Farmer's Welfare
பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் 22-வது தவணைத்தொகையை பிரதமர் திரு நரேந்திர மோடி விடுவித்தார்
Posted On:
19 MAR 2026 11:08AM
விவசாயிகளின் வருமானப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் மத்திய அரசால் பிரதமரின் விவசாயிகள் கௌரவ நிதித் திட்டம் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் 22-வது தவணையாக ரூ.18,640 கோடி நிதியை அசாம் மாநிலம் குவஹாத்தியில் மார்ச் 13, 2026 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி விடுவித்தார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள சுமார் 9.32 கோடி தகுதியுள்ள விவசாயக் குடும்பங்கள் நேரடி நிதி உதவியைப் பெற்றுள்ளன. இந்தத் தவணையில் பலன் பெற்றவர்களில் 2.15 கோடிக்கும் அதிகமானோர் பெண் விவசாயிகள் என்பது இத்திட்டத்தின் உள்ளடக்கிய வளர்ச்சியைப் பறைசாற்றுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டது முதல் இதுவரை ரூ.4.27 லட்சம் கோடிக்கும் அதிகமான நிதி நேரடியாக விவசாயிகளின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதால், இது உலகிலேயே மிகப்பெரிய நேரடிப் பலன் பரிமாற்றத் திட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தும் மத்திய அரசின் தொடர் அர்ப்பணிப்பின் அடையாளமாக, 2026-27 நிதியாண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்காக ரூ.60,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நிலப் பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குதல், வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைப்பு, மின்னணு சரிபார்ப்பு முறைகளைப் பின்பற்றுதல் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் இத்திட்டம் மிகவும் வெளிப்படையாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தகுதியான பயனாளிகள் தங்களின் கணக்குகளைப் புதுப்பிக்க ஏதுவாக ஓடிபி, கைரேகை அடிப்படையிலான சரிபார்ப்பு முறைகளுடன் தற்பொழுது முக அங்கீகார சரிபார்ப்பு வசதியும் மொபைல் செயலியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளின் கேள்விகளுக்கு 11 பிராந்திய மொழிகளில் 24 மணி நேரமும் உடனுக்குடன் பதிலளிக்கும் வகையில் 'கிசான் இ-மித்ரா' என்ற செயற்கை நுண்ணறிவு சாட்பாட் வசதியும் இதில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், கிராமப்புறங்களில் சேவைகளை எளிதாக்கத் தொடக்க வேளாண் கடன் சங்கங்களும் இத்திட்டத்தின் கீழ் பொதுச் சேவை மையங்களாக இணைக்கப்பட்டு வருகின்றன. நிதி ஆயோக், சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை நடத்திய ஆய்வுகளின்படி, இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நேரடி நிதி உதவி விவசாயிகளின் குறுகிய காலக் கடன் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவுகிறது. இத்தகைய உறுதியான வருமானம் கிடைப்பதால் விவசாயிகள் தங்களின் சாகுபடிப் பணிகளுக்குத் தேவையான தரமான விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் போன்றவற்றைத் தடையின்றி வாங்க முடிகிறது. சுமார் 92 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இந்த நிதியை விவசாய நடவடிக்கைகளுக்கே பயன்படுத்துவதாகத் தெரிவித்துள்ளனர். பயிர் இழப்பு ஏற்படும் காலங்களிலும், அவசர கால சூழலிலும் இந்த நேரடி நிதி உதவி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருப்பதோடு, கந்துவட்டிக் கொடுமைகளிலிருந்து அவர்களைப் பாதுகாத்து ஒட்டுமொத்த கிராமப்புறப் பொருளாதார வளர்ச்சிக்கும் உந்துசக்தியாகத் திகழ்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157878&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 160384)
आगंतुक पटल : 10
Provide suggestions / comments