Technology

இந்தியாவின் வளர்ந்து வரும் சூப்பர் கம்ப்யூட்டிங் சூழலமைப்பு

Posted On: 04 OCT 2026 5:53PM

1990-களின் தொடக்கத்தில் பரம் 8000 (PARAM 8000) மூலம் தொடங்கிய இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டிங் பயணம், 2015-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம் எனப்படும் என்எஸ்எம் மூலம் நாடு முழுவதும் விரிந்த தொழில்நுட்பச் சூழலாக வளர்ந்துள்ளது. 2026 செப்டம்பர் நிலவரப்படி, இந்தியாவில் 40 சூப்பர் கம்ப்யூட்டர்கள் 68 பெட்டாஃப்ளாப்ஸ் திறனுடன் செயல்படுகின்றன. உயர் செயல்திறன் கணினியியல் வசதியை இது விரிவுபடுத்துவதுடன், இந்தியாவிலேயே சேவையகங்கள், மென்பொருள், குளிரூட்டும் தொழில்நுட்பம், கணினி கட்டமைப்புத் தொழில்நுட்பங்களையும் உருவாக்கியுள்ளது.

சூப்பர் கம்ப்யூட்டர்கள் மிகப் பெரிய அளவிலான தரவுகளை மிக வேகமாகச் செயலாக்கி, ஒரே நேரத்தில் பல கணக்கீடுகளைச் செய்கின்றன. இதனால் பயிர் விளைச்சலைக் கணித்தல், நோய் பரவலைக் கண்காணித்தல், மருந்து கண்டுபிடிப்பை விரைவுபடுத்துதல், ஆற்றுவெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளைக் கணித்தல், வானிலை ஆய்வு, விண்வெளி, சுகாதாரம், பொறியியல் துறைகளில் சிக்கலான கணினி மாதிரிகளை இயக்குதல் போன்றவை சாத்தியமாகின்றன. அறிவியல் கண்டுபிடிப்புகளையும் புதிய தொழில்நுட்பங்களையும் விரைவுபடுத்துவதில் இவை முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்தியாவின் வளர்ந்து வரும் மின்னணு, டிஜிட்டல் சூழல் மேம்பட்ட கணினி வசதிகளுக்கான தேவையை அதிகரித்துள்ளது. உலகில் உருவாகும் தரவுகளில் இந்தியாவின் பங்கு சுமார் 20% ஆகும். செயற்கை நுண்ணறிவு, வானிலை முன்னறிவிப்பு, விண்வெளி ஆய்வு போன்றவற்றுக்கு அதிக கணினித் திறன் தேவைப்படுகிறது. எனவே, ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு சூப்பர் கம்ப்யூட்டிங் வசதியை அரசு விரிவுபடுத்தி வருகிறது. இது தற்சார்பு இந்தியா என்ற இலக்கையும் வலுப்படுத்துகிறது.

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கமான என்எஸ்எம், 2015 ஏப்ரலில் சுமார் ₹4,500 கோடி செலவில் தொடங்கப்பட்டது. அறிவியல், தொழில்நுட்பத் துறை (DST), மின்னணுவியல் அமைச்சகம் (MeitY) ஆகியவை இதை இணைந்து வழிநடத்துகின்றன. புனேயில் உள்ள மேம்பட்ட கணினி உருவாக்க மையமான சி-டாக்-கும் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும் இத்திட்டத்தைச் செயல்படுத்துகின்றன.

இந்தத் திட்டத்தின் நோக்கம் சூப்பர் கம்ப்யூட்டிங் துறையில் இந்தியாவை தன்னிறைவு பெறச் செய்வதும், ஆராய்ச்சி, அறிவியல், தொழில்நுட்பம், சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண சூப்பர் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துவதும் ஆகும். கணினி அமைப்புகளை இணைத்தல், உள்நாட்டிலேயே தயாரித்தல், வடிவமைப்பு, உற்பத்திக்கு ஆதரவு அளித்தல் ஆகிய மூன்று கட்டங்களின் மூலம் உள்நாட்டு திறன் வளர்க்கப்படுகிறது.

1991-ல் சி-டாக் உருவாக்கிய பரம் 8000, 1 ஜிகாஃப்ளாப்ஸ் வேகத்துடன் இந்தியாவின் உள்நாட்டு சூப்பர் கம்ப்யூட்டிங் பயணத்திற்கு அடித்தளம் அமைத்தது. பின்னர் பரம் யுவா போன்ற சக்திவாய்ந்த அமைப்புகள் உருவாக்கப்பட்டன. அவை வானிலை முன்னறிவிப்பு போன்ற கணக்கீடுகளில் பயன்படுத்தப்பட்டன.

ஒரு சூப்பர் கம்ப்யூட்டரின் செயல்திறன் ஃப்ளாப்ஸ் (FLOPS) எனப்படும் அளவால் கணக்கிடப்படுகிறது. ஒரு டெராஃப்ளாப்ஸ் என்பது ஒரு வினாடிக்கு ஒரு டிரில்லியன் கணக்கீடுகள். ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் என்பது ஒரு வினாடிக்கு ஒரு குவாட்ரில்லியன் கணக்கீடுகள். 2026-ம் ஆண்டில் உலகின் அதிவேக சூப்பர் கம்ப்யூட்டர் சுமார் 2.19 எக்ஸாஃப்ளாப்ஸ் திறனுடன், ஒரு வினாடிக்கு சுமார் 2.19 குவிண்டில்லியன் கணக்கீடுகளைச் செய்யக்கூடியதாக உள்ளது.

2026 செப்டம்பர் வரை இந்தியாவில் செயல்படும் 40 சூப்பர் கம்ப்யூட்டர்களில் 13 கணினிகள் 1 பெட்டாஃப்ளாப்ஸ்-க்கும் அதிகமான திறன் கொண்டவை. 12 கணினிகள் 500 டெராஃப்ளாப்ஸ் முதல் 1 பெட்டாஃப்ளாப்ஸ் வரையிலும், 15 கணினிகள் 500 டெராஃப்ளாப்ஸுக்கும் குறைவாகவும் உள்ளன. இவை இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டு நாடு முழுவதும் நிறுவப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் 50 சூப்பர் கம்ப்யூட்டர்களை 123 பெட்டாஃப்ளாப்ஸ்-க்கும் அதிகமான மொத்தத் திறனுடன் நிறுவ தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கம் திட்டமிட்டுள்ளது.

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்கத்தின் கீழ் பல முக்கிய பயன்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. மரபணு, மருந்து கண்டுபிடிப்பு அமைப்பு மூலம் மூலக்கூறுகளை ஆய்வு செய்து மருந்துகளை கண்டுபிடிக்கவும் பரிசோதிக்கவும் முடிகிறது. பெருந்தொற்றுக் காலத்தில் இதயப் பாதிப்பு போன்ற பக்கவிளைவுகளைக் கணிப்பதற்கும் இது பயன்படுத்தப்பட்டது.

காற்று மாசு, கனமழை, மாசுபாட்டை எதிர்கொள்ளவது ஆகியவற்றில் இது நகரங்களுக்கு உதவுகிறது. நில அதிர்வு படமெடுப்பு அமைப்பானது நிலத்தடியில் உள்ள அமைப்புகளை வரைபடமாக்குவதுடன், எண்ணெய், எரிவாயு ஆய்வுக்கும் உதவுகிறது. செயற்கைக்கோள் தகவல்களையும் கணினி மாதிரிகளையும் இணைத்து காட்டுத்தீ எவ்வாறு பரவும் என்பதையும் இது கணிக்கிறது.

இவை சுகாதாரம், சுற்றுச்சூழல், எரிசக்தி, மேம்பட்ட அறிவியல் துறைகளில் ஆராய்ச்சிக்கும் ஆதாரங்களின் அடிப்படையிலான முடிவெடுப்புக்கும் உதவுகின்றன.

தேசிய சூப்பர் கம்ப்யூட்டிங் இயக்க வசதிகளைப் பயன்படுத்தி 400-க்கும் அதிகமான நிறுவனங்களைச் சேர்ந்த 16,000-க்கும் அதிகமான ஆராய்ச்சியாளர்கள், அதில் 2,900-க்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பயனடைந்துள்ளனர். 2026 செப்டம்பர் வரை 1.5 கோடிக்கும் அதிகமான கணினிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 1,990-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளுக்கு பங்களிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சூப்பர் கம்ப்யூட்டிங் சூழல் இனி மேலும் விரிவடைய உள்ளது. அதிக வேகம், குறைந்த மின்சாரப் பயன்பாடு, அதிக நம்பகத்தன்மை கொண்ட அமைப்புகள் உருவாக்கப்படும். இந்தியாவின் வன்பொருள், மென்பொருள் திறன்கள் வலுப்படுத்தப்பட்டு, அதிகமான நிபுணர்கள் உருவாக்கப்படுவார்கள்.

இந்நிலையில் இஎஸ்டிஐசி (ESTIC-2026) வளர்ந்து வரும் அறிவியல் தொழில்நுட்ப புத்தக மாநாடு 2026 அக்டோபர் 27 முதல் 29 வரை புதுதில்லி பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கம், சூப்பர் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட வளர்ந்து வரும் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து, வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவது இம்மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.ப

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressNoteDetails.aspx?NoteId=160306&ModuleId=3&reg=3&lang=1

***

TV/PLM/PD

(Explainer ID: 160312) आगंतुक पटल : 10
Provide suggestions / comments
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Kannada