Infrastructure
மெட்ரோ ரயில்: நிலையான நகர்ப்புற வளர்ச்சி, நிதி மீள்தன்மைக்கான வினையூக்கி
Posted On:
15 MAR 2026 1:13PM
இந்தியாவில் நகர்ப்புறப் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தவும், சாலை நெரிசல்களைக் குறைக்கவும் மெட்ரோ ரயில் கட்டமைப்பு நாடு தழுவிய அளவில் அதிவேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் செயல்பாட்டில் இருந்து வரும் மெட்ரோ ரயில் கட்டமைப்பின் ஒட்டுமொத்த நீளம் 2014-ம் ஆண்டில் 248 கிலோமீட்டரில் இருந்து, 2025-ம் ஆண்டில் 1,095 கிலோமீட்டராக அதிகரித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதே காலகட்டத்தில் மெட்ரோ இரயில் வசதி உள்ள நகரங்களின் எண்ணிக்கை 5-ல் இருந்து 26 ஆக அதிகரித்துள்ளது. இந்த அபரிமிதமான உள்கட்டமைப்பு விரிவாக்கத்திற்கு நிதியுதவி அளிக்கும் வகையில், மெட்ரோ ரயில் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு 2013-14 நிதியாண்டில் ரூ.5,798 கோடியில் இருந்து, 2025-26 நிதியாண்டில் ரூ.29,550 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தகைய அதிகரிக்கப்பட்ட மூலதனச் செலவினங்கள் மூலம் இந்தியா தற்பொழுது உலகிலேயே மூன்றாவது மிகப்பெரிய மெட்ரோ ரயில் கட்டமைப்பைக் கொண்ட நாடாக உருவெடுத்துள்ளது.
இந்தியாவின் மெட்ரோ ரயில் கட்டமைப்பு வளர்ச்சிப் பயணமானது அதிநவீன தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பாகத் திகழ்கிறது. டெல்லி-மீரட் பிராந்திய விரைவுப் போக்குவரத்து வழித்தடத்தில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் இயக்கப்படும் நமோ பாரத் அதிவேக ரயில்கள், கொல்கத்தாவில் ஹூக்ளி ஆற்றுக்கு அடியில் அமைக்கப்பட்ட நாட்டின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ சுரங்கப்பாதை, கேரளாவின் கொச்சியில் மின்சார-ஹைப்ரிட் படகுகள் மூலம் தீவுகளை இணைக்கும் அதிநவீன நீர் மெட்ரோ போன்ற திட்டங்கள் இதற்குச் சான்றுகளாகும். மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட ரயில்பெட்டிக் கதவுகள், தானியங்கி ரயில் மேற்பார்வை தொழில்நுட்பம், ஓட்டுநர் இல்லாத ரயில்கள், ஒரே அட்டையின் மூலம் நாடு முழுவதும் பயணிக்கும் தேசியப் பொதுப் பயண அட்டை போன்ற நவீன டிஜிட்டல் வசதிகள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு 2026 ஜனவரி மாதத்தில் வெளியிட்ட சிறப்பு ஆய்வறிக்கையின்படி, மெட்ரோ ரயில் வசதிகள் நகர்ப்புற மக்களின் பயணச் செலவுகளைக் குறைப்பதுடன் குடும்பங்களின் நிதிச் சூழலை மேம்படுத்தவும் உதவுகிறது. மெட்ரோ ரயில் போக்குவரத்து உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களின் மாதாந்திரப் பயணச் செலவுகள் குறைவதால், அவர்கள் தங்களின் வீட்டுக் கடன்களுக்கான மாதாந்திரத் தவணைகளைத் தாமதமின்றி செலுத்துவதுடன், முன்கூட்டியே கடன்களை அடைக்க முடிகிறது. இந்த நேர்மறையான கடன் மறுசெலுத்தும் நடவடிக்கை டெல்லியில் 4.42 சதவீதமும், பெங்களூருவில் 2.4 சதவீதமும் தாமதமாகக் கடன் செலுத்துவதைக் குறைத்துள்ளது. மேலும், இப்பகுதிகளில் புதிய இருசக்கர வாகனங்கள், கார்களின் பதிவு குறைந்துள்ளதால் சுற்றுச்சூழல் மாசுபாடு தடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொது நிதிச் சூழலின் நிலைத்தன்மை அதிகரித்து தற்சார்பு பொருளாதாரம் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157813&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 160392)
आगंतुक पटल : 3
Provide suggestions / comments