Economy
அரசின் முன்னோடித் திட்டங்களால் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை 2.62 லட்சமாக உயர்வு
Posted On:
09 NOV 2026 6:07PM
தேசிய தொழில்முனைவோர் தினம் நவம்பர் 9 அன்று கடைப்பிடிக்கப்படுகிறது. 2047-க்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கிய பயணத்தில் தொழில்முனைவோரின் முக்கியத்துவத்தை இந்த தினம் எடுத்துரைக்கிறது. 2014 நவம்பர் 9 அன்று மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் நிறுவப்பட்டதன் நினைவாக இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் அங்கீகரிக்கப்பட்ட 2.62 லட்சத்திற்கும் அதிகமான புத்தொழில் நிறுவனங்களுடன், உலகின் மூன்றாவது பெரிய புத்தொழில் சூழலமைப்பாக இந்தியா உருவெடுத்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் ஏறக்குறைய 65 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்களாக உள்ள நிலையில், இளைஞர்கள் வேலை தேடுபவர்களாக இல்லாமல் வேலை வழங்குபவர்களாக மாறி வருகின்றனர். 2014-ம் ஆண்டில் 500-க்கும் குறைவாக இருந்த அங்கீகரிக்கப்பட்ட புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை, 2026 நவம்பர் நிலவரப்படி 2.62 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. 2025-26 நிதியாண்டில் மட்டும் 55,200-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் அங்கீகரிக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் 2026 அக்டோபர் வரை 25 லட்சத்திற்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. மேலும், அங்கீகரிக்கப்பட்டுள்ள புத்தொழில் நிறுவனங்களில் சுமார் 48 சதவீதம், அதாவது 1.07 லட்சத்திற்கும் அதிகமான நிறுவனங்களில் குறைந்தபட்சம் ஒரு பெண் இயக்குநர் அல்லது பங்குதாரர் உள்ளார். மகாராஷ்டிரா, கர்நாடகா, உத்தரப் பிரதேசம், தில்லி, குஜராத் ஆகிய மாநிலங்கள் புத்தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையிலும், நேரடி வேலைவாய்ப்பை உருவாக்குவதிலும் முன்னணியில் உள்ளன.

தொழில்முனைவோர் சூழலமைப்பை வலுப்படுத்த மத்திய அரசு பல்வேறு முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. 2016-ல் தொடங்கப்பட்ட புத்தொழில் (ஸ்டார்ட்அப்) இந்தியா திட்டத்தின் கீழ், ரூ.10,000 கோடி மூலதனத்துடன் புத்தொழில் நிறுவனங்களுக்கான நிதியம் செயல்பாட்டில் உள்ளது. தொழில்நுட்பம், புதுமைகளுடன் கூடிய உற்பத்தித் துறைகளை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீட்டில் புத்தொழில் இந்தியா நிதியம் 2.0 அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தொழில் நிறுவனங்களுக்கான கடன் உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பிணையில்லா கடன் உச்சவரம்பு ரூ.10 கோடியிலிருந்து ரூ.20 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. தொடக்க நிலையில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் சீட் நிதித் திட்டத்தின் கீழ் 4,194 நிறுவனங்களுக்கு ரூ.775.67 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வழிகாட்டுதலுக்காக மார்க் தளம், முதலீட்டாளர்களை இணைக்கும் தளம் ஆகியவையும் செயல்படுகின்றன.
நித்தி ஆயோக்கின் அடல் புதுமை இயக்கம் 2.0 திட்டம் 2028 மார்ச் வரை ரூ.2,750 கோடி நிதி ஒதுக்கீட்டில் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பிரதமரின் முத்ரா திட்டத்தின் கீழ் சிசு, கிஷோர், தருண், தருண் பிளஸ் ஆகிய நான்கு பிரிவுகளில் ரூ.20 லட்சம் வரை பிணையில்லாக் கடன்கள் வழங்கப்படுகின்றன. 2026-27 நிதியாண்டில் அக்டோபர் 30 வரை இத்திட்டத்தின் கீழ், ரூ.3.3 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான 2.44 கோடிக்கும் மேற்பட்ட கடன்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. மத்திய மின்னணு, தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புத்தொழில் மையம், டைட் 2.0, ஜெனிசிஸ், அறிவியல் தொழில்நுட்பத் துறையின் நிதி திட்டம், ஊரகத் தொழில்களுக்கான அஸ்பயர் திட்டம், பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டம், சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதி திட்டம், இளம் பெண்களுக்கான ஸ்வாலம்பினி திட்டம் ஆகியவை நாடு முழுவதும் தொழில்முனைவை ஊக்குவிக்கின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160746&ModuleId=3®=3&lang=1
***
SS/PD/RJ
(Explainer ID: 160786)
आगंतुक पटल : 24
Provide suggestions / comments