Technology

இந்தியாவில் அடுக்குக் கூட்டு உற்பத்தித் தொழில்நுட்பம்: டிஜிட்டல் உற்பத்தித் தொழில்நுட்பம் மூலம் இந்தியாவின் எதிர்காலத்தைக் கட்டமைத்தல்

1.54 லட்சம் பேருக்கு பயிற்சி, 56 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு

Posted On: 07 OCT 2026 12:14PM

அடுக்குக் கூட்டு உற்பத்தித் (Additive Manufacturing) தொழில்நுட்பம் மூலம் டிஜிட்டல் உற்பத்தித் துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. டிஜிட்டல் கோப்பின் அடிப்படையில் பொருட்களை முப்பரிமாண முறையில் அச்சிடும் இந்தத் தொழில்நுட்பத்திற்கான தேசிய உத்திசார் செயல்முறை 2022-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் கீழ் இதுவரை 1.54 லட்சத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர்; 56 புத்தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அடுக்குக் கூட்டு உற்பத்திக்கான தேசிய உத்திசார் செயல்முறை 2.0 அடுத்த கட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது. தற்சார்பு இந்தியா, வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளுக்கு அடுக்குக் கூட்டு உற்பத்தி முக்கிய அடித்தளமாக உருவெடுத்து வருகிறது.

அடுக்குக் கூட்டு உற்பத்தி என்பது டிஜிட்டல் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டு பொருளை அடுக்கடுக்காக உருவாக்கும் நவீன உற்பத்தித் தொழில்நுட்பமாகும். கணினி வடிவமைப்பு, செயற்கை நுண்ணறிவு, இயற்பியல் ஆகிய துறைகளை ஒருங்கிணைத்து இது செயல்படுகிறது. உலகளாவிய அடுக்குக் கூட்டு உற்பத்தி இயந்திரங்களின் சந்தை 2035-ம் ஆண்டில் 149 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பாலிமர்கள், உலோகங்கள், கலவைப் பொருட்கள், மண்பாண்டங்கள், செமிகண்டக்டர் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது.

விண்வெளி, பாதுகாப்பு, மருத்துவம், மின்னணு சாதனங்கள், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. 2024-ம் ஆண்டு ஐஐடி மெட்ராஸ் சார்ந்த அக்னிகுல் காஸ்மோஸ் நிறுவனம் அடுக்குக் கூட்டு உற்பத்தி முறையில் ஒரே துண்டாக தயாரிக்கப்பட்ட இயந்திரத்தைக் கொண்ட ராக்கெட்டை விண்ணில் செலுத்தியது. இந்திய ராணுவமும் அடுக்குக் கூட்டு உற்பத்தி மூலம் கட்டப்பட்ட இரண்டு மாடிகளைக் கொண்ட குடியிருப்புகளை உருவாக்கியுள்ளது. மருத்துவத் துறையில் நோயாளிகளின் உடற்கூறு தேவைகளுக்கு ஏற்ப எலும்பு மாற்றுப் பொருட்களை உருவாக்கவும் இத்தொழில்நுட்பம் பயன்படுகிறது.

மின்னணுத் துறையில் மின்கலங்கள், ஆண்டெனாக்கள், மின்தேக்கிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உருவாக்கும் திறனை இந்தியா கொண்டுள்ளது. கட்டுமானத் துறையில் குறைந்த கார்பன் வெளியேற்றம் கொண்ட பொருட்களைப் பயன்படுத்தி விரைவாக வீடுகள் கட்டுவதற்கான வாய்ப்புகளும் ஆராயப்பட்டு வருகின்றன.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் அடுக்குக் கூட்டு உற்பத்திக்கான தேசிய உத்திசார் செயல்முறையை வெளியிட்டது. உலகளாவிய சந்தையில் 5 சதவீத பங்கைப் பெறுதல், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைச் சேர்த்தல், 50 இந்தியத் தொழில்நுட்பங்களை உருவாக்குதல், 100 புத்தொழில் நிறுவனங்களை உருவாக்குதல், 500 புதிய பொருட்களை உருவாக்குதல், 1 லட்சம் திறன்மிக்க பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல் ஆகியவை இதன் முக்கிய இலக்குகளாகும். இதற்காக 7 சிறப்பு மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.

அடுக்குக் கூட்டு உற்பத்திக்கான தேசிய உத்திசார் செயல்முறை 2.0 மூலம் அறிவுசார் சொத்துரிமை உருவாக்கம், டிஜிட்டல் ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப வணிகமயமாக்கல், இயந்திரங்கள் மற்றும் மூலப்பொருட்களின் செலவைக் குறைத்தல், புத்தொழில் நிறுவனங்களுக்கான ஆதரவு ஆகியவை மேலும் வலுப்படுத்தப்பட உள்ளன. அடுக்குக் கூட்டு உற்பத்திக்கான தேசிய கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக தேசிய அடுக்குக் கூட்டு உற்பத்தி கருத்தரங்கும் நடத்தப்பட்டு வருகிறது.

பயிற்சி, புதிய தொழில்நுட்பம் உருவாக்கம், தொழில் முனைவோர் வளர்ச்சி ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் அடுக்குக் கூட்டு உற்பத்தித் துறை தொடர்ந்து வலுப்பெற்று வருகிறது. இறக்குமதி சார்பைக் குறைத்து உள்நாட்டு உற்பத்தித் திறனை மேம்படுத்தும் இத்தொழில்நுட்பம், தற்சார்பு இந்தியா இலக்குக்கு வலுசேர்ப்பதுடன், வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்திலும் முக்கிய பங்களிப்பை வழங்கும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160346&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PD/SU

(Explainer ID: 160471) आगंतुक पटल : 58
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Telugu , Kannada , Malayalam