Economy
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் சேவை விரிவாக்கம்: நாட்டின் சமூகப் பாதுகாப்பு வரம்பு 2015-ல் 19%-லிருந்து 2026-ல் 68.4% ஆக உயர்வு
Posted On:
31 OCT 2026 9:39AM

இந்தியாவின் சமூகப் பாதுகாப்புக் கட்டமைப்பு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் விரிவான செயல்பாடுகள், டிஜிட்டல் சீர்திருத்தங்கள், பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக விரிவாக்கம் அடைந்து வருகிறது. நாட்டின் சமூகப் பாதுகாப்பு வரம்பு 2015-ல் 19%-லிருந்து 2026-ல் 68.4% ஆக உயர்ந்துள்ளது. இதன் வாயிலாக 100 கோடிக்கும் அதிகமான மக்கள் சமூகப் பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். பணியாளர்களின் சமூகப் பாதுகாப்பை உறுதி செய்வதில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மிக முக்கியப் பங்காற்றி வருகிறது.

வருங்கால வைப்பு நிதி கட்டாய பங்களிப்பிற்கான ஊதிய உச்சவரம்பு 2014-ல் நிர்ணயிக்கப்பட்ட ரூ.15,000-லிருந்து 2026 செப்டம்பரில் ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக 51 லட்சம் பணியாளர்கள் சமூகப் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டுவரப்படுவார்கள். வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களின் எண்ணிக்கை 2014-15-ல் 3.49 கோடியாக இருந்த நிலையில், 2026 செப்டம்பர் நிலவரப்படி 7.98 கோடியாக உயர்ந்துள்ளது. இதேபோல ஓய்வூதியம் பெறுவோரின் எண்ணிக்கை 51.04 லட்சத்திலிருந்து 82 லட்சமாக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 6.42 கோடி கோரிக்கைகளுக்கு இந்நிறுவனம் தீர்வு கண்டுள்ளது.
பணியாளர்கள் தங்களின் தேவைகளுக்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்து முன்பணம் பெறும் விதிகள் எளிமையாக்கப்பட்டு, கல்விச் செலவுகளுக்காக 10 முறையும், திருமணச் செலவுகளுக்காக 5 முறையும் 75 சதவீதம் வரை முன்பணம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தானியங்கி நடைமுறை வாயிலாக ரூ.5 லட்சம் வரையிலான முன்பணக் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு காணப்படுகிறது. காசோலை நகல் மற்றும் வங்கிக் கணக்குப் புத்தகத்தை பதிவேற்றம் செய்யும் நடைமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. இ-சேவை வாயிலாக முதல் முறையிலேயே வழக்குகளுக்குத் தீர்வு காணும் விஸ்வாஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், தனியார் அறக்கட்டளைகளை முறைப்படுத்துவதற்கான பொது மன்னிப்புத் திட்டமும் 2026 டிசம்பர் 28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் உள்ள எந்தவொரு வங்கிக் கிளையிலும் ஓய்வூதியத்தைப் பெறும் வகையில் ஒருங்கிணைந்த ஓய்வூதிய வழங்கல் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்திய அஞ்சல் பேமண்ட் வங்கி (IPPB) மூலம் மூத்த ஓய்வூதியதாரர்களின் வீடுகளுக்கே சென்று டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் வழங்கும் சேவை இலவசமாக கிடைக்கிறது. நவீன வங்கிச் சேவை தொழில்நுட்பத்துடன் கூடிய இபிஎஃப்ஓ 3.0 கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டு, கோரிக்கைகளுக்கான தீர்வு காணும் காலம் 20 நாட்களிலிருந்து 3 நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

முறைப்படுத்தப்பட்ட துறை மட்டுமின்றி, அமைப்புசாரா தொழிலாளர்களுக்காகவும் பல்வேறு சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான தேசிய தளமான இ-ஷ்ரம் இணையதளத்தில் 31.89 கோடி தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். 18 முதல் 40 வயதுக்குட்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு 60 வயதிற்குப் பிறகு மாதம் ரூ.3,000 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்கும் பிரதமரின் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திருத்தியமைக்கப்பட்ட பிரதமரின் சமூக நல உதவித் திட்டத்தின் கீழ் முதியோர், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது. தொழிலாளர் சமூகப் பாதுகாப்புச் சட்டம் 2020-ன் கீழ், முறைசாரா துறையின் பணியாளர்கள், இணைய வழி சேவைப் பணியாளர்களுக்கும் (கிக்), சமூகப் பாதுகாப்பு உரிமைகள் விரிவுபடுத்தப்பட்டு, நாட்டின் அனைத்துத் தரப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160661&ModuleId=3®=3&lang=1
***
AD/PD/SH
(Explainer ID: 160774)
आगंतुक पटल : 29
Provide suggestions / comments