Technology

உயிரிமருத்துவ ஆராய்ச்சியில் புதிய மைல்கல்: இந்தியாவின் அறிவியல் எல்லைகளை வடிவமைக்கும் முயற்சி

Posted On: 09 OCT 2025 3:21PM

உயிரித் தொழில்நுட்பத் துறையின்  தொடர்ச்சியான முயற்சிகளால் இந்தியா உலகின் அதிவேகமாக வளர்ந்து வரும் உயிரிப் பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. தற்சார்பு இந்தியா, ஆரோக்கியமான இந்தியா, புத்தொழில் இந்தியா மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் போன்ற தேசியத் திட்டங்களுடன் இணைந்து உயிரிமருத்துவ ஆராய்ச்சி பெரும் வளர்ச்சியை எட்டியுள்ளது. இந்த உத்வேகத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில், உயிரிமருத்துவ ஆராய்ச்சிப் பணித் திட்டத்தின் மூன்றாம் கட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உயிரிமருத்துவ அறிவியல், மருத்துவம் மற்றும் பொதுச் சுகாதார ஆராய்ச்சியில் உலகத்தரம் வாய்ந்த சூழலமைப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும். இத்திட்டம் 2025-26 முதல் 2030-31 வரை தீவிரமாகச் செயல்படுத்தப்படுவதுடன், இதன் தொடர்ச்சியான சேவைக் காலம் 2037-38 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் உள்ள உயிரித் தொழில்நுட்பத் துறையும், இங்கிலாந்தின் வெல்கம் அறக்கட்டளை அமைப்பும் இணைந்து ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன. இதில் உயிரித் தொழில்நுட்பத் துறை ரூ.1,000 கோடியும், வெல்கம் அறக்கட்டளை ரூ.500 கோடியும் முதலீடு செய்கின்றன. 2008-2009ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் முதல் இரண்டு கட்டங்களில் ரூ.2,388 கோடி முதலீடு செய்யப்பட்டு, 721 ஆராய்ச்சி மானியங்கள் வழங்கப்பட்டுச் சர்வதேச அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள புதிய பகுதிகள் மற்றும் பின்தங்கிய ஆராய்ச்சி சமூகங்களுக்கும் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி, பிராந்திய ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதில் இத்திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

புதிய மூன்றாம் கட்ட திட்டத்தின் கீழ் ஆரம்ப மற்றும் இடைநிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவித்தொகைகள், கூட்டு மானியங்கள் மற்றும் ஆராய்ச்சி நிர்வாகத்தை வலுப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 2,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் முனைவர் பட்டத்திற்குப் பிந்தைய ஆராய்ச்சியாளர்களுக்குப் பயிற்சி அளித்தல், காப்புரிமை பெறக்கூடிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குதல் மற்றும் 25 முதல் 30 சதவீத கூட்டுத் திட்டங்களைத் தொழில்நுட்பத் தயார்நிலை 4-க்கு கொண்டு செல்லுதல் ஆகிய இலக்குகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மேலும், பயோகேர் மற்றும் ஜானகி அம்மாள் விருது போன்ற முன்னெடுப்புகளுடன் இணைந்து, ஆராய்ச்சித் துறையில் பெண் விஞ்ஞானிகளுக்கான ஆதரவு 10 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கப்பட உள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் உயிரிமருத்துவ ஆராய்ச்சி முயற்சிகள் 70-க்கும் மேற்பட்ட கோவிட்-19 திட்டங்கள், உலகின் முதல் வாய்ப் புற்றுநோய் மரபணு மாறுபாடு தரவுத்தளமான டிபி ஜென்வாக் மற்றும் தேசிய நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் இயக்கம் போன்ற முக்கிய மைல்கற்களை எட்டியுள்ளன. ஜீனோம் இந்தியா, உம்மித் போன்ற திட்டங்கள் மூலம் மனித மரபியல், தொற்றுநோய் உயிரியல், தாய்-சேய் நலம், உள்நாட்டுத் தடுப்பூசிகள் மற்றும் குறைந்த விலையிலான நோயறிதல் கருவிகள் ஆகியவற்றில் இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது. பயோ இ3 முன்முயற்சியுடன் இணைந்து செயல்படும் இம்முயற்சிகள் அனைத்தும் 2047 வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்கி, இந்தியாவை உயிரிமருத்துவ புத்தாக்கத்துறையில் உலகளாவிய மையமாக நிலைநிறுத்துகின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155402&ModuleId=3&reg=3&lang=1

***

AD/VK/SH

(Explainer ID: 160788) आगंतुक पटल : 3
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: हिन्दी , English , Urdu , Nepali , Marathi , Assamese , Bengali , Punjabi , Odia , Kannada , Malayalam