Social Welfare
அடல் மூத்த குடிமக்களுக்கான மேம்பாட்டுத் திட்டம்: முதியோர் நலன் காப்பதற்கான ஒருங்கிணைந்த நடவடிக்கைகள்
Posted On:
27 OCT 2026 11:07AM
இந்தியாவில் மூத்த குடிமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அவர்களின் பாதுகாப்பான, கண்ணியமான, ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வது அரசின் மிக முக்கியமான கொள்கையாக உள்ளது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாட்டில் 60 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்களின் எண்ணிக்கை 10.38 கோடியாக இருந்தது. இது 2036-க்குள் 23 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. வேகமான நகரமயமாக்கல், புலம்பெயர்வு, தனிக் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் மூத்த குடிமக்களுக்கான குடும்ப ஆதரவு குறைந்து வரும் சூழலில், அவர்களுக்கு முறையான ஆதரவை வழங்கும் நோக்கில் அடல் மூத்த குடிமக்களுக்கான மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் இத்திட்டம், மூத்த குடிமக்களுக்கு தங்குமிடம், உணவு, மருத்துவம், மறுவாழ்வு உதவிகளை ஒரே குடையின் கீழ் வழங்குகிறது. முதியவர்கள் தங்களது சொந்த வீடுகள், சமூகத்திலேயே பாதுகாப்பாக வாழ்வதை ஊக்குவிப்பதோடு, சுயமரியாதையுடன் கூடிய முதியோர் பராமரிப்பு முறையையும் இத்திட்டம் உறுதி செய்கிறது. 2026-27 நிதியாண்டில், 2026 செப்டம்பர் 30 வரையிலான காலாண்டில் மட்டும் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் 755 திட்டங்களுக்கு ரூ.77.98 கோடி நிதி மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. தன்னாட்சி அமைப்புகள், தன்னார்வ நிறுவனங்கள் மூலம் நடத்தப்படும் 764 முதியோர் இல்லங்கள், 13 பராமரிப்பு இல்லங்கள், 17 நடமாடும் மருத்துவப் பிரிவுகள் ஆகியவை இதன் மூலம் நிதி ஆதரவு பெற்று வருகின்றன.

இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, வயது முதிர்வால் ஏற்படும் குறைபாடுகளைக் கொண்ட எளிய மூத்த குடிமக்களுக்கு நவீன உதவி உபகரணங்களை வழங்கும் தேசிய மூத்த குடிமக்கள் பராமரிப்பு திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 10.45 லட்சத்திற்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இதன் மூலம் பயன்பெற்றுள்ளனர். மேலும், முதியவர்களின் குறைகளைத் தீர்க்கவும், அவர்களுக்கு வழிகாட்டவும் 14567 என்ற தேசிய கட்டணமில்லா உதவி எண் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜீவன் செயலி, முதியோருக்கான அவசரகால உதவிகளையும், அரசு நலத்திட்ட விவரங்களையும் விரல் நுனியில் வழங்குகிறது. சதாயு தகவல் தளம் மூலம் பயிற்சி பெற்ற முதியோர் பராமரிப்பாளர்களின் விவரங்களை எளிதில் அறிந்துகொள்ள முடிகிறது.
முதியோர் பராமரிப்புத் துறையில் புதுமைத் தீர்வுகளை உருவாக்கும் புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க சேஜ் திட்டம் மூலம் ரூ.1 கோடி வரை மூலதன நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும், அனுபவம் வாய்ந்த முதியோர்களின் திறன்களைப் பயன்படுத்தி அவர்களுக்குப் பணி வாய்ப்புகளை உருவாக்க ஸ்கோப் தளமும் செயல்படுகிறது. முதியோர் நலனில் நிறுவனப் பராமரிப்பு, நவீனத் தொழில்நுட்பம், சமூக ஒருங்கிணைப்பு ஆகியவற்றை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் அடல் மூத்த குடிமக்களுக்கான மேம்பாட்டுத் திட்டம் முக்கியப் பங்காற்றி வருகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160574&ModuleId=3®=3&lang=1
***
SS/PD/RJ
(Explainer ID: 160713)
आगंतुक पटल : 7
Provide suggestions / comments