மத்திய அமைச்சரவை

தில்லி, பிரகதி மைதானில் 3.70 ஏக்கர் நிலத்தில் ஹோட்டல் கட்டுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 13 JUN 2018 6:15PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் தில்லி, பிரகதி மைதானில் உள்ள 3.70 ஏக்கர் நிலப் பரப்பைத் தனியாருக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு ஒதுக்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (India Trade Promotion Organisation) அந்த நிலப்பகுதியில் தனியார் நிறுவனம் ஹோட்டல் கட்டுவதற்கு அனுமதிக்கப்படும். இதற்கு வெளிப்படையான ஏல நடைமுறை கையாளப்படும்.

இது பிரகதி மைதானை நிர்வகித்து வரும் ஒருங்கிணைந்த பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (Integrated Exhibition-cum-Convention Centre - IECC) முதல் கட்ட நடவடிக்கையாகும். இதன்படி ரூ. 2,254 கோடி நிதியைத் திரட்டுவதற்காக மத்திய பொருளாதார விவகார கேபினட் கமிட்டி (CCEA) 2017ம் ஆண்டு ஜனவரியில் ஒப்புதல் அளித்துள்ளது.

ஒருங்கிணைந்த பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (IECC) திட்டத்தின்படி உலகத் தரம் வாய்ந்த பொருட்காட்சி மற்றும் 7000 பேர் அமரக் கூடிய பிரம்மாண்டமான மாநாட்டுக் கூடம் ஒரு லட்சம் சதுர மீட்டரில் அமைக்க வழியேற்படும். இதன் வாகன நிறுத்தமிடத்தில் மட்டும் 4,800 வாகனங்களை நிறுத்தலாம். இதனால் பிரகதி மைதானப் பகுதியில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.

இத்திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதி, ஒருங்கிணைந்த பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (IECC) திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். இது மத்திய மாநில அரசுகள் உச்சி மாநாடுகளை நடத்தவும், கண்காட்சிகள், தொழில்மேம்பாட்டுக்கான நிகழ்ச்சிகளை நடத்த உதவும்.

ஒருங்கிணைந்த பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தின் (IECC) திட்டப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்தப் பணிகள் அனைத்தும் 2019ம் ஆண்டு செப்டம்பரில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு (ITPO) தெரிவித்தது. ஒருங்கிணைந்த பொருட்காட்சி மற்றும் மாநாட்டு மையத் (IECC) திட்டம் இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறைக்குப் பயன்படும். அத்துடன் இந்தியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்கவும் உதவும்.

 

 

 

 

 

*****



(Release ID: 1535378) Visitor Counter : 131