Rural Prosperity

தூய்மை இந்தியா இயக்கம்: தூய்மை தொடர்பான சமூக, நடத்தை மாற்றத்திற்கான தகவல் தொடர்பு நடவடிக்கைகள்

Posted On: 02 OCT 2026 2:12PM

தூய்மை இந்தியா இயக்கம், தூய்மைக்கான உள்கட்டமைப்புகளை உருவாக்குவதோடு, நீடித்த தூய்மை நடைமுறைகள், சமூக விதிமுறைகளை உருவாக்குதல் ஆகியவற்றில் நடத்தை மாற்றத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. சமூக, நடத்தை மாற்றத்திற்கான தகவல் தொடர்பு அணுகுமுறை மூலம் தகவல்களைப் பரப்புவதைக் கடந்து கலந்துரையாடல், பங்கேற்பு, கூட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. மகாத்மா காந்தியின் தூய்மை, தனிமனித ஆரோக்கியம் குறித்த கொள்கைகள் இவ்வியக்கத்தின் தகவல் தொடர்பு நடவடிக்கைகளுக்கு அடிப்படையாக அமைந்துள்ளன. தூய்மைத் தூதர்கள், சமூக அமைப்புகள், பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு மூலம் தனிநபர்களின் தூய்மை நடைமுறைகள் சமூகத்தின் கூட்டு நடைமுறைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

  

2014-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி தொடங்கப்பட்ட தூய்மை இந்தியா இயக்கம், கிராமப்புற தூய்மை இந்தியா இயக்கம், நகர்ப்புற தூய்மைக்கான தூய்மை இந்தியா இயக்கம் என இரு முக்கியப் பிரிவுகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஊரகப் பகுதிகளில் கழிவறை வசதி, பயன்பாடு, கழிவு மேலாண்மை ஆகியவற்றுக்கும், நகர்ப்புறப் பகுதிகளில் தூய்மை, கழிவு மேலாண்மை, பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. கழிவறை கட்டுமானம், கழிவு மேலாண்மை ஆகியவற்றுடன், பாதுகாப்பான தூய்மை நடைமுறைகளை மக்கள் தொடர்ந்து கடைப்பிடிப்பதை உறுதி செய்வதும் இவ்வியக்கத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது.

  

சமூக, பழக்க வழக்க மாற்றத்திற்கான தகவல் தொடர்பு நடவடிக்கைகளில் தனிநபர்களுடன் தொடர்பை ஏற்படுத்துதல், சமூக ஒருங்கிணைப்பு, ஊடகங்கள், சமூக ஊடகங்கள், விழிப்புணர்வு நடவடிக்கைகள், உத்திசார் கூட்டாண்மைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. தூய்மைத் தூதர்கள் வீடுகளுக்கே சென்று மக்களுடன் கலந்துரையாடி, பாதுகாப்பான தூய்மை நடைமுறைகளைப் பின்பற்ற ஊக்குவிக்கின்றனர். கண்காணிப்புக் குழுக்கள் மூலம் கிராமங்களில் தொடர்ந்து கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, திறந்தவெளியில் இயற்கை உபாதை கழிப்பதைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. கிராம சபைகள், சமூகக் கூட்டங்கள், உள்ளூர் அமைப்புகள் மூலம் மக்களின் பங்கேற்பும் ஊக்குவிக்கப்படுகிறது.

  

சமூக ஊடகங்கள், வானொலி, தொலைக்காட்சி, அச்சு ஊடகங்கள், இணையதளங்கள் போன்ற பல்வேறு தகவல் தொடர்பு ஊடகங்களும் தூய்மை தொடர்பான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பயன்படுத்தப்படுகின்றன. நகர்ப்புற தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் டிஜிட்டல் கருவிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 3,300-க்கும் மேற்பட்ட நகரங்களில் 67,000-க்கும் அதிகமான பொது கழிவறைகள் கூகுள் வரைபடத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. ஸ்வச்சதா செயலி (Swachhata App) மூலம், பொதுமக்கள் தூய்மை தொடர்பான புகார்களைப் பதிவு செய்து தீர்வு பெறும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பெண்கள், குழந்தைகள் தூய்மை தொடர்பான நடத்தை மாற்றத்தில் முக்கியப் பங்காற்றி வருகின்றனர். தூய்மையான கழிவறை வசதிகள் பெண்களின் பாதுகாப்பு, வசதி, சுயமரியாதையை மேம்படுத்தியுள்ளன. ஜல் சக்தி அமைச்சகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 93 சதவீத பெண்கள் இயற்கை உபாதைக்கு வெளியில் செல்லும் அச்சம் இல்லாமல் வாழ்வதாக தெரிவித்துள்ளனர். பள்ளிகள் மூலம் குழந்தைகளிடம் தூய்மை குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் குடும்பங்களிலும், சமூகங்களிலும் தூய்மை குறித்த செய்திகளை எடுத்துச் செல்லும் மாற்றத்திற்கான முகவர்களாக உருவாக்கப்படுகின்றனர்.

தூய்மை நடைமுறைகளை தொடர்ந்து நிலைநிறுத்தும் வகையில் அங்கீகாரம், ஊக்குவிப்பு, கண்காணிப்பு ஆகியவற்றுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திறந்தவெளியில் இயற்கை உபாதை கழித்தல் இல்லாத நிலை போன்ற நடைமுறைகள் மூலம் தூய்மைச் செயல்பாடுகளுக்கான அளவுகோல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நகரங்களின் தூய்மை நிலையை மதிப்பிடும் தூய்மைக் கணக்கெடுப்பு, பொதுமக்களின் பங்கேற்பை அதிகரித்து உள்ளாட்சி அமைப்புகளின் தூய்மை நடவடிக்கைகளை மேம்படுத்தும் முக்கிய கருவியாக விளங்குகிறது.

  

தகவல் தொடர்பில் ஆரம்பித்து, மக்களின் பங்கேற்பு, கூட்டு நடவடிக்கை, நீடித்த சமூகப் பொறுப்பு என்ற நிலைக்கு தூய்மை இந்தியா இயக்கத்தின் தகவல் தொடர்பு நடவடிக்கைகள் படிப்படியாக முன்னேறியுள்ளன. தூய்மையை ஒரு பிரச்சார நடவடிக்கையாக மட்டும் கருதாமல், அன்றாட வாழ்வின் அங்கமாக மாற்றுவதே இதன் நீண்டகால நோக்கமாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160287&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PD/RJ

(Explainer ID: 160336) आगंतुक पटल : 9
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Telugu , Kannada , Malayalam