Farmer's Welfare
வேளாண் கடன் அட்டை விவசாயிகளின் மூலதனச் செலவுகளுக்கான நடவடிக்கைகளை வலுப்படுத்துகிறது
Posted On:
11 MAR 2026 11:35AM
சிறு, குறு மற்றும் குத்தகை விவசாயிகள், சுயஉதவிக் குழுக்கள், உள்ளிட்டோருக்குத் தகுந்த நேரத்தில், குறைந்த விலையில், பிணை (அடமானம்) இல்லாக் கடன்களை வழங்க வகை செய்கிறது.
மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டத்தின் கீழ், கடன் உச்ச வரம்பு ரூ. 5 லட்சமாகவும், கடன் பெறுபவருக்கான பிணை இல்லாக் கடன் உச்ச வரம்பு ரூ. 2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 7.72 கோடிக்கும் அதிகமான வேளாண் கடன் அட்டைகள் பயன்பாட்டில் உள்ளன. நிலுவையில் உள்ள கடன்களின் மதிப்பு ரூ. 10.2 லட்சம் கோடியாகும்.
வணிக வங்கிகள், பிராந்திய ஊரக வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் என மொத்தம் 457 வங்கிகள் இத்திட்டத்தில் இணைந்துள்ளன. இத்திட்டத்தின் கீழ் 1,998.7 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விவசாயம், அது சார்ந்த செயல்பாடுகள் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான முக்கிய அம்சமாகத் திகழ்ந்து வருகின்றன. இவை தேசிய வருமானம், வேலைவாய்ப்பு உருவாக்கம், கிராமப்புற வாழ்வாதாரங்களுக்குப் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன. மக்கள் தொகையில், 46.1 சதவீத விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்திற்காக விவசாயம், அது சார்ந்த செயல்பாடுகளைச் சார்ந்திருப்பதால், விவசாயிகளுக்கு நிதிப் பாதுகாப்பை உறுதி செய்வதும், முறையான நிறுவனங்களிடமிருந்து கடன் பெறுவதற்கான வாய்ப்பை மேம்படுத்துவதும் மத்திய அரசின் முன்னுரிமைகளாக உள்ளன. இச்சூழலில், வேளாண் நடவடிக்கைகளுக்கான நிதியுதவியை வலுப்படுத்தவும், குறிப்பாக, வேளாண் கடன் அட்டைத் திட்டத்தை விரிவுபடுத்தி நவீனமயமாக்கவும், சில குறிப்பிட்ட நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மாற்றியமைக்கப்பட்டுள்ள இத்திட்டம், குறுகிய காலப் பயிர் சாகுபடி, அறுவடைக்குப் பிந்தைய செயல்பாடுகள், சந்தைப்படுத்துதலுக்கான செலவுகள், குடும்ப நுகர்வுத் தேவைகள், பண்ணை பராமரிப்புக்கான மூலதனம், விவசாயம் சார்ந்த அல்லது விவசாயம் சாராத செயல்பாடுகளுக்கான முதலீட்டுக் கடன் எனப் பல்வேறு விவசாயத் தேவைகளுக்கு சரியான நேரத்தில் கடன் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
1998-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வேளாண் கடன் அட்டைத் திட்டம், பயிர் உற்பத்திக்கான குறுகிய கால நிறுவனக் கடன்களை விவசாயிகள் எளிதாகவும் விரைவாகவும் பெறுவதற்காக கொண்டுவரப்பட்டது. இத்திட்டம் விவசாயம் சார்ந்த செயல்பாடுகளுக்குத் தேவையான நடைமுறை மூலதனம், முதலீட்டுக் கடன்களை வழங்குவதுடன், அறுவடைக்குப் பிந்தைய, சந்தைப்படுத்தல் செலவுகளையும் உள்ளடக்கியதாகும். இதன் மூலம் பண்ணை வருவாயை அதிகரிக்க விரிவான நிதி ஆதரவை விவசாயிகளுக்கு அளிக்கிறது. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறுவதை, மேலும் குறைவான வட்டியில் கிடைக்கச் செய்வதற்காக, 2006-07-ம் ஆண்டில் மத்திய அரசின் திட்டமாக 'மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டம், வேளாண் கடன் அட்டைகள் மூலம் விவசாயிகள் குறைந்த வட்டி விகிதங்களில் கடன் பெறுவதை உறுதி செய்கிறது. இத்திட்டம் இயற்கை பேரிடர்களிலிருந்து விவசாயிகள் மீண்டு வர உதவுவதுடன், சரியான நேரத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவதை ஊக்குவித்து, விவசாயிகளின் நிதிச் சுமையைக் குறைக்கிறது. இத்திட்டம் விவசாயம் சார்ந்த அல்லது அது சாராத நடவடிக்கைகளையும் உள்ளடக்கியதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டம் ஒருங்கிணைந்த, 'ஒற்றைச் சாளர' முறையில் கடனுதவி வழங்க வகை செய்கிறது.
வேளாண் கடன் அட்டைத் திட்டம், முறையான கடன் வசதிகளை உள்ளடக்கிய, சம அளவில் கடனுதவி கிடைப்பதை உறுதி செய்வதற்காகப் பல்வேறு நிலையிலான விவசாயிகளையும் உள்ளடக்கிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்களாக இருந்து பயிரிடும் விவசாயிகள், கூட்டுக்கடன் பெறுநர்கள், குத்தகை விவசாயிகள், வாய்மொழி ஒப்பந்த அடிப்படையில் பயிரிடுவோர், விளைச்சல் பகிர்வு அடிப்படையில் பயிரிடுவோர் போன்ற அனைத்து விதமான விவசாயிகளுக்கும் இது பொருந்தும். இதன் மூலம் பல்வேறு விவசாயச் சமூகங்களிடையே விரிவான நிதிச் சேர்க்கை உறுதி செய்யப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157771&ModuleId=3®=3&lang=1
***
PD/SV/SH
(Explainer ID: 160778)
आगंतुक पटल : 12
Provide suggestions / comments