Economy
இந்தியாவின் ஐடிஐ-களை மாற்றி அமைக்கும் பிரதமரின் சேது திட்டம்
Posted On:
03 OCT 2026 3:22PM
பிரதமரின் சேது திட்டம், தொழில்துறை சார்ந்த பயிற்சி மூலம் அரசின் 1000 தொழிற்பயிற்சி நிறுவனங்களை (ஐடிஐ - ITI) மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. உத்திசார் முதலீட்டுத் திட்டங்கள், முக்கிய தொழில்துறை பங்கேற்பு ஆகியவை மூலம் தொழில்துறையினரின் பங்கேற்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய நவீன காலப் படிப்புகளை அறிமுகப்படுத்துகிறது. சர்வதேச ஒத்துழைப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தேசிய அறிவியல் - தொழில்துறை நிறுவனங்களில் மேம்பட்ட திறன் மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கின்றன. இந்த முயற்சி, மாநில வழிகாட்டுதல் குழுக்கள், தொழில்துறை பங்கேற்பு ஆகியவை மூலம் மாநிலங்களுக்கு செயலாக்கத்தை விரிவுபடுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் ஓராண்டு காலத்தில், 850 ஐடிஐ-கள் அடையாளம் காணப்பட்டு, 14 ஐடிஐ தொகுப்புகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்ட திறன் ஆய்வகங்கள், மாணவர்களுக்குத் தொழிற்கல்வி சார்ந்த அனுபவத்தை இவை மேலும் விரிவுபடுத்துகின்றன.

திறமையான பணியாளர்களுக்காக ஐடிஐ-களை மாற்றி அமைத்தல் :
இந்தியாவின் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ-கள்) நாட்டின் தொழிற்பயிற்சி சூழலமைப்பில் ஒரு முக்கிய அங்கமாகத் திகழ்கின்றன. அவை இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, தொழில்துறைக்கான நடைமுறைத் திறன்களை வழங்குகின்றன. பணியாளர் தேவைகள் மாறிவரும் நிலையில், தொழிற்பயிற்சியின் தரம் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்தப் பின்னணியில், மேம்படுத்தப்பட்ட ஐடிஐ நிறுவனங்கள் மூலம் வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திட்டமான பிரதமரின் சேது திட்டம் 2025 அக்டோபர் 4 அன்று தொடங்கப்பட்டது . இத்திட்டம், அரசு தொழிற்பயிற்சி நிறுவனங்களை நவீன, தொழில்துறை சார்ந்த பயிற்சி நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம், தொழிற்பயிற்சியின் ஒட்டுமொத்த தரத்தை மேம்படுத்துகிறது. இத்திட்டத்திற்கான மொத்த நிதி ஒதுக்கீடு ரூ.60,000 கோடியாகும். இதில் மத்திய அரசிடமிருந்து ரூ.30,000 கோடியும், மாநில அரசுகளிடமிருந்து ரூ.20,000 கோடியும், தொழில்துறையிடமிருந்து ரூ.10,000 கோடியும் நிதி அளிக்கப்படுகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்டு 2026 அக்டோபர் 4 அன்று ஓராண்டு நிறைவடைகிறது.
திறன் வாய்ந்த பணியாளர்களுக்கான அடித்தளத்தை அமைத்தல்:
தொழில்துறைக்குத் தேவையான நடைமுறைத் திறன்களுடன் இளைஞர்களைத் தயார்படுத்துவதற்காக, தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ) பயிற்சி அளிக்கின்றன. கைவினைக்கலைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ், அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மூலம் பொறியியல், பொறியியல் அல்லாத தொழில்களில் பயிற்சி வழங்கப்படுகிறது. தொழிலைப் பொறுத்து, படிப்பின் கால அளவு ஆறு மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை மாறுபடும். மத்திய திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் உள்ள பயிற்சி தலைமை இயக்குநரகம், தேசிய அளவில் தொழிற்பயிற்சியின் வளர்ச்சிக்கும் ஒருங்கிணைப்புக்கும் பொறுப்பு வகிக்கிறது. கொள்கைகள், விதிமுறைகள், தரநிலைகளை உருவாக்குதல், பாடத்திட்ட மேம்பாடு, இணைப்பு, பயிற்றுவிப்பாளர் பயிற்சி, தொழில் தேர்வு ஆகியவை இதன் செயல்பாடுகளில் அடங்கும். தொழிற்பயிற்சி நிறுவனங்கள் மாநில அரசுகள், யூனியன் பிரதேச நிர்வாகங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன .
நாட்டில் உள்ள அரசு, தனியார் ஐடிஐ-களின் மொத்த எண்ணிக்கை 2014-ல் 9,776-ஆக இருந்தது. இது 2026-ல் 42% அதிகரித்து 13,888-ஆக உயர்ந்துள்ளது. மேலும், நாடு முழுவதும் உள்ள ஐடிஐ-களில் மாணவர் சேர்க்கை 2014-15-ம் கல்வியாண்டில் 9.51 லட்சமாக இருந்தது. 2025-26 கல்வியாண்டில் இது 54% அதிகரித்து 14.70 லட்சமாக உயர்ந்துள்ளது.
விரிவடைந்து வரும் இந்த கட்டமைப்பு, தொழிற்பயிற்சியை வலுப்படுத்துவதற்கும், அதனைத் திறன் தேவைகளுக்கு ஏற்ப சீரமைப்பதற்கும் ஒரு பரந்த நிறுவன அடித்தளத்தை வழங்குகிறது. தொழிற்கல்வியின் தரத்தை வலுப்படுத்துவதற்காக, பிரதமரின் சேது திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160303&ModuleId=3®=3&lang=1
***
TV/PLM/RJ
(Explainer ID: 160337)
आगंतुक पटल : 5
Provide suggestions / comments