Social Welfare

இந்தியாவின் செம்மொழிகள்: மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல்

Posted On: 27 OCT 2025 10:02AM

நாட்டின் வளமான, பன்முகத்தன்மை கொண்ட மொழிசார் பாரம்பரியத்தைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு கொள்கைகள் மற்றும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆயிரக்கணக்கான ஆண்டு கால இலக்கியம், தத்துவம் மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்ட தொன்மையான மொழிகளுக்கு 'செம்மொழி' அந்தஸ்து வழங்கி கவுரவிக்கப்படுகிறது. 2004 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஒடியா ஆகிய ஆறு மொழிகள் செம்மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டன. தொடர்ந்து, 2024 அக்டோபர் 3 அன்று மராத்தி, பாலி, பிராகிருதம், அஸ்ஸாமி மற்றும் வங்காளம் ஆகிய ஐந்து மொழிகளுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததன் மூலம் இந்தியாவின் மொத்த செம்மொழிகளின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

1,500 முதல் 2,000 ஆண்டுகள் வரையிலான தொன்மையான வரலாறு, தலைமுறைகளாகப் போற்றப்படும் இலக்கியக் கருவூலங்கள், உரைநடை மற்றும் கல்வெட்டுச் சான்றுகள் ஆகியவற்றின் அடிப்படையில் மத்திய கலாச்சார அமைச்சகம் செம்மொழித் தகுதியை நிர்ணயிக்கிறது.

இந்திய மொழிகளின் மேம்பாட்டிற்காகச் செயல்படும் இந்திய மொழிகளின் மத்திய நிறுவனத்தின் கீழ், செம்மொழிகளின் ஆய்வுக்கெனத் தனிச் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, செம்மொழித் தமிழைப் பாதுகாக்கவும் மேம்படுத்தவும் சென்னையில் அமைக்கப்பட்டுள்ள 'செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்' மிக விரிவான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தொடக்கக் காலம் முதல் கி.பி. 600 வரையிலான தமிழின் செவ்வியல் காலகட்டம் குறித்து இந்நிறுவனம் ஆழமான ஆய்வுகளை நடத்துகிறது. கிடைக்கப்பெற்ற மிகத் தொன்மையான தமிழ் இலக்கண நூலான தொல்காப்பியம், நற்றிணை, புறநானூறு, கார் நாற்பது உள்ளிட்ட 41 பண்டைய சங்க இலக்கிய நூல்களைப் பாதுகாத்து ஆய்வு செய்வதில் இம்மையம் முக்கியப் பங்காற்றுகிறது.

மேலும், தமிழின் தொன்மையை ஆராயப் பல்துறை அறிஞர்களை ஈடுபடுத்துதல், திராவிட ஒப்பீட்டு இலக்கண ஆய்வுகள், தமிழ் வட்டார வழக்குகள் குறித்த ஆய்வுகள், உலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை உருவாக்குதல் மற்றும் குறுகிய கால ஆய்வுத் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்குதல் போன்ற பணிகளையும் இந்நிறுவனம் முன்னெடுத்து வருகிறது. பண்டைய தமிழ் நூல்களைப் பல இந்திய மற்றும் வெளிநாட்டு மொழிகளில் மொழிபெயர்க்கும் திட்டத்தின் கீழ், உலகப் பொதுமறையான திருக்குறள் 28 இந்திய மொழிகளிலும், 30-க்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும், பார்வையற்றோருக்கான பிரெய்லி வடிவிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. செவ்வியல் தமிழ் நூல்களை பிரெய்லி வடிவில் வெளியிடுவதோடு, செம்மொழித் தமிழ்க் கலைச்சொல் அகராதியையும் இந்நிறுவனம் தொகுத்து வருகிறது.

இதேபோன்று, நெல்லூரில் செம்மொழித் தெலுங்கு ஆய்வு மையமும், மைசூருவில் கன்னட மையமும், புவனேஸ்வரில் ஒடியா மையமும், கேரளாவின் திரூரில் மலையாள மையமும் நிறுவப்பட்டு  சுவடிகளை டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் நூல் வெளியீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. சமஸ்கிருதத்திற்காக மூன்று மத்தியப் பல்கலைக்கழகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 'பாரம்பரியமும் வளர்ச்சியும்' என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, நமது தொன்மையான மொழிகளையும் அறிவுச் செல்வங்களையும் எதிர்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாப்பதன் மூலம் கலாச்சாரத் தன்னிறைவையும் தேசிய ஒருமைப்பாட்டையும் மத்திய அரசு தொடர்ந்து வலுப்படுத்தி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=155722&ModuleId=3&reg=3&lang=1

***

TV/VK/SH

(Explainer ID: 160787) आगंतुक पटल : 18
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Hindi_Ddn , Nepali , Marathi , Bengali , Assamese , Gujarati , Kannada