Economy

ஜிஎஸ்டி: ஒரே நாடு, ஒரே வரி

வரி செலுத்துவதை எளிமையாக்கும் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 1.70 கோடியாக அதிகரிப்பு

Posted On: 09 OCT 2026 10:02PM

2017 ஜூலை 1 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி), மத்திய, மாநில அரசுகள் விதித்த பல்வேறு வரிகளை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்தது. இந்தியாவின் வரிச் சீர்திருத்தப் பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாக அமைந்தது. ‘ஒரே நாடு, ஒரே வரி’ என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தியதுடன், ஒருங்கிணைந்த வரி அமைப்பை நோக்கி இந்தியா முன்னேறவும் வழிவகுத்தது. கடந்த 9 ஆண்டுகளில் வரி செலுத்தும் நடைமுறைகளை எளிதாக்குதல், வரி விகிதங்களைச் சீரமைத்தல் ஆகியவற்றின் மூலம், வெளிப்படைத்தன்மை, பொறுப்புணர்வு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஜிஎஸ்டி மேம்படுத்தியுள்ளது.

இந்த முன்னேற்றத்தின் தொடர்ச்சியாக, 56-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளைக் கொண்ட வரி விகித கட்டமைப்பை எளிமைப்படுத்த அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இதன்படி, 5%, 18% என இரண்டு முக்கிய வரி விகிதங்களும், குறிப்பிட்ட சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு 40% என்ற சிறப்பு விகிதமும் கொண்ட வரிக் கட்டமைப்பு பரிந்துரைக்கப்பட்டது. 2026 அக்டோபரில் நடைபெற்ற 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் ஜிஎஸ்டி நடைமுறையில் மேலும் சில சீர்திருத்தங்கள், சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரி விளக்கங்கள், வர்த்தகத்தை எளிதாக்குதல், வரி இணக்க நடைமுறைகளைச் சீரமைத்தல் ஆகியவை தொடர்பாகப் பரிந்துரைகள் செய்யப்பட்டன.

ஜிஎஸ்டி வரி செலுத்துவோரின் எண்ணிக்கை 2017-ல் சுமார் 60 லட்சமாக இருந்த நிலையில், 2026 செப்டம்பரில் 1.70 கோடியாக அதிகரித்துள்ளது. 2026 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் மொத்த ஜிஎஸ்டி வருவாய் சுமார் ரூ.12.46 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 11.6% வளர்ச்சியாகும்.

ஜிஎஸ்டி பதிவு நடைமுறையை எளிமைப்படுத்துதல், விரைவுபடுத்துதல்

வரி செலுத்துவோர் எளிதில் புரிந்துகொண்டு பின்பற்றக்கூடிய பதிவுமுறையை உருவாக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. பதிவு விண்ணப்ப நடைமுறைகளுக்கான விரிவான வழிகாட்டுதல்கள், அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளுக்கான விளக்கங்கள் வெளியிடப்படும். விண்ணப்பப் படிவங்கள் எளிமைப்படுத்தப்பட்டு, வரி செலுத்துவோர் மற்றும் அதிகாரிகள் என இரு தரப்பினருக்கும் தெளிவான நடைமுறைகள் உருவாக்கப்படும். ஜிஎஸ்டி இணையதளத்தில் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய வசதிகள், தேர்வுப் பட்டியல்கள், உதவிக் குறிப்புகள் இடம்பெறும்.

பதிவில் உள்ள விவரங்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான விண்ணப்பங்களை, இணையவழியில் தானாக ஏற்றுக்கொள்ளும் நடைமுறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தானியங்கி முறையில் பதிவு செய்தவர்களுக்கு முக்கிய வணிக இட மாற்றம் உட்பட அனைத்து விவரத் திருத்தங்களும் தானாக ஏற்கப்படும். பதிவு ரத்து நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்படுகின்றன. சிறு மின்னணு வர்த்தக விற்பனையாளர்கள் பிற மாநிலங்களில் தொழில் தொடங்குவதற்கும் எளிய பதிவு முறை உதவும்.

வரி அறிக்கை தாக்கல், பணத்தைத் திரும்பப் பெறும் நடைமுறைகளில் சீர்திருத்தம்

வரி அறிக்கைகளில் உள்ள முரண்பாடுகளைக் களைந்து, உள்ளீட்டு வரிப் பயன்பாட்டுக் கடன் விவரங்களைச் சரியாகப் பதிவு செய்வதற்காக, ஜிஎஸ்டி கவுன்சில் பல மாற்றங்களைப் பரிந்துரைத்துள்ளது. வரிப் பொறுப்பு, உள்ளீட்டு வரிப் பயன்பாட்டுக் கடன் விவரங்களை ஒத்திசைவு செய்வதற்கான வசதிகள் மேம்படுத்தப்படும். வரி திரும்பப்பெறுவதற்கான விண்ணப்பங்களுக்கான அடுத்தகட்ட நடைமுறைகளை விரைந்து முடிக்கவும், இணைய வழியில் ஒப்புதல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். தகுதியான சில விண்ணப்பங்களில், இடர் மதிப்பீட்டின் அடிப்படையில், கோரப்பட்ட தொகையில் 90% வரை திரும்ப வழங்கும் நடைமுறை பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வரி தொடர்பான பிரச்சனைகளைக் குறைக்கவும், வழக்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் கவுன்சில் பரிந்துரைத்துள்ளது. ரூ.10,000-க்கும் குறைவான வரித் தொகை தொடர்பாக விளக்கம் கோரும் அறிவிப்புகளை வெளியிட வேண்டாம் எனவும், குறிப்பிட்ட காலத்திற்குள் வரி, வட்டியைச் செலுத்துவோருக்கு அபராதத்தைக் குறைக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறு வரி செலுத்துவோருக்கான தாமதக் கட்டணச் சலுகைகள், உள்ளீட்டு வரிப் பயன்பாட்டுக் கடன் தொடர்பான விதிகளில் தளர்வுகள், ஏற்றுமதியாளர்களுக்கான வரிச் சலுகைகளை எளிதாக்குதல் ஆகியவையும் இதில் அடங்கும்.

இந்தப் பரிந்துரைகள் வரிப் பதிவுகள், வரி அறிக்கைகள், பணத்தைத் திரும்பப் பெறுதல், தகராறு தீர்வு ஆகியவற்றில் உள்ள நடைமுறைகளை எளிமைப்படுத்துவதுடன், சிறு வணிகர்கள், சேவை ஏற்றுமதியாளர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்தும். இதன் மூலம் தொழில் செய்வதை எளிதாக்கி, வெளிப்படைத்தன்மையை அதிகரித்து, வரி செலுத்துவோருக்கு உகந்த ஜிஎஸ்டி கட்டமைப்பை உருவாக்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160401&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PD

(Explainer ID: 160470) आगंतुक पटल : 55
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , हिन्दी , Bengali , Telugu , Kannada , Malayalam