Economy
இந்தியாவின் புள்ளியியல், தரவு அமைப்பில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான மாற்றம்
Posted On:
20 MAR 2026 11:55AM
இந்தியாவின் பொதுத் தரவு அமைப்புகளில் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நிர்வாகத் திறனை மேம்படுத்தவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நிதி ஆயோக், மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் ஆகியவற்றின் கீழ் செயல்படும் அதிகாரப்பூர்வ புள்ளியியல் தளங்கள், பொதுமக்களின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் தற்பொழுது மேம்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக 2024-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட இ-சாங்கிகி புள்ளியியல் தளத்தில் மாதிரி சூழல் நெறிமுறை சர்வர் கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வசதி மூலம் பயனர்கள் பெரிய கோப்புகளைப் பதிவிறக்கம் செய்யாமலேயே தங்களின் தனிப்பட்ட செயற்கை நுண்ணறிவுச் செயலிகள் வழியாக அதிகாரப்பூர்வ புள்ளியியல் தரவுகளை நேரடியாக ஆய்வு செய்ய முடியும். இத்தளத்தில், இயல்பான மொழி வழி கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள தேடல் வசதி பயனர்களின் தேடல் அனுபவத்தை எளிதாக்கியுள்ளது. அமைச்சகத்தின் இணையதளத்தை மேலும் எளிமையாக்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான சாட்பாட் வசதி, பயனர்களின் கேள்விகளுக்குப் பொருத்தமான பதில்களையும் தொடர்புடைய இணைப்புகளையும் உடனடியாக வழங்குகிறது. இதேபோல் 2022-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட தேசிய தரவு, பகுப்பாய்வு தளம் தற்பொழுது 52 அமைச்சகங்கள், 31 துறைகளின் தரவுகளை உள்ளடக்கி மேம்பட்ட பகுப்பாய்வுடன் கூடிய 2.0 பதிப்பாக மாற்றப்பட உள்ளது. புள்ளியியல் வகைப்பாடுகளை எளிதாக்குவதற்காகக் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வகைப்பாட்டுக் கருவி, தேசிய தொழில்முறை வகைப்பாட்டுக் குறியீடுகளைத் துல்லியமாகப் பரிந்துரைத்துத் தரவு சேகரிப்பில் மனித உழைப்பைக் குறைக்கிறது. மேலும், ஏப்ரல் 2025 முதல் வெளியிடப்படும் ஆவணங்களை எளிதாகத் தேட உதவும் வகையில் மாஸ்பி ஸ்டேட்ஸ்-டாக் ஏஐ உதவித் தளம் உருவாக்கப்பட்டுள்ளதோடு, பழைய ஆவணங்களிலிருந்து தரவுகளைப் பிரித்தெடுக்கும் சிறப்புத் தொழில்நுட்பக் கருவியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத் துறையில் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைப் பாதுகாப்பாக ஆய்வு செய்ய ஏதுவாக ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தின்ன் கீழ் மருத்துவப் புள்ளியியல் தரவு ஆய்வுத் தளம் 2026 பிப்ரவரியில் தொடங்கப்பட்டது. இதனுடன் இணைந்து பாதுகாப்பான, நம்பகமான மருத்துவத் தீர்வுகளை உருவாக்க இந்தியாவிற்கான சுகாதார செயற்கை நுண்ணறிவுக் கொள்கை என்ற விரிவான கட்டமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் விவசாயிகளின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், இடர்ப்பாடுகளைக் குறைக்கவும் பன்மொழி வசதி கொண்ட பாரத்-விஸ்தார் என்ற புதிய ஒருங்கிணைந்த ஆலோசனை முறை 2026-27 பட்ஜெட்டில் முன்மொழியப்பட்டுள்ளது. இவற்றுடன் 11 மொழிகளில் விவசாயிகளின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் கிசான் இ-மித்ரா தளம், பயிர்களுக்கு பாதிப்புகள் விளைவிக்கும் பூச்சிகளைக் கண்டறியும் தேசிய பூச்சி கண்காணிப்பு அமைப்பு ஆகியவை வேளாண் துறையை வலுப்படுத்துகின்றன. இந்திய புள்ளியியல் முறையை நவீனமயமாக்குவதில் தரவு கண்டுபிடிப்பு ஆய்வகம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இவ்வாய்வகம் பல்வேறு கல்வி நிறுவனங்களுடன் 17 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. மேலும், 22 இந்திய மொழிகளில் சேவை வழங்கும் பாரத்ஜென் என்ற நாட்டின் முதல் அரசு நிதியுதவி பெற்ற பன்மொழி மாதிரி 2025 ஜூன் மாதத்தில் தொடங்கப்பட்டு பொதுப் பயன்பாடுகளுக்காக மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே, இந்திய தனித்துவ அடையாள ஆணையம் 2026 பிப்ரவரி மாதத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய கைரேகை, முக அங்கீகார சரிபார்ப்புத் தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இப்புதிய தளத்தின் மூலம் ஆதார் தரவுகளின் துல்லியத்தன்மை அதிகரிக்கப்பட்டுள்ளதோடு, ஆதார் தொலைநோக்கு 2032 திட்டத்தின் கீழ் எதிர்கால டிஜிட்டல் தேவைகளுக்காக குவாண்டம் கம்ப்யூட்டிங், பிளாக்செயின் போன்ற நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=157886&ModuleId=3®=3&lang=1
***
PD/RJ
(Explainer ID: 160383)
आगंतुक पटल : 8
Provide suggestions / comments