அலுவலகம்

மிர்சாப்பூரில் பிரதமர் பன்சாகர் கால்வாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

Posted On: 15 JUL 2018 12:25PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி மிர்சாப்பூரில் இன்று (15.07.2018)  பன்சாகர் கால்வாய் திட்டத்தை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார். இந்தத் திட்டம் இந்த மண்டலத்தின்  பாசன வசதியை பெரிய அளவில் மேம்படுத்தும். உத்தரபிரதேச மிர்சாப்பூர், அலகாபாத் மாவட்டங்களின் விவசாயிகளுக்கு பெரும்  பயனை அமைப்பதாக இத்திட்டம் அமையும்.

   பிரதமர் திரு நரேந்திர மோடி, மிர்சாப்பூர் மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.  உத்தரபிரதேச மாநிலத்திற்கான 100 மக்கள் மருந்து மையங்களை அவர் தொடங்கி வைத்தார். சூனார் பகுதியின் பாலுகட் என்ற இடத்தில் கங்கை ஆற்றின் மேல் அமைக்கப்பட்டுள்ள பாலத்தை பிரதமர் அர்ப்பணித்தார். இந்தப் பாலம்  மிர்சாப்பூருக்கும், வாரணாசிக்கும் இணைப்பு வசதியை தரும்.

   நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், மிர்சாப்பூர் பகுதி மிகப் பெரிய திறன்களை தன்னகத்தே கொண்டது. மிர்சாப்பூரில்  சூரிய சக்தி மின்சார உற்பத்தி நிலையத்தை திறந்து வைப்பதற்காக பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் இங்கு வந்ததை  பிரதமர் நினைவு கூர்ந்தார்.

  கடந்த இரண்டு நாட்களில் தாம் திறந்து வைத்த அல்லது அடிக்கல் நாட்டிய பல்வேறு மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் பணிகள் பற்றி பிரதமர் குறிப்பிட்டார்.

    பன்சாகர் திட்டம்  40 ஆண்டுகளுக்கு முன் உருவானது என்றும் இத்திட்டத்திற்கு 1978-ல் அடிக்கல் நாட்டப்பட்டது என்றாலும் இந்தத் திட்டம் காலதாமதப்படுத்தப்பட்டது என்று பிரதமர் கூறினார்.

   2014-க்கு பிறகு இந்தத் திட்டம் பிரதமரின் விவசாய நீர்ப்பாசனத் திட்டத்தின் ஒரு பகுதியாக இணைக்கப்பட்டு அதனை நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டன என்று பிரதமர் கூறினார்.

   விவசாயிகளின் நலன்களுக்கு என மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் குறி்த்து பேசிய பிரதமர், சமீபத்தில் கரீஃப் பருவ   விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்த்தப்பட்டதையும் சுட்டிக்காட்டினார்.

   ஏழை மக்களுக்கு குறைந்த விலையில் மருத்துவ வசதி வழங்கும், மக்கள் மருந்து மையங்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து அவர் பேசினார்.  தூய்மை இந்தியா இயக்கம், நோய்களைக் கட்டுப்படுத்துவதில் சிறந்த பங்காற்றி வருவதாகவும் பிரதமர் கூறினார். மருத்துவ சிகிச்சை உறுதி அளிப்பு திட்டமான ஆயுஷ்மான் பாரத் விரைவில் செயல்படத் தொடங்கும் என்றார்.  மத்திய அரசின் இதர சமூக நலத்திட்டங்கள் குறித்தும் பிரதமர் பேசினார்.

------


(Release ID: 1538762) Visitor Counter : 142