Social Welfare
தடுப்பூசியின் மகத்துவத்தைப் போற்றுதல்
Posted On:
17 MAR 2026 12:24PM
நமது இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தி, பல்வேறு தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதில் தடுப்பூசிகள் முக்கியப் பங்காற்றுகின்றன. இந்தியாவின் பொது சுகாதார மேம்பாட்டில் தடுப்பூசித் திட்டங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நாடு தழுவிய அளவில் மேற்கொள்ளப்பட்ட தீவிர நடவடிக்கைகளின் மூலம் அம்மை, போலியோ, மகப்பேறுகாலத் தொற்று போன்ற கொடிய நோய்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளன. கொவிட்-19 காலத்தில் உலகின் மருந்தகமாகத் திகழ்ந்த இந்தியாவில், (உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் உட்பட) 200 கோடிக்கும் அதிகமானோருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, 2026-ம் ஆண்டில் பெண்களைக் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் நோக்கில் 14 வயது சிறுமிகளுக்கான எச்பிவி தடுப்பூசி செலுத்தும் தேசிய அளவிலான இயக்கம், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட புதிய டிடி தடுப்பூசி அறிமுகம் ஆகிய தடுப்பூசித் திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகத்தால் 1985-ம் ஆண்டு தொடங்கப்பட்ட உலகளாவிய தடுப்பூசித் திட்டம், கர்ப்பிணிப் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பல்வேறு நோய்களுக்கு எதிராக இலவசத் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இத்திட்டம் ஆண்டுதோறும் சுமார் 2.9 கோடி கர்ப்பிணிப் பெண்களையும், 2.54 கோடி பச்சிளம் குழந்தைகளையும் சென்றடைகிறது. குளிரூட்டப்பட்ட சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட வலுவான உள்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரப் பணியாளர்களின் அர்ப்பணிப்பு, டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றின் காரணமாக நாட்டில் தடுப்பூசி வரம்புக்குள் கொண்டுவரப்பட்டவர்களின் எண்ணிக்கை 2015-ல் 62 சதவீதத்தில் இருந்து, 2026 ஜனவரி நிலவரப்படி 98.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேபோல், ஒருமுறை கூட தடுப்பூசி செலுத்தப்படாத குழந்தைகளின் எண்ணிக்கையானது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் 2023-ல் 0.11 சதவீதத்தில் இருந்து, 2024-ம் ஆண்டில் 0.06 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஐநா சபை பாராட்டுத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் 1995-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தீவிர போலியோ சொட்டு மருந்து இயக்கத்தின் கீழ், முதன்முதலாக வாய்வழி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்ட தினத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 16 அன்று தேசிய தடுப்பூசி தினம் கொண்டாடப்படுகிறது. இந்தத் தொடர் நடவடிக்கைகளின் பயனாக, 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தின் ஹவுராவில் பதிவான கடைசி போலியோ பாதிப்பிற்குப் பிறகு இந்தியாவிலிருந்து போலியோ நோய் முற்றிலும் ஒழிக்கப்பட்டது. தற்பொழுது இத்திட்டத்தின் கீழ் காசநோய், தொண்டை அடைப்பான் (டிப்தீரியா), கக்குவான் இருமல், ரணஜன்னி, மஞ்சள் காமாலை, ரோட்டா வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட 12 வகையான கொடிய நோய்களுக்கு எதிராக இலவசத் தடுப்பூசிகள் தேசிய அளவில் வழங்கப்பட்டு வருகின்றன. தடுப்பூசித் திட்டங்களை மின்னணு முறையில் கண்காணிக்க ஏதுவாக 'யு-வின்' என்ற டிஜிட்டல் தளம் 2024 அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. 12 மொழிகளில் சேவைகள் வழங்கும் இத்தளத்தில் ஒரு மொபைல் எண் மூலம் பத்து நபர்கள் வரை தங்களின் தடுப்பூசிப் பதிவுகளைப் பராமரிக்க முடியும். விடுபட்ட கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகளைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்துவதற்காக இந்திரதனுஷ் இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்தகைய விரிவான உள்கட்டமைப்பு வசதிகள், ஊட்டச்சத்து மேம்பாடு, சுகாதாரப் பராமரிப்பு ஆகிய நடவடிக்கைகள் தாய் சேய் இறப்பு விகிதத்தைக் குறைத்து, ஆரோக்கியமான எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதன் மூலம், நாட்டின் சமூகப் பொருளாதார வளர்ச்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157836&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 160391)
आगंतुक पटल : 8
Provide suggestions / comments