பிரதமர் அலுவலகம்

தேசிய ஊட்டச்சத்து இயக்கத்தை பிரதமர் தொடங்கி வைத்தார். பெண் குழந்தைகளை பாதுகாப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கம் விரிவாக்கம்.

Posted On: 08 MAR 2018 4:06PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் ஜூன்ஜூனுவில் சர்வதேச மகளிர் தினமான இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடி தேசிய ஊட்டச்சத்து இயக்கத்துடன், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்,  பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்க விரிவாக்கத்தையும் தொடங்கி வைத்தார்.

இத் திட்டத்தில் உற்சாகமாக பங்கேற்ற மாவட்டங்களின் மாஜிஸ்திரேட்டுகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.  அத்துடன் இத்திட்டங்களின் பயனாளிகளான அன்னைகள் மற்றும் பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்க பயனாளிகளான பெண் குழந்தைகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.

பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கத்தை சிறப்பாக செயல்படுத்தி வரும் மாவட்டங்களுக்கு பிரதமர் சான்றிதழ்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் திருமதி. வசுந்தரா ராஜே, மிக முக்கியமான இந்த திட்டத்தை தொடங்குவதற்கும், மற்றொரு திட்டத்தின் விரிவாக்கத்திற்கும் ராஜஸ்தான் மாநிலத்தை பிரதமர் தேர்ந்தெடுத்தது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறினார். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமரின் முயற்சிகளுக்கு ராஜஸ்தான் எப்போதும் ஆதரவளிக்கும் என்று அவர் கூறினார்.

கூட்டத்தில் ஏராளமாக திரண்டிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், தொழில்நுட்ப ஆற்றலின் மூலமாக நாடு முழுவதும் ஜூன்ஜூனுவுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெண் குழந்தைகளை பாதுகாப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் இயக்கத்தை விரிவுபடுத்துவதற்காக ஜூன்ஜூனு மாவட்ட நிர்வாகத்தை அவர் பாராட்டினார். பாலின அடிப்படையில் பாகுபாட்டுக்கு இனி இடமில்லை என்று அவர் தெரிவித்தார்.

ஆண் குழந்தைகளை போல பெண் குழந்தைகளும் தரமான கல்வியைப் பெற  வேண்டியதன் அவசியத்தை பிரதமர் வலியுறுத்தினார்.

பெண் குழந்தை ஒரு சுமை அல்ல என்று கூறிய அவர், பெண் குழந்தைகள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதுடன் நாட்டுக்கு பெருமையையும், புகழையும் பெற்றுத் தருவதாக தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு முறையான ஊட்டச்சத்தை வழங்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் வலியுறுத்தினார். இந்திரதனுஷ் இயக்கம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகச் சிறப்பான ஆக்கப்பூர்வ மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அவர் கூறினார்.


(Release ID: 1523380) Visitor Counter : 182