Infrastructure
இந்தியாவின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதிச்சூழல்
Posted On:
18 MAR 2026 11:50AM
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, சமூக மேம்பாட்டிற்கு உள்கட்டமைப்பு முக்கியத் தூணாக விளங்கி வருகிறது. இத்துறைக்கு போதுமான நிதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக அரசின் முதலீடுகளுடன் தனியார் மூலதனத்தையும் ஒருங்கிணைக்கும் பல்வேறு நிதிசார் உத்திகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. நாட்டின் பொது மூலதனச் செலவினம் 2014-15 நிதியாண்டில் ரூ.2 லட்சம் கோடியில் இருந்து, 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் மதிப்பீட்டில் ரூ.12.2 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இந்த அதிகப்படியான மூலதனச் செலவு தனியார் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், சிமெண்ட், இரும்பு போன்ற தொழில்துறைகள் சார்ந்த தேவையை அதிகரித்து நாடு தழுவிய அளவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கும் உந்துசக்தியாக அமைந்துள்ளது. பிராந்திய வளர்ச்சியைப் பரவலாக்கும் நோக்கில் 5 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களை புதிய பொருளாதார வளர்ச்சி மையங்களாக மேம்படுத்த பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக நகர்ப்புற பொருளாதார மண்டலங்கள் என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகளில் ஒரு மண்டலத்திற்கு ரூ.5,000 கோடி வீதம் நிதி ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன் சந்தை சீர்திருத்தங்கள் மூலம் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நீண்டகால நிதி ஆதாரங்களுக்கான நடைமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. இதில் பெண்கள், மூத்த குடிமக்கள், ஆயுதப்படை வீரர்கள் போன்ற சில்லறை முதலீட்டாளர்களுக்குப் பொதுக் கடன் பத்திர வெளியீடுகளில் சிறப்பு ஊக்கத்தொகைகள் வழங்கப்படுவதோடு, சுற்றுச்சூழல், சமூக ஆளுமை சார்ந்த பத்திரங்களை வெளியிடுவதற்கான நெறிமுறைகளும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. உள்கட்டமைப்பு நிதிச் சூழலில் தேசிய முதலீடு, உள்கட்டமைப்பு நிதியம் (என்ஐஐஎஃப்), உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கான தேசிய வங்கி (நாப்ஃபிட்) ஆகிய நிறுவனங்கள் உலகளாவிய, உள்நாட்டு மூலதனத்தை ஈர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. 2015-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட என்ஐஐஎஃப் நிறுவனம் தற்போது 4.9 பில்லியன் டாலர் மதிப்பிலான சொத்துகளை நிர்வகித்து வருகிறது. அதேபோல் 2021-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நாப்ஃபிட் வளர்ச்சி நிதி நிறுவனம், 2025 டிசம்பர் நிலவரப்படி உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகச் சுமார் ரூ.3.03 லட்சம் கோடி அளவிலான நிதிக்கு அனுமதி அளித்து, ரூ.1.09 லட்சம் கோடி தொகையை வழங்கியுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பை வலுப்படுத்த இந்திய ரயில்வே நிதி நிறுவனம் உள்நாட்டு, சர்வதேச சந்தைகளிலிருந்து கூடுதல் நிதி ஆதாரங்களைத் திரட்டி 75 சதவீதத்திற்கும் அதிகமான ரயில் பெட்டிகள், என்ஜின்களின் தயாரிப்பிற்கு நிதியுதவி அளித்துள்ளது. முழுமையடைந்த திட்டங்களிலிருந்து மூலதனத்தை மறுசுழற்சி செய்ய ஏதுவாக உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் (இன்விட்ஸ்), ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகள் (ரீட்ஸ்) போன்ற சந்தை உத்திகள் மூலம் ரூ.1.5 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தால் அமைக்கப்பட்ட உள்கட்டமைப்பு அறக்கட்டளை மூலம் இதுவரை ரூ.46,000 கோடிக்கும் அதிகமான நிதி திரட்டப்பட்டுள்ளது. மேலும், தனியார் முதலீட்டாளர்களின் இடர்ப்பாடுகளைக் குறைத்து, பெரிய திட்டங்களை உரிய காலத்தில் முடிப்பதை உறுதி செய்வதற்காக 'உள்கட்டமைப்பு அபாயகால உத்தரவாத நிதி' நடப்பு பட்ஜெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்தகைய மேம்படுத்தப்பட்ட நிதிப் புத்தாக்க நடைமுறைகள் தற்சார்பு மிக்க, உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் நீண்டகாலப் பயணத்திற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157846&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 160386)
आगंतुक पटल : 49
Provide suggestions / comments